விஷ ஊசி

in சிறுகதை

தோக்வில் சாலை சோதனை நிலையத்தில் இருளடியில் இருந்த கார்களில் உளவாளி விஷ ஊசியின் காருக்கு முன்பு மூன்று கார்கள் இருந்தன. அப்படிப் பார்த்தால் விஷ ஊசியின் கார் அந்த வரிசையில் நான்காவது என்று ஆகிறது. அது பிரச்சினைதான். ஒரு ஏழெட்டு இருந்தால் வசதி என்று நினைத்தான் விஷ ஊசி. சிக்கினால் சாத்தியமான கைதும் அதையடுத்த சிறையடைப்பு, சித்திரவதை மற்றும் மரணமும் சில நிமிடங்களுக்குத் தள்ளிப்போடப்படும் என்றால் யாருக்குத்தான் இனிக்காது?

சரித்திரத்தின் இந்தக் கட்டத்தில் பாரீஸிலிருந்து வெளியேறுதல் நாஜிகளிடமிருந்து தப்புவதாகும். காரணம், பிரான்சின் உள்ளூர்ந்த கிராமப்புறங்களில் நாஜி நடமாட்டம் மருந்துக்கு மட்டுமே. பாரீஸ் போல நாஜிகள் மொய்க்கும் இடங்களாக அவை இல்லை. போராளிகளுக்குத் தெருக்களுக்கு வழி சொல்வது போன்ற உதவிகளை அஞ்சாமல் செய்யலாம். பாரீஸை விட்டு வெளியேற விஷ ஊசி ஜெர்மானியன் போல் வேடம் போட வேண்டும். அவனிடம் ஜெர்மானிய ஆடை அணிகலன்களும் கொஞ்சம் ஜெர்மன் மொழியும் (“டாங்கே!”) இருந்தன. ஜெர்மானியர்களுக்கு பிரான்சில் “வாசி லா வாத்யூர்” தவிர ஒன்றும் தெரியாது என்று அவனுக்குத் தெரியும். காவலர்கள் உடைபட்ட பிரெஞ்சில் ஏதாவது கேட்டால் தன்னுடைய ஜெர்மனில் “இயர் இஸ்ட் டி அவுட்டோ” என்று சொல்லிச் சமாளிக்கலாம்.

பிரச்சினை என்னவென்றால், விஷ ஊசி இது வரை என்றைக்குமே கிரகஸ்தன் அல்லன். குடும்ப சமேதனாக காரில் உட்கார்ந்திருந்தால் அவர்கள் விட்டுவிடக்கூடும். தனியாக மோட்டார் வாகனத்தில் பயணிக்கும் ஒவ்வொரு ஆளும் ஒற்றனாக இருக்கலாம் என்று உளவுத் தலைவர் ருடோல்ஃப் பீடர்கோப்ஃபிடமிருந்து நேரடி உத்தரவு வந்திருந்தது. ஓர் ஒற்றன் என்ற முறையில் இது அவனுக்குத் தெரிந்திருந்தது. ஒற்றன் என்றால் அச்சுக்கோத்தாற்போல் ஒற்றன் கிடையாது. அனுமதியற்ற விருப்ப ஓய்வு பெற்றவன் எனலாம். எனவே விஷ ஊசியை நான்கு நாடுகளின் உளவுத் துறைகளும் பின்னர் நான்கு நாடுகளினுடையக் கூட்டு உளவு அமைப்பு ஒன்றும் தேடிக்கொண்டிருந்தன என்று சொல்ல வேண்டும்.

விஷ ஊசிக்குப் பெண்கள் மீது கடந்தகாலப் பின்னணியுடன் கூடிய உளவியல் வெறுப்பேதும் இல்லை. அவன் பெண்களைப் பிடிக்கவே செய்தான். திருமணம் செய்துகொள்ளும் அளவிற்குப் பிடிக்காது, அவ்வளவுதான். சர்ச்சில் முத்தமெல்லாம் கொடுப்பார்கள் என்று அவனை உளவாளி என்று தெரியாத நண்பர்கள் ஆசை காட்டினாலும் ஒற்றனுக்குத் தேவையற்ற சுமை கூடாது என்பார் அவனைத் தன்னுடைய விசுவாச ஊழியன் என்று நம்பிக்கொண்டிருந்த ஜெர்மன் உளவுத் துறை வட்டச் செயலாளர் (சாவு) எமில் கோட்ஃப்ரீட். “எய்ன் இண்டெலிஜென், நிஹ்ட் பேகேஜென்.”

இப்படித்தான் விஷ ஊசி தனிக்கட்டையாகப் பயணிக்க வந்தது. அத்துடன் அவனுக்கு முன்பு இன்னும் ஒரு கார் பாக்கி இருந்தது. காத்திருக்கும் அநேகமான முப்பது நொடிகளில் எந்தப் பெண்ணையாவது சந்தித்து அவளது உள்ளம் கவர்ந்து பெற்றோரைச் சம்மதிக்கவைத்து சர்ச்சில் முத்தம் கொடுத்துத் திருமணம் செய்துகொண்டு வதவத என்று குழந்தைகளும் பெற்றுக்கொண்டு அத்தனை பேரையும் சட்டென்று காரில் ஏற்றிக் குடும்பஸ்தன் என்று காவலர்களிடம் காட்டிக்கொள்ள முடியுமென்றால் விஷ ஊசி அதைத் தாராளமாகச் செய்திருப்பான். அதற்கெல்லாம் தயங்குகிற ஆளே இல்லை அவன். ஆபத்திலிருந்து தப்பிக்க ஆபத்துகளில் இறங்குவது தவிர எதையும் செய்யத் துணிந்தவன் விஷ ஊசி. ஆனால் இப்போதைய நிலைமை அவனை அடுத்த கார்காரன் ஆக்கியிருந்தது. அதிலிருந்து விடுதலை இல்லை.

ஹிட்லர் ஆட்சி எப்படி என்றால் எல்லோருக்கும் ஹிட்லர் மீது நம்பிக்கை இருந்தது. யாருக்கும் அடுத்தவர் மேல் நம்பிக்கை இல்லை. ஒவ்வொருவரும் பக்கத்து நபர் ரகசிய போலீஸ்காரர், ஆனால் ஹிட்லர் பாதுகாப்பானவர் என்று நம்பினார்கள். உண்மையில் ஹிட்லர் நிஜ மனிதர் அல்லர், ஓர் இயந்திரம் என்றும் அதனுள் இருந்த வேறொருவர் அவரை இயக்கினார் என்றும் ஒரு கருதுகோள் இருந்தது. இன்னொரு கருதுகோளின்படி உள்ளே இருந்த ஆள் ஹிட்லர்தான், ஆனால் இன்னும் முட்டாளானவர். எனவே, விஷ ஊசி தன்னை ஜெர்மானியனாகக் காட்டிக்கொண்டாலும் காவலர்களுக்குச் சந்தேகம் ஏற்பட வாய்ப்பிருந்தது. உண்மையில் ஜெர்மானியர்களைத்தான் அவர்கள் அதிகம் சந்தேகித்தார்கள். சராசரி ஜெர்மானியனைவிட கூட்டணி நாடுகளின் உளவாளிகள் தேவையின் கட்டாயத்தால் தரமான ஜெர்மானியக் கல்வி பெற்றிருந்தனர். காவலர்கள் “எங்கே, கதேயின் கவிதை ஒன்றைச் சொல்லு” என்பார்கள். நாம் அப்பாவியாகச் சொன்னால் – சும்மா ஜெர்மனில் ஆனா ஆவன்னா சொன்னால்கூட – மண்டையில் சுட்டுவிடுவார்கள். அதற்குப் பின்பு உயிரோடு இருப்பதாவது!

இதெல்லாம் விஷ ஊசிக்குத் தெரியாமலில்லை. ஆனால் ஓர் உளவாளிக்கு எவ்வளவு தெரிகிறதோ அவ்வளவு பயம் இருக்கும். பிரெஞ்சு பேசினால் தனியாகப் பயணிப்பதன், பொதுவாகப் பயணிப்பதன் காரணத்தை விளக்க வேண்டும். ஜெர்மன் பேசினால் பார்த்துப் பேச வேண்டும். இவ்வளவுதான் விஷயம். இதைச் செய்வதுதான் கடினம்.

கார் வேண்டாம், நடந்து போவோம் என்றாலும் நடைக் காவலர்கள் கூப்பிட்டு அங்கே எங்கே போகிறாய் என்று விசாரிப்பார்கள். அவர்களும் திருப்தி ஏற்படாவிட்டால் உடனே சுட்டுவிடக்கூடியவர்கள்தாம்.

முன்னங்கார்காரன் ஒரு காவலனுடன் ஜெர்மனில் வாதிட்டுக்கொண்டிருந்தான். உளவுப் பயிற்சி எதையும் கவனிக்க விஷ ஊசிக்குச் சொல்லிக்கொடுத்திருந்தது. அவனும் கவனித்தான். கார்காரன் கூரை மேல் இரண்டு பெரிய பெட்டிகளைக் காரோடு சேர்த்துக் கட்டியிருந்தான். காவலர்கள் அதைச் சோதனை போட வேண்டும் என்றார்கள். பாதி நாள் கஷ்டப்பட்டுக் கட்டியது, இப்போது அதை அவிழ்த்துத் திருப்பிக் கட்ட முடியாது என்றான் கார்காரன். அவன் குடும்பத்தினர் உள்ளேயிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அவனுடைய பெண் குழந்தை ஒன்று விடைபெறுவது போல் ஜன்னல் வழியே காவலர்களுக்குக் கை ஆட்டிற்று. “அவசரப்படாதே” என்றான் கை ஆட்டப்பட்ட காவலன் அதனிடம்.

விஷ ஊசிக்கு இது நல்ல வாய்ப்பாகப் பட்டது. தன் காரிலிருந்து இறங்கிச் சென்று காவலர்களுக்கு ஆதரவாக கார்காரனிடம் பேசத் தொடங்கினான். அதற்குள் பின்னால் இருந்த கார்கள் பொறுமையிழந்து பாம் பாம் என்று ஒலியெழுப்பத் தொடங்கின. பேசிக்கொண்டிருந்த காவலன் ஆத்திரமாகி வானத்தை நோக்கிச் சுட்டான். உடனே அமைதியாகியது. விஷ ஊசிக்கோ துப்பாக்கிச் சத்தம் கேட்டு வியர்க்கத் தொடங்கிவிட்டது. பற்கள் செய்தியின்றித் தந்தியடித்தன. அதை மறைத்துக்கொள்ளச் சட்டென்று ஒரு பிஸ்கட்டை எடுத்து வாயில் வைத்துக்கொண்டான், அவசரமாகக் கடித்துத் தின்பது போல் தெரியட்டும் என்று. ஆனால் பிஸ்கட்டை மென்றுகொண்டே பேசியதில் அவன் பேசியது காவலர்களுக்குப் புரியவில்லை. இன்னொரு காவலன் விஷ ஊசியைத் தள்ளிச் சென்று அவனுடைய காரில் உட்காரவைத்தான். விஷ ஊசி ஜெர்மனில் பேசியதைக் கேட்டு அவன் பிரெஞ்சுக்காரன் என்று நினைத்துக் கையால் பொறுத்திரு என்று சைகை காட்டினான் காவலன். பிறகு சர்ச்சைக்குரிய காரை ஒரு சந்துக்குள் திருப்பி நிற்கவைத்தார்கள். கண்டிப்பாக அந்த கார்காரனுக்குத் தொடர்புகள் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் காவலர்கள் பேச்சில் இவ்வளவு நேரத்தைச் செலவிட மாட்டார்கள்.

இப்போது ஒரு புதிய பிரச்சினை முளைத்தது. விஷ ஊசி ஆதரித்துப் பேசிய காவலர்கள் அந்த காரோடு சேர்ந்து போனார்கள். அவர்களின் இடத்தில் வேறு காவலர்கள் சிலர் வந்தனர். அவர்களுக்கு விஷ ஊசி ஜெர்மன் பாதுகாவல் துறையின் சூழ்நிலைசார் ஆதரவாளன் என்பது தெரியாது. அடுத்து இவனுடைய கார்தானே.

எந்த மாதிரி அணுகுமுறையால் விஷ ஊசி இரட்டை உளவாளியாகக் கருதப்பட்டானோ அதே அணுகுமுறையை இப்போது அவன் பிரயோகித்தான்: உண்மையைச் சொல்லிவிட்டு ஆளை விடுமாறு கெஞ்சிக் கேட்டுவிடுவது. உண்மையைவிட மேன்மையானது ஏது? இந்தத் தீர்மானம் அவனைக் குழப்பத்திலிருந்து விடுவித்து உற்சாகமளித்தது. புதிய தெளிவில் விஷ ஊசி ஒரு ஜாஸ் ராகத்தைச் சீட்டியடிக்கத் தொடங்கினான். கதேயின் பாடலைக் கேட்டால் நேரடியாகப் பதிலளிக்கக் கூடாது என்பது அப்போதும் கடைபிடித்தாக வேண்டியது என்பதை அவன் மறக்கவில்லை.

விஷ ஊசி பயந்தது போல் புதிய காவலர்கள் இருகைகளை நீட்டிக்கொண்டு அவனை நோக்கி குதித்தோடு வரவில்லை; இடுப்புத் துப்பாக்கியில் கையை வைத்துக்கொண்டு விஷ ஊசியின் காரை நோக்கி மரணமாக நடந்து வந்தார்கள். விஷ ஊசிக்குத் தெளிவெல்லாம் பறந்துபோய் மிதமிஞ்சிய பதற்றத்தில் சிரிப்பு வந்தது. ஒரு காவலன் அருகில் வந்து விஷ ஊசியிடம் பேசாமல் காருக்குள்ளே எட்டிப் பார்த்தான். உடன் இருந்த காவலனிடம் “நிஹ்ட் பெர்சோனென்” என்றான். அந்த இரண்டாம் காவலன் காரைத் தட்டிப் பார்த்தான், கதவின் மேல் காதை வைத்துக் கேட்டான்.

ஒரு வழியாக முதல் காவலன் விஷ ஊசியிடம் கேட்டான்: “என்ன விஷயம்?”

விஷ ஊசி தனது அடையாளக் காகிதங்களை எடுத்தபோது ஜெர்மன் காகிதங்கள்தாம் வந்தன.

“ஒன்றும் இல்லை” என்றான் ஜெர்மனில்.

“ஜெர்மன் எங்கே கற்றாய்?”

“பெர்லினில். நான் ஜெர்மானியன்.” சொல்லிவிட்டு வியர்த்தான் விஷ ஊசி.

“ஓ? ஓட்டோ, இவர் ஜெர்மானியராம்.”

இரண்டாம் காவலன் முன்னே வந்தான்.

“ஜெர்மானியரா?”

“ஆமாம். கதேயின் பாடல் ஒன்று சொல்லவா?” என்று விஷ ஊசி பாடத் தொடங்கினான். “டென் ஃப்ரீடென் கான் டஸ் வோலன் நிஹ்ட் பெரைட்டன்: வெர் ஆலெஸ் வில்…”

“கிளம்பு, கிளம்பு. திரும்பி வராதே.”

“ஹைல் ஹிட்லர்!”

“போ போ, நிற்காதே!”

(தொடரலாம்)

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar