சோபாவில் ஓர் ஆசிரியர்

in கட்டுரை

நேற்று எனக்கு வங்கியில் ஒரு வேலை இருந்தது. எழுத்துத் தொழில் போக வங்கியிலும் வேலை பார்த்துக் கொழிக்கிறேன் என்று சொல்லவில்லை. ஒரு பட்டுவாடா நிமித்தமாகக் கடந்த நான்கு மாதங்களுக்கு பாஸ்புக் என்ட்ரி போட வேண்டியிருந்தது. அது நொடிநேர வேலை என்பதால் காத்திருக்கச் சொன்னார்கள். சிவனே என்று ஒரு சோபாவில் புதைந்தேன்.

என்னைத் தவிர இன்னொரு ஆள் அந்த சோபாவில் உட்கார்ந்து ஏதோ படிவத்தை நிரப்பிக்கொண்டிருந்தார். நமக்குத்தான் இந்தப் படிவ அலர்ஜியெல்லாம்; உலகம் படிவங்களை நேசிக்கவே செய்கிறது என்று பத்தி எழுத்தாளனுக்கே உரிய கவித்துவ மென்கெத்துடன் நினைத்துக்கொண்டேன். அப்போதுதான் கவனித்தேன். அந்த ஆள் என் கல்லூரி ஆங்கில ஆசிரியர் போல் இருந்தார். உற்றுப் பார்த்தால் அவரேதான். வி.சி. கல்யாணசுந்தரம். நாங்கள் செல்லமாக அல்லாமல் சுருக்கமாக வி.சி.கே. என்று குறிப்பிடுவோம். இப்போது அந்தப் பெயரில் கட்சியெல்லாம் வந்துவிட்டது.

தீவிரமாக எழுதிக்கொண்டிருந்தவரைக் குறுக்கிட்டு “சார்?” என்றேன். அவர் திரும்பிப் பார்த்தார். நினைவுகள் என்னைக் கூப்பிட்டன. தலை, தொப்பை, முதுமை தவிர அப்படியே இருந்தார். கல்லூரிக் காலத்தில் தேவையில்லாத ஒரு மிடுக்கும் முறுக்கு மீசையும் அவருக்கு ஏதோ ராணுவத் தொடர்பு இருந்ததாகப் பலரை நினைக்கவைத்தன. ஆனால் அவருக்கு ராணுவப் பிராப்தி எதுவும் இல்லாதது மட்டுமல்ல, அவர் ஒரு துப்பாக்கியை ஜேம்ஸ் பாண்ட் படத்தில்கூடப் பார்த்திருப்பாரா என்பது சந்தேகமே. அந்த மீசை இப்போது வெள்ளைப்பட்டிருந்தது. காலம் அவரது மயிரைப் பிடுங்கிவிட்டிருந்தது. ஓய்வு பெற்றுவிட்டபடியால் டி-சர்ட் அணியத் தொடங்கியிருந்தார். அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. “ஹவ் ஆர் யூ சார்?” என்றேன்.

இங்கே சற்றுப் பின்னணி. இந்த வி.சி.கே. சுமாராகப் பாடம் நடத்துவார். ஆனால் அந்தப் பவிசுக்கே மிகவும் கறாரானவர். கோபம் இல்லாமல் கறாரா? இல்லை. இவர் கோபத்தில் பொருட்களைத் தூக்கி எறியக்கூடியவர். மனிதர் எதையுமே கோபத்தில் ஒரு ஓரமாக எடுத்துவைத்து நான் பார்த்ததில்லை. ஒருமுறை – ஒரே ஒரு முறை – அவருடைய வகுப்பிற்கு நான் தாமதமாகச் சென்றுவிட்டேன். இரு வெறுங்கைகளை ஆட்டி ஆட்டித் தனியாகப் பாடம் நடத்திக்கொண்டிருந்தவர், அறை வாசலில் நான் நிழலாக ஆடியதும் என் பக்கம் திரும்பி முறைத்தார். தன்னுடைய கைக்கடிகாரத்தைப் பார்த்தார், பிறகு மீண்டும் என்னுடைய தரிசனம்.

“ஹவ் ஆர் யூ சார்?” என்றேன்.

“ஓப்பன் யுவர் பேக்” என்றார்.

நான் புரியாமல் பையைத் திறந்தேன்.

“கிவ் மீ யுவர் சப்ஜெக்ட் நோட்ஸ்.”

“விச் சப்ஜெக்ட் சார்?”

“எனிதிங், எனிதிங்” என்றார் தோளைக் குலுக்கி. ‘உன் நோட்டு, உன் ராஜ்யம்’ என்று சொல்வது போலிருந்தது. “ஜஸ்ட் கிவ் மீ சம் நோட்புக். ஜென்ரலி ஐ ப்ரிஃபர் சாஃப்ட் பைண்டிங்.”

பெரிய பைக்குள் குடாய்ந்து ஆங்கில நோட்டுப் புத்தகத்தையே எடுத்து அவரிடம் கொடுத்தேன். அவர் அதைத் தொடர் ஓட்டக்காரர் போல் பிடுங்கிக் காட்டுத்தனமாய் விசிறியடித்தார். நோட்டு எட்டடி உயரத்திற்கு எகிறி சுவரில் அறைந்து அஜய் அவஸ்தி என்ற மும்பை இறக்குமதி மேல் விழுந்தது.

“டு யுவர் சீட் பிளகாட்*!” என்று கத்தினார்.

எல்லோர் பார்வையும் என் மீது பதிந்திருக்க, நான் மௌனமாக அந்தப் பையனிடம் எனது நோட்டுப் புத்தகத்தை உதிரி பாகங்களாக வாங்கிக்கொண்டு என் இருக்கைக்குச் சென்றேன்.

இதனால்தான் வி.சி.கே.யிடம் யாரும் பேசியதேயில்லை. அவரிடம் பேசிய ஒரே மாணவன் அநேகமாக நான்தான். அதுவும் “ஹவ் ஆர் யூ சார்?” மட்டும்தான். அதுகூட அன்றைக்கு ஒருநாள் மட்டும்தான். அதன் பின்னர் நான் அவர் வகுப்புகளுக்குத் தாமதமாகப் போகவில்லை.

இப்போது அந்தச் சம்பவம் அவருக்கு ஞாபகம் வந்துவிட்டிருக்கலாம். ஏனென்றால் பார்வையில் பழைய வெறுப்பைப் பார்க்க முடிந்தது. ‘நீயெல்லாம் இன்னும் இருக்கிறாயா? ஏன்?’ என்கிற ரீதியில் பார்த்தார். அவரின் கண்வழிக் கேள்விக்கு பதிலளிக்க வாய் பரபரத்தது. இருந்தாலும் எழுத்தறிவித்தவன் இறைவன் அல்லவா? இலக்கிய எழுத்து பற்றிய இவருடைய அறிவிப்புகள் பலவும் எனக்கு இப்போதும் கட்டுரைகளுக்குப் பயன்படுகின்றன. சிதைந்த நோட்டு உள்பட எல்லாம் பத்திரமாக உள்ளன.

அவரிடமிருந்து இன்னும் பதில் வராததால் “டெல் மீ சார்” என்று ஊக்குவித்தேன்.

“யூ, ஐ டோன்ட் ரிமெம்பர் யுவர் நேம். ஐ நோ யூ வேர் எ ஸ்டூடன்ட். யூ கேம் லேட் ஒன் டே.”

“யெஸ் சார், வெரி மச் சார்.”

“வாட் டு யூ டூ நவ்?”

“மீ சார்? ஐ அம் எ ரைட்டர் சார். எஸ்டாப்ளிஷ்டு ரைட்டர்.”

“யூ ரைட் ஃபுல் டைம்?”

“யெஸ் சார்.”

“தட்ஸ் வொண்டர்ஃபுல்! இன் இங்லிஷ் ஆர் டமில்?”

“டமில் சார்.”

“வெரி குட். நல்லா எழுது! ஏதாவது புக்ஸ் போட்டிருக்கியா?”

“நானூறு புக்ஸுக்கு மேல வந்திருக்கு சார்.”

“வாவ்! தட்ஸ்…”

“யூ வான்ட் டு சீ ஒன் சாம்ப்பிள் சார்?”

நான் மனைவி-குழந்தை புகைப்படம் போல் – ஆனால் அதற்கு பதிலாக – எப்போதும் என்னிடம் வைத்திருக்கும் ‘நம்மை வாசிக்கும் புத்தகங்கள்’ கட்டுரையை வங்கி ஆவணக் கோப்பிலிருந்து எடுத்துக் கொடுத்தேன். ஒரே சமயத்தில் எனது வாசிப்பறிவு, உலக சினிமா அறிவு, இளமைக் காலத்தை நினைவுகூரும் திறன், சமூகப் பார்வை, கவித்துவம், நெகிழ்ச்சி எல்லாவற்றையும் காட்டும் சிறப்பாகத் திட்டமிடப்பட்ட கட்டுரை அது.

வி.சி.கே. கண்ணாடியை எடுத்து அணிந்துகொண்டார். படிக்கத் தொடங்கினார். அதன்போதே முகம் கடுகடுத்தது. முப்பதாண்டுகளுக்கு முன்பு பார்த்துப் பழகிய முகபாவம். பிறகு நான் கொஞ்சமும் எதிர்பாராத விதமாகக் கட்டுரையைப் பாதியாகக் கிழித்து வங்கி முழுவதும் விசிறியடித்தார்.

“எஃபர்ட்லஸ் ரைட்டிங்!” என்று அலறினார்.

கத்திவிட்டு நெஞ்சைப் பிடித்துக்கொண்டார். எல்லோர் பார்வையும் என் மீது பதிந்திருக்க, நான் மௌனமாகக் கட்டுரையைப் பொறுக்கிக்கொண்டு வெளியேறினேன், கொஞ்சம் வேகமாகவே.

* பிளகாட் – blackguard எனப் பொருள்படும் அந்தக் காலத்து வசை

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar