ரேமன்

in சிறுகதை, புனைவு

டோக்கியோவின் புறநகர்ப் பகுதியொன்றில் ஒரு பெரிய மருத்துவமனையைக் கட்டுவதற்கான தொடக்கப் பணிகள் ஒரு மது அருந்தகத்தில் வெற்றிகரமாக நடந்தேறின. நான் மேலாண்மை இயக்குநராக இருந்த அமயா கார்ப்பரேஷன் கட்டுமான வேலையைக் குத்தகைக்கு எடுத்திருந்தது. மாநகராட்சி அனுமதி அளித்ததைக் கொண்டாடவும் மேற்கொண்டு திட்டமிடவும்தான் அந்தச் சந்திப்பு. என்னுடன் மது அருந்தியவர்கள் தலைவர் ஹிரோ தகாஹாஷியும் துணைத் தலைவர் ரியோ கிக்குனோவும். அங்கிருந்து, அதுவும் மனமின்றி, வெளியே வந்த கடைசி வாடிக்கையாளர்கள் நாங்கள்தான். எல்லோருக்கும் மட்டுமிஞ்சிய பசி கணக்குத் தொடங்கியிருந்தது. அனுமதிக்கப்பட்டால் கிக்குனோ-சான் சாக்கேயை உணவாகக் கருதி வயிற்றை நிரப்பிக்கொள்ளத் துச்சமாக இருந்தார். ஆனால் மற்ற இருவரான எங்களுக்கு வயிறு திடமாக நிரம்பத் தேவைப்பட்டது.

மாணவர்களும் காதலர்களுமே அதிகம் வருகை தரும் அந்தக் குடிமனை தவிர அந்த இடம் பொட்டலாக இருந்தது. எங்கு பார்த்தாலும் இருட்டு. எங்குமே பார்க்காதிருந்தால் எப்படி இருக்குமோ அப்படியோர் இருட்டு. நாங்கள் மூவரும் கைப்பெட்டிகளுடன் செய்வதறியாமல் நின்றிருந்தோம். பிறகு நடந்தே சென்று ஏதேனும் உணவகத்தைக் கண்டுபிடித்துச் சாப்பிட முடிவானது. சில்லிடும் எதிர்க்காற்றைத் தள்ளிக்கொண்டு வேகமாக நடக்கத் தொடங்கினோம். கிக்குனோ-சானுக்கு போதை தலைக்கதிகமாக ஏறியிருந்தது. அவருக்குக் குடி தாங்காது. ஆனால் அவர் சொல் பேச்சு கேட்பவர் அல்லர். எதிர்க்காற்று வலுக்கும்போதெல்லாம் அவர் காற்றைத் திட்டியவாறு அதன் மேல் ஜூடோ குத்துகளைப் பொழிந்துகொண்டிருந்தார். பத்து நிமிடங்களில் பொட்டலைக் கடந்து ஊர் எல்லை போன்ற ஓரிடத்தை அடைந்தோம். உணவகம் என்ன, மரங்கள்கூட இல்லை. தன்னந்தனியாக ஒரு சாலை இருந்தது. நிலவொளியில் பளபளத்த அதன் மேல் விளக்குகள் ஆடும் சில வண்டிகள் ஊர்ந்தன.

தகாஹாஷி-சான் சாலையோரத்தில் சிதிலமடைந்த பெயர்ப் பலகை ஒன்றை அவரது சீன “டார்ச்” ஒளியில் கண்டுபிடித்தார். ‘டொயாமா ஒட்டல்’ என்றது பலகை. அதில் நீண்டிருந்த அம்புக்குறி காட்டிய திசையில் மிக மங்கலாக விளக்கொளிகள் தெரிந்தன. ஆனால் விளக்குகள் மட்டுமே விழித்திருக்குமோ என்று தோன்றியது. பிறகு காக்கையின் எச்சம் போல் என் மேல் ஏதோ பட்டுத் தெறித்தது – மென்மையான பனித் தூறல்.

“இது ஆகிற வேலை இல்லை நண்பர்களே. வீட்டுக்குப் போய் சாப்பிட்டுக்கொள்வோம்” என்றேன் ரென் ஷிமிஸு என்கிற நான்.

“எனக்கு இப்போது சாப்பிட்டே ஆக வேண்டும்” என்றார் கிக்குனோ-சான்.

“கிக்குனோ, உனக்கு போதை ஏறிவிட்டது. இங்கே உணவகம் எதுவும் இல்லை. மெல்ல ஷின்ஜுக்கு வரை நடந்து பேருந்தைப் பிடித்து வீட்டுக்குப் போய்விடுவோம்” என்றார் தகாஹாஷி-சான்.

“நான் டொயாமாவில் ரேமன் சாப்பிடாமல் நகர மாட்டேன்” என்று அப்படியே உட்கார்ந்துவிட்டார் கிக்குனோ-சான். நான் அவரது கைப்பெட்டியை இன்னொரு கையில் எடுத்துக்கொண்டேன். கிக்குனோ-சான் ஒரு ரேமன் பிடிவாதி.

தகாஹாஷி-சான் பெருமூச்சு விட்டார். “சரி, போய்ப் பார்ப்போம். கிக்குனோ, எழுந்திரு. நடுத்தெருவில் சோறு கிடைக்காது.”

கிக்குனோ-சான் எங்கள் கைத்தாங்கலில் எழுந்தார். எடையற்ற பெட்டியை ரோஷமாக என்னிடமிருந்து பிடுங்கிக்கொண்டார். ஓட்டலின் பெயர்ப் பலகையைவிடவாவது உணவு புதிதாக இருக்குமா என்று புலம்பினார் தகாஹாஷி-சான்.

உண்மையில் டொயாமா ஓட்டல் எங்களுக்குப் புதிதல்ல. டோக்கியோவிற்கு ரயில் வருவதற்கு முன்பே எங்கள் பதின்ம வயதுகளில் பயணங்களின்போது இங்கே உணவருந்துவோம். ரேமனுக்கும் புதுமையான பல சுஷி வகைகளுக்கும் பேர்போனது டொயாமா ஓட்டல். என்ன இது, இவ்வளவு சீக்கிரம் தீர்ந்துவிட்டதே என்று பாத்திரத்தைக் கோபிக்கவைக்கும் சுவை டொயாமாவின் ரேமனுடையது. 1890களில் நகரமயமாக்கமும் இடப்பெயர்வும் அந்தப் பகுதியின் மதிப்பைக் குறைத்தன. ஷின்ஜுக்குவின் விளிம்பில் குடியிருந்தவர்கள் டோக்கியோவிற்கு உட்புறம் பெயர்ந்தார்கள். அங்கு ஆலைகளுக்கு அடித்தளங்கள் இடப்பட்டன. ஓட்டல் நசிந்து யாகுஸாக்களும் கெட்ட ஆவிகளும் புழங்கும் இடமானது. அதற்கெல்லாம் முன்பே உலகம் அந்த இடத்தை மறந்துவிட்டது. ஆனால் டொயாமா ஓட்டல் ரேமனின் சுவை மட்டும் மறக்கவில்லை. டோக்கியோவில் எவ்வளவு நல்ல ரேமன் கிடைத்தாலும் அதைச் சுவைக்கும்போது ‘இவ்வளவு மோசமாக இல்லாத சுவை டொயாமா ஓட்டலின் ரேமனுடையது’ என்று நினைத்துக்கொள்வேன். இவ்வளவிற்கும் நான் பாதி நாள் சாப்பிடுவது ரேமன்தான்.

அந்தப் பெயர்ப் பலகையைப் பார்க்கும் வரை ஓட்டல் மூடப்பட்டு அரை நூற்றாண்டுக்குச் சற்றுக் குறைவாக ஆகியிருக்கும் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அப்படி இல்லை போலும். நாங்கள் அதன் புகழைப் பாடிக்கொண்டு சிறிது தூரம் நடந்த பின்பு திடீரென ஒரு பிரம்மாண்டமான கட்டிடம் எங்கள் எதிரில் இருந்தது. நான் பார்த்த டொயாமா ஓட்டலாக அது தெரியவில்லை. குறைந்தது 100-150 ஆண்டுகள் பழமையான மேற்கத்திய பாணிக் கட்டிடம் அது. எட்டு மாடிகளுக்குத் தேவையான உயரத்தை ஐந்தே மாடிகள் காவு கொண்டிருந்தன. அண்ணாந்த பார்வைக்குச் சில அறைகளில் மங்கிய விளக்கொளி தெரிந்தது. அகன்ற பெயர்ப் பலகையொன்று நாங்கள் நெருங்கியதும் அறிவித்தது –

டொயாமா ஓட்டல்

உணவு மற்றும் அறைகள்

‘கிடைக்கும்’ என்ற கடைசிச் சொல்லைக் காணவில்லை.

நாங்கள் பத்திருபது படிகள் ஏறி ஓட்டலுக்குள் நுழைந்தோம். உள்ளே அரைகுறை ஒளியில் ஈரத்தின் வாடை பரவியிருந்தது. சுவர்களின் வண்ணம், சட்டம் மங்கலாக மினுக்க ஆங்காங்கே தொங்கிய ஓவியங்கள், கனமான மரக் கதவுகள் எல்லாம் இடத்தின் முக்கியத்துவத்தைப் பாடின. இம்மாதிரிக் கட்டிடங்கள். சில மனிதர்களைவிட முக்கியமானவை. வரவேற்பு மேஜைக்குப் பின்னே முகத்தில் சுத்தமாக ரோமமே இல்லாமல் அமர்ந்திருந்த ஓர் ஒடிசல் மனிதன் எழுந்து வந்து எங்களை வணங்கி வரவேற்றான். ஓட்டலின் மேனேஜரான எய்ஜி அரிவா என்று அறிமுகப்படுத்திக்கொண்டான். மேஜைக்கு மேல் ஒரு தொங்குவிளக்கு எரிந்தது. அங்கு அவனைத் தவிர வேறு யாரும் இருந்தாற்போல் தெரியவில்லை.

“ரேமன் இருக்கிறதா?” என்றார் தகாஹாஷி-சான்.

“உடனே கிடைத்தால் நல்லது,” கிக்குனோ-சான் குறுக்கிட்டார்.

“மன்னித்துக்கொள்ளுங்கள் ஐயா. ரேமனுக்குப் பஞ்சமில்லை, ஆனால் இந்த நேரத்தில் கிடைக்காது” என்றான் எய்ஜி.

“சாதாரண ரேமன் எவ்வளவு?” என்று நான் கேட்டேன். அதுதான் விரைவில் தயாராகும்.

“12 சென்.”

“நாங்கள் மூன்று பேர் சாப்பிட நூறு சென் தருகிறோம். சுஷிக்கு இன்னும் நூறு. உனக்கு ஐம்பது.” போதை பேசியது.

ஒரு கணம் திகைத்த எய்ஜி, “ஆகட்டும் ஐயா” என்று எங்கள் மூவரையும் தலா மூன்று முறை வணங்கினான். தகாஹாஷி-சான் நீட்டிய நோட்டுகளை வாங்கி மேஜைக்கு அடியில் இருந்த டிராயரில் போட்டுப் பூட்டிவிட்டு சாவியைப் பைக்குள் நழுவ விட்டான். திரும்பிப் பார்த்து “கெய்ஜி-குன்! ஆறு ரேமன், ஆறு சுஷி! உடனே!” என்று யாரிடமோ கூவிச் சொன்னான். பிறகு ஓட்டலின் இருண்ட நடை ஒன்றில் சென்று மறைந்தான். கெய்ஜியும் எய்ஜியும் ஒரே ஆளாக இருக்கும் என்றார் கிக்குனோ-சான். இருந்தால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

அங்கிருந்த கெட்டியாகத் தூசு படிந்திருந்த நாற்காலிகளில் நாங்கள் அமர்ந்தோம். கிக்குனோ-சான் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொள்ள, மற்ற இருவரும் அதைப் பின்பற்றினோம். ரேமனும் சுஷியும் தயாராகி சாப்பிட்டு முடிக்க இரண்டு மணிநேரம் ஆகும். தகாஹாஷி-சான் சாப்பாட்டுக்குப் பின்னர் சாக்கே அருந்த விரும்பினார். நள்ளிரவு இருளில் நடந்து வீட்டிற்குச் செல்ல யாருக்கும் விருப்பமில்லை. எங்கள் வயிறுகள் எழுப்பிய பசியொலிகளைக் கேட்டபடி மௌனமாகப் புகைத்தோம். சற்று நேரத்தில் எய்ஜி மீண்டும் அத்துவானத்தைத் திரும்பிப் பார்த்து “கெய்ஜி-குன்!” என்று கத்திவிட்டுப் போய் ரேமனைக் கொண்டுவந்தான். சில நிமிடங்களில் சுஷிகள் வந்தன.

முதல் சுமார் ஐந்து நிமிடங்களுக்கு சாப்பாடு எங்கள் வாய்களைக் கட்டிப்போட்டது. எங்கள் மூவரின் மனைவிகளும் சமைப்பதில் நிபுணர்கள். ஆனால் இது – இந்தச் சுவை அமானுஷ்யத்திற்குச் சளைக்காதது. இந்த உணவைச் சாப்பிட ஆள் பற்றாக்குறை என்றால் ஜப்பானில் நிச்சயம் ரசனைகள் தரமிழந்துகொண்டிருந்தன. சாப்பிட்டபோது எய்ஜியை கிக்குனோ-சான் கேட்டார், “இந்த இடம் வெறிச்சோடிக் கிடக்கிறதே, எல்லோரும் எங்கே போனார்கள்? இங்கு யாரும் தங்குவதில்லையா?”

எய்ஜி பலமாகத் தலையாட்டி மறுத்தான். “யாகுஸாக்கள் வருவதுண்டு.”

“யாகுஸாக்களா?” நான் அதிர்ந்து கத்தினேன், “இப்போது யாராவது யாகுஸாக்கள் தங்கியிருக்கிறார்களா?”

“இல்லை” என்றதும்தான் சமாதானம் அடைந்தேன். பச்சைக்குத்தல்களையும் வன்முறையையும் நான் ஒருபோதும் விரும்பியதில்லை.

நாங்கள் இரவுக்கு அங்கேயே தங்கப்போவதை எய்ஜியிடம் சொன்னோம். “கேளிக்கை” ஏதாவது வேண்டுமா என்று கேட்டான். இந்த நேரத்திலும் இடத்திலும் எங்கிருந்து கேளிக்கையை ஏற்பாடு செய்வான் என்று எனக்குப் புரியவில்லை. இதற்கிடையில் “நாங்கள்தான் கேளிக்கை” என்று தகாஹாஷி-சான் சொல்லிச் சிரித்திருந்தார். எய்ஜி எங்கள் மூவருக்கும் சேர்த்து ஒரு பெரிய அறையைத் தயார் செய்வதாகச் சொல்லிவிட்டுச் சென்றான்.

சாப்பிட்டதும் அவ்வளவு நேரம் பதுங்கியிருந்த ராட்சதத் தூக்க மேகம் அப்படியே என் மேல் கவிந்தமுக்கத் தொடங்கியது. ஆனால் மற்ற இருவரும் குடியைத் தொடர விரும்பினார்கள். நான் அவர்களுக்கு என் சோர்வைத் தெரிவித்துவிட்டு என் அறையைத் தேடிச் சென்றேன். அது மூன்று படுக்கைகளால் பெரிய அறையாகத் தெரியவைக்கப்பட்ட ஒரு சிறிய கூடம். ஒவ்வொரு படுக்கைக்கும் தலைமாட்டில் ஒரு சிறு மேஜை, ஒரு மர நாற்காலி, ஒரு திரி விளக்கு மட்டும் இருந்தன. படுக்கைகள் மேல் கிமோனோக்களும் ஹவோரிகளும் வைக்கப்பட்டிருந்தன. எய்ஜி சுறுசுறுப்பான ஆள். நான் பழுப்பு கிமோனோ-ஹவோரிக்கு மாறிப் போர்வையில் புகுந்துகொண்டேன்…

எனக்குத் தூக்கம் திரளவில்லை. இருந்த சோர்வு உறக்கமாக முதிரவில்லை. மாடிப்படிகளில் ஏறிய சிரமம் தூக்கத்தைக் கலைத்திருக்கக்கூடும். சாப்பிட்ட ரேமன் வயிற்றுக்குள் நூறு புழுக்களாய் நெளியத் தொடங்கியது போல், அவை பின்னிக்கொண்டு சிக்கலாகிவிட்டது போல் சங்கடம். வெளியே விம்மி விம்மித் தணிந்துகொண்டிருந்தது காற்றின் ஓசை. அது ஒரு பெண்ணின் புலம்பலைப் போலவும் இருந்தது. இரவும் பனியும் இருளும் இருந்தால் பெண் நினைவு வராதா என்ன? எனக்குக் கொடி போல் ஒரு மனைவி இருக்கிறாள். அவளும் என்னுடன் இருந்திருக்கலாம். ஆனால் குழந்தைகளை எங்கே விடுவது? உறவினர்கள் யாரும் டோக்கியோவில் இல்லை. இருக்கும் பட்சத்திலும் நள்ளிரவில் தம் வீட்டுக் கதவுகள் தட்டப்பட்டுக் குழந்தைகள் ஒப்படைக்கப்படுவதை அவர்கள் விரும்புவார்களா என்பது சந்தேகமே. அதுவும் இந்தப் பனியில்.

விளக்கை எடுத்துக்கொண்டு அறைக் கதவைத் திறந்து பார்த்தேன். குளிர்ந்த காற்றோடு பனியின் பட்டாணிகள் முகத்தில் அடித்தன. எங்கள் அறை எதிரே மாட்டியிருந்த விளக்கு பலமாக ஆடியதோடு அதன் சிவப்புக் கூட்டுக்குள் சுடரும் ஆடிற்று. ஓர் ஓவியத்தில் போல் அது ஒளிர்ந்த சிறிய இடம் தவிர மற்ற எங்கும் அடர்ந்த இருள். நிச்சயமாகப் பனிப்புயல் ஒன்று தனது தொடக்கத்தில் இருந்தது. வலப்பக்கம் படிகளில் ஓட்டமான காலடிச் சத்தம் கேட்டுத் திரும்பினேன். எய்ஜி, கிமோனோவை மடித்துக் கட்டிய கோலத்தில் பூப்போட்ட குடையுடன் என்னை நோக்கி ஓடி வந்தான். சற்று உருகியிருந்த பனியில் வழுக்கி விழுந்தான். எழுந்துகொண்டே, “ஷிமிஸு-சானைக் கீழே கூப்பிடுகிறார்கள்!” என்றான். படுக்கையில் புரண்டு கிடப்பதற்கு நண்பர்களோடாவது இருக்கலாம் என முடிவெடுத்தேன். அறைக்குள் சென்று ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு கிளம்பினேன்.

எய்ஜி குறுகிய இருட்தாழ்வாரங்களினூடே என்னை மெல்ல அழைத்துச் சென்றான். தகாஹாஷி-சானும் கிக்குனோ-சானும் மிகப்பெரிய கூடம் ஒன்றில் குடித்துக்கொண்டிருந்தார்கள். அந்தக் கூடம் ஒரு மன்னனின் அவை அளவுக்கு விரிவாக இருந்தது. ஏதோ விழாவுக்குத் தயார் செய்தது போல் சுவர்களில் பதிந்திருந்த ஏராளமான தீப்பந்தங்கள் அழுக்கான பளிங்குத் தரையில் அடர்ந்த தூரிகைத் தீற்றல்களாகப் பிரதிபலித்தன. எஞ்சிய ஓட்டலின் சூழலுக்குப் பொருந்தாமல் கூடம் பிரகாசித்தது. வாசலை நோக்கிய சுவரைப் பல விலங்குகளின் தலைகள் அலங்கரித்தன. அவற்றுக்குக் கீழே கைக்கெட்டும் உயரத்தில் நான்கு ஜோடி கடானாக்கள் வைக்கப்பட்டிருந்தன. எல்லாமே ஓட்டலின் பழம்பெருமையைப் பேசும் விஷயங்கள். நான் பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். குளிருக்கு இடையிடையே தீப்பந்தங்களின் சிறு வெப்ப அலைகள் வீசின.

கிக்குனோ-சான் என் சத்தம் கேட்டுத் திரும்பி, ”ஷிமிஸு-சான்! எங்களோடு குடியுங்கள்!” என்று அலறினார். “இங்கே உட்காருங்கள்!” தகாஹாஷி-சானும் தன் அருகில் இருந்த காலி இடத்தைக் காட்டி அலறினார். அவர்கள் நான் வருவதற்கு முன்பே நிறைய குடித்துவிட்டது போல் தெரிந்தது. “திரும்பத் திரும்பக் குடிப்பதா?” என்று மறுத்தேன்.

“சரி! ஷிமிஸு-சான் குடிக்க விரும்பவில்லை” என்றார் கிக்குனோ-சான் என்னிடமே. “எனக்கும் தகாஹாஷிக்கும் இடையே நடக்கப்போகும் சண்டையைப் பாருங்கள்!”

நான் கிக்குனோ-சானிடம் கடிந்துகொண்டேன், “இதென்ன தேவையில்லாத இடத்தில் விபரீத விளையாட்டு! இன்னும் சற்று நேரத்தில் விடிந்துவிடும். அது வரை சிறிது தூங்கப் பாருங்கள் இருவரும்!”

“தூக்கமா?” தகாஹாஷி-சான் பெரிதாகச் சிரித்தார். கிக்குனோ-சானும் அவருடன் சேர்ந்து சிரித்தார். எய்ஜிகூடத் தலை குனிந்து ஓசையின்றிச் சிரித்தான்.

“இது தகாஹாஷி-சானுடைய யோசனையா?” என்றேன் அவரிடம். எய்ஜி எதையோ மிக அவசரமாகப் படிப்பது போல் மேலும் கீழும் தலையாட்டினான்.

“கடானா, கடானா” என்றார் கிக்குனோ சான்.

தகாஹாஷி-சான் பதிலளிக்காமல் தள்ளாடி எழுந்து நின்றார். குடித்துக்கொண்டே அவரை வேடிக்கை பார்த்த கிக்குனோ-சானை நோக்கிக் கை நீட்டினார்.

“கிக்குனோ, வா, தோற்றுப்போ!” என்று சொல்லிவிட்டு மீண்டும் பயங்கரமாகச் சிரித்தார். கிக்குனோ-சானும் சிரித்துக்கொண்டே எழுந்து நின்றார்.

“எய்ஜி, கத்தி கொண்டுவா” என்றார் தகாஹாஷி-சான்.

எய்ஜி ஓடிப்போய் இரு கடானாக்களைக் கொண்டுவந்து ஆளுக்கொன்று கொடுத்தான்.

“நிச்சயமாக நீ வரவில்லையா? உனக்கும் எய்ஜிக்கும்கூடக் கத்தி இருக்கிறது” என்றார் தகாஹாஷி-சான்.

எப்படியோ கடானாக்கள் பயன்படும் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. கிக்குனோ-சான் தனது கடானாவை இரு கைகளால் பிடித்துக்கொண்டு தயாராக நிற்க, நான் நான்கைந்து அடிகள் பின்னே நகர்ந்துகொண்டேன். தகாஹாஷி-சானும் கடானாவைப் பிடித்துத் தயாராக நின்றார். இப்படியே சில நிமிடங்கள் கழிந்தன. அவர்கள் போதையில் நிற்க முடியாமல் அசைந்துகொண்டிருந்தது ஏதோ நடனம் போலிருந்தது. எங்கிருந்தோ எனக்குத் தூக்கம் வந்தது. எய்ஜி காணாமல் போயிருந்ததை அப்போதுதான் கவனித்தேன்.

திடீரென்று இருவரும் “ஆ!” என்று கத்தியபடி ஒருவரை நோக்கி ஒருவர் ஓடி வந்தார்கள். ஆனால் அருகில் வந்ததும் நின்றுவிட்டார்கள். பிறகு பித்துப் பிடித்தது போல் சிரிக்கத் தொடங்கினார்கள். தகாஹாஷி-சான் சிரிப்பதை விடாமல் கடானாவைச் சுழற்றினார். கிக்குனோ-சானின் வலக்கை கடானாவோடு அறுந்து விழுந்தது. கிக்குனோ-சான் வலியில் அலறினார்.

“எய்ஜி! ஷிமிஸு! அதை எடுத்துக் கொடு!” என்று கத்தினார் கிக்குனோ-சான்.

நான் பீதியிலும் குழப்பத்திலும் கிக்குனோ-சானின் வலக்கையை எடுத்துக் கொடுத்தேன்.

“ஆ!” என்று கத்தினார் கிக்குனோ-சான். வலியா கோபமா என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

“அவன் கத்தியைக் கேட்கிறான்” என்ற தகாஹாஷி-சான், “இப்போது சிரியேன் கிக்குனோ” என்று சொல்லிவிட்டு சிரிப்பை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்.

கிக்குனோ-சானின் வலக்கை, ரத்தம் பீறிடாமல் முண்டமாக இருந்தது. நான் என்னுடைய கிமோனோவைக் கழற்றி அவர் வலது தோளில் சுற்ற முயன்றேன். கிக்குனோ-சான் திமிறி உறுமினார். நான் எய்ஜியின் பெயரைச் சொல்லிக் கத்தினேன். ஆனால் யாரும் வரவில்லை.

நான் தகாஹாஷி-சானிடம் கெஞ்சினேன். “தகாஹாஷி-சான், நிலைமை கைமீறிப் போய்விட்டது. நிறுத்திவிடுங்கள். கிக்குனோ-சானுக்கு உடனடி சிகிச்சை தேவை.”

“கிக்குனோ, உன் கையில் ரத்தமே வரவில்லை பார். மருத்துவரிடம் காட்டு” என்று தகாஹாஷி-சான் மீண்டும் பயங்கரமாகச் சிரித்தார்.

என்ன செய்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் நான் கிக்குனோ-சானிடம் அவரது கடானாவை எடுத்து நீட்டினேன். அதை வாங்கிய கிக்குனோ-சான், சடாரென்று பாய்ந்து தமது கடானாவை தகாஹாஷி-சானின் வயிற்றில் பிடி வரை செருகினார். தகாஹாஷி-சான் திகைத்துப்போனார். கிக்குனோ-சான் கடானாவை வேகமாக, ஆனால் தகாஹாஷி-சானின் வயிற்றுக்குக் குறுக்காக இழுத்தபடி வெளியே எடுத்தார். தகாஹாஷி-சானின் குடல் பாதி வெளியே விழுந்து தொங்கியது.

நான் அதைப் பார்த்து உறைந்து நிற்க, தகாஹாஷி-சான் கைகளால் வயிற்றைப் பொத்திக்கொண்டு கத்தினார், “ரேமன்! எனது ரேமன்! எல்லாம் போய்விட்டது.”

இவ்வளவு நேரம் அளவில்லாத பயத்தில் இருந்த எனக்கு ரேமனைப் பற்றிக் கேட்டதும் வெறியே வந்துவிட்டது. “தகாஹாஷி-சான்! உங்களுக்கென்ன பைத்தியமா? சாகப்போகிறீர்கள் இரண்டு பேரும்!” என்று சத்தமிட்டேன்.

இப்போது எனக்கு ஒரே ஒரு தேர்வுதான் இருந்தது. அங்கிருந்து தப்பியோடுவது. அப்போதுதான் தகாஹாஷி-சான் கடானாவை என் பக்கமாக வீசினார். “ஷிமிஸு, இந்தா உனக்குக் கொஞ்சம்.”

என் தலை தனியே தெறித்து விழுந்தது. உயிர் போகும் வலி. நான் அலறிக்கொண்டே என் தலையை நோக்கி ஓடினேன். ஆனால் சில அடி தூரத்தில் கிடந்த கிக்குனோ-சானின் வலக்கை என்னை முந்திக்கொண்டு என் தலைமுடியைப் பற்றிக்கொண்டது. நான் ஓடிப் போய் என் தலையைப் பிடித்து எழுத்தேன். கிக்குனோ-சானின் கை பிடித்த பிடியை விடவில்லை. “கிக்குனோ-சான், என் தலையை விடுங்கள்!” என்று கிக்குனோ-சானைப் பார்த்துக் கத்தினேன். ஆனால் அவரும் தகாஹாஷி-சானும் கட்டிப்பிடித்து ஒருவரையொருவர் தள்ள முயன்றுகொண்டிருந்தார்கள். எனக்கு மண்டைத் தோலை உரிப்பது போல் தலை முழுவதும் எரிந்தது. வலக்காலால் கிக்குனோ-சானின் மணிக்கட்டை மிதித்து அழுத்திக்கொண்டு என் தலையை விடுவித்தேன். அதை என் கழுத்தின் மேல் வைத்தேன். கையை எடுத்ததும் அது உருண்டு விழப் பார்த்தது. கழுத்தை நெரிப்பது போல் இரு கைகளாலும் தலையையும் கழுத்தையும் சேர்த்துப் பிடித்துக்கொண்டு வெளியே ஓடினேன்.

“கிக்குனோ, ஷிமிஸு ஓடுகிறான் பார்” என்று பின்னால் தகாஹாஷி-சானின் குரல் கேட்டது. கிக்குனோ-சான் பதிலளித்தாரா என்று தெரியவில்லை. நான் அதற்குள் வெளியே இருந்தேன்.

புயலெதுவும் இல்லாமல் மென்மையாகப் பனி பொழிந்துகொண்டிருந்தது. கிமோனோ அணியாததால் மேலுடலைக் குளிர் அறைந்தது. நான் தலைதெறிக்க ஓடினேன். தலையில் ஓங்கி அடித்தாற்போல் வலித்தது. கால்களும் எலும்புமுறிவு ஏற்பட்டது போல் வலித்தன. வழியில் மரம் செடி கொடிகள், விலங்குகள், பறவைகள், சாலைகள், வாகனங்கள், விடுதிகள், வீடுகள், ஓடைகள், பாலங்கள், வாராவதிகள், கோவில்கள், ஆலைகள் எல்லாம் தோன்றியும் மறைந்தும் கொண்டிருந்தன. யாரும் என்னைக் கவனித்ததாகத் தெரியவில்லை. உடலுக்குத் தொடர்பின்றிக் கால்கள் மட்டும் நிற்காமல் ஓடிக்கொண்டிருந்ததை உணர முடிந்தது.

எவ்வளவு நேரம் ஓடினேனோ தெரியவில்லை, ஒரு கட்டத்தில் என் வீடு புலப்பட்டது. வீட்டைச் சுற்றிப் பின்புறக் கதவை இடித்துத் தள்ளிக்கொண்டு உள்ளே விழுந்தேன். அதற்காகக் காத்திருந்தது போல் நினைவிழந்தேன்.

லேசான வலியை உணர்ந்தவாறு கண்விழித்தபோது எதிரே ஒரு நாற்காலியில் என் அழகிய மனைவி மயுமி என்னையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள். எனது இரண்டு வயதுக் குழந்தை அயுமி அவள் மடியில் உறங்கிக்கொண்டிருந்தாள். மயுமி என்னைப் பார்த்துப் புன்னகைக்க முயன்றாள். மாலை நேரம் போல் இருந்தது. நான் இன்னும் அரை மயக்கத்தில் இருந்தேன். உறக்கத்தில் நிறைய ரத்தம் இழந்திருப்பேன் என்று தோன்றியது. தலை பாறை போல் கனத்தது. அசைக்க முடியவில்லை.

“தகாஹாஷி…” என்று கேட்கலாமா வேண்டாமா என்ற பயத்துடனே கூரையைப் பார்த்துத் தொடங்கினேன்.

“தகாஹாஷி-சான், கிக்குனோ-சான், அயாமே-சான் எல்லோரும் இப்போதுதான் வந்துவிட்டுப் போனார்கள்” என்றாள் மயுமி.

நான் அதிர்ந்தேன். இது எப்படி சாத்தியம்?

“தகாஹாஷி-சான், கிக்குனோ-சான் – அவர்களுக்கு ஒன்றும் இல்லையா?”

“ஏன், அவர்களுக்கு என்ன? நன்றாகத்தானே இருந்தார்கள்?”

“எய்ஜி பற்றி ஏதாவது சொன்னார்களா?”

“இல்லையே, யார் அது?”

சரி, இதை இப்படியே மறந்துவிடுவோம் என்று தோன்றியது. மனதில் சிறிது நிம்மதி ஏற்பட்டது. ஒரு புதுத் தெம்பும் பிறப்பது போல் உணர்ந்தேன். எல்லோரும் முழுமையாக இருந்தால் ஒன்றும் பிரச்சினை இல்லை. கொலைக் குற்றத்திற்குத்தான் பயந்துகொண்டிருந்தேன்.

“உங்களுக்கு சூப் தயாரித்திருக்கிறேன். இருங்கள், கொண்டுவருகிறேன்” என்று குழந்தையைத் தூக்கிக்கொண்டு எழுந்த மயுமி, “மருத்துவர் உங்களுக்கு நிறைய ஓய்வு தேவை என்று சொல்லியிருக்கிறார். அசையாமல் படுத்திருங்கள், வந்துவிடுகிறேன்” என்றாள். என் அறையிலிருந்து வெளியேறினாள்.

நான் சிறிது நேரம் எல்லாவற்றையும் ஜீரணிக்க முயன்று கைவிட்டேன். அதற்கெல்லாம் நேரம் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன். என் ஆடைகள் தூய்மையாக இருந்ததைப் பார்த்தேன். கைகளும் கால்களும்கூடச் சுத்தம் செய்யப்பட்டிருந்தன.

சில நிமிடங்கள் கடந்திருக்கும். வெளியே, அநேகமாக வரவேற்பறை அருகே, சத்தம் கேட்டது. “நாங்கள் என்ன செய்கிறோம் என்பது எனக்குத் தெரியும்” என்றது ஓர் ஆண் குரல். என் மனைவியின் மெல்லிய குரல் அதற்கு வன்மையாக ஏதோ பதிலளித்தது. பூட்ஸ் சத்தங்கள் கேட்க, என் அறைக்குள் நான்கு காவல் துறை ஆட்களும் என் மனைவியும் நுழைந்தார்கள். நான் இதை எதிர்பார்க்கவேயில்லை. என் சந்தேகம் உறுதியானது. என்னைத் தூக்கில் போடப்போகிறார்கள்!

தலைமை அதிகாரி போல் இருந்தவர் கூறினார், “ஷிமிஸு-சான், தொந்தரவுக்கு மன்னிக்க வேண்டும். உங்கள் சக ஊழியர்கள் தகாஹாஷி-சானும் கிக்குனோ-சானும் ஊருக்கு வெளியே ஒரு பழைய கட்டிடத்தில் கொடூரமாகக் கொலையுண்டு அழுகிய நிலையில் கிடக்கிறார்கள். ரத்தக்கறை படிந்த ஒரு கிமோனோவையும் உங்கள் பெட்டியையும் அங்கு கண்டெடுத்தோம். இதை நீங்கள் விளக்க முடியுமா?”

மயுமி விம்மினாள். அயுமி அவள் காலைக் கட்டிக்கொண்டு என்னை ஓர் அந்நியனைப் பார்ப்பது போல் வேடிக்கை பார்த்தாள். நான் யோசித்தேன். இவையெல்லாம் உண்மையிலேயே நிகழ்ந்திருந்தால், கிக்குனோ-சானின் கடானாவில் என் கைரேகை பதிந்திருக்கும். நான் கிக்குனோ-சானின் கொலையாளி எனவும் கிக்குனோ-சான் தகாஹாஷி-சானின் கொலையாளி எனவும் காவல் துறை எளிதில் முடிவுகட்டிவிடும். கொலைசெய்யக் கத்தியை எடுத்துக் கொடுத்ததே கொலைக்கு உடந்தை என்றல்லவா கருதப்படும்? கத்தியைக் கொடுத்தபோது நான் அரை மயக்கநிலையில் இருந்தேன் என்ற வாதம் எப்படி எடுபடும்?

“யோசித்தது போதும் ஷிமிஸு-சான். நீங்கள் கண்விழிக்க ஒரு வாரமாகக் காத்திருந்தோம். இதற்கு மேல் எங்களுக்குப் பொறுமை இல்லை. நிறைய கேள்விகள் இருக்கின்றன” என்றார் காவல் துறை அதிகாரி.

நம்புகிறார்களோ இல்லையோ, உண்மையைச் சொல்வதே ஒரே தேர்வு என்று தோன்றியது. மற்றதை நான் வேண்டும் தெய்வங்கள் பார்த்துக்கொள்ளும். கைகளை ஊன்றிக்கொண்டு மெல்லப் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தேன். தலை மட்டும் தலையணையிலேயே கிடந்தது.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar