ஒரு துக்கம் விசாரித்தல்

in கட்டுரை

விடிந்ததும் விடியாத குறையுமாக ஒரு மரணச் செய்தி கிடைத்தது. செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தபோது மனைவி வந்து சொன்னார்:

“மணி அப்பா இல்ல, அவர் எறந்துட்டாராம். நீங்க மணிக்கு ஃபோன் பண்ணி விசாரிங்க.”

இது என்னைப் பெரிய சிக்கலில் ஆழ்த்தியது. துக்கம் விசாரித்தல் எனக்குச் சிறிதும் பரிச்சயமில்லாத ஒரு துறை. பிறந்தநாள் வாழ்த்துகள், மணநாள் வாழ்த்துகள் என்றால் பல்லைக் கடித்துக்கொண்டு இனிக்கப் பேசிவிடலாம். ஆனால் துக்கம் விசாரிப்பது ஒரு துன்பியல் நிகழ்வு. மனைவி சொன்ன பிறகு அதைத் தவிர்க்க முடியாது. மணியின் அம்மா இவரின் தோழமை.

கையில் செல்பேசியை எடுக்கும்போது கற்றுக்குட்டி நடிகன் போல் உணரத் தொடங்கினேன்.

“வணக்கம் மணி, கேள்விப்பட்டேன். என்னாச்சு அப்பாவுக்கு?”

நல்லவேளையாக மணி சாதாரணமாகப் பேசினான்.

“ஒரு வாரமா காய்ச்சல். ரெண்டு நாள் ஐ.சி.யூ.ல இருந்தாரு…”

“அப்படியே போயிட்டார்…” எடுத்துக்கொடுத்தேன்.

“ஆமா.”

“அம்மா நல்லா அழுதாங்களா?”

“பின்னென்ன சார்?”

“ஏன் கேட்டேன்னா அழுதாத்தான் பாரம் குறையும். துக்கத்துல மனசுலயே வெச்சுக்கிட்டா அப்புறம் அதுலேந்து மீண்டு வர்றது கஷ்டம்.”

நல்லவன் போல் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு திடீரென்று “அம்மா இங்க பக்கத்துலதான் இருக்காங்க, பேசுறீங்களா?” என்றான் மணி, என்னவோ நானும் அவரும் ஐம்பது வருடம் அன்னியோன்யமாகப் பழகியவர்கள் போல. அவர் பெயர் நினைவில் இருப்பதே அதிசயம்.

தயங்கியவன், இங்கிதத்திற்காக ஒப்புக்கொண்டேன்.

“சொல்லுங்க.”

‘எல்லோரும் பேசிவிட்டார்கள், நீ புதிதாக என்ன சொல்லிவிடப்போகிறாய், நீ பேசுவதால் அவர் திரும்பியா வந்துவிடப்போகிறார்?’ என்ற விரக்தி இருந்தது அந்தப் பெண்மணியின் குரலில்.

“ம்ம்… வந்து… நடந்தது நடந்துபோச்சு. மனசுல எதுவும் வெச்சிக்காதீங்க. எதுவும் நம்ம கட்டுப்பாட்டுல இல்ல. அதுனால நம்மளால எதுவும் செய்ய முடியாம போச்சேன்ற வருத்தம் எதுவும் வேணாம். நாமளும் சரி, நமக்குத் தெரிஞ்ச எல்லாரும் சரி, யாரையும் சாவு இரக்கப்பட்டு விட்டுவைக்காது. இது இவன் மனைவி, இவ உயிரோட இருக்கணும், இவன் பேரு சாய் ஸ்ரீராம், இவன் சாகணும் அப்படின்னு சாவு தரம்பிரிச்சுப் பாக்காது…. இது மாமூலா நடக்குறதுதான். இதுல யாரும் தனியாள் இல்ல. நாமல்லாம் ஒரு குரூப்பு…”

பேசிக்கொண்டிருக்கும்போதே அழைப்பு துண்டிக்கப்பட்டது. எங்கே தவறு செய்தேன் என்று என் மனைவிக்கும் புரியவில்லை. ஆனால் எனக்கு விடியாமுகத்தினன் என்ற அடைமொழி மட்டும் கிடைத்தது.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar