விஷ ஊசி – 2

in புனைவு

« அத்தியாயம் 1

2

ஓட்டோ பௌமரும் பவுல் ஹிம்மலும் ஜெர்மன் ரகசிய போலீஸின் பாரீஸ் கிளை துணைத் தலைவர் ஹைன்ரிக் பாட்மரின் அறைக்குள் நுழைந்தபோது அவர் மட்டும் தனியாக இருந்ததைக் கண்டு துணுக்குற்றனர். ஒரு பெரிய விசாரணைக் குழுவையும் பதவி நீக்கத்தையும் எதிர்பார்த்து வந்தவர்கள் ஒரே ஒரு ஆளைப் பார்த்து நிம்மதியடைந்தார்கள்.

பாட்மர் சுவரில் மாட்டப்பட்டிருந்த ஒரு பிரம்மாண்டமான பிரெஞ்சு வரைபடத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். திரும்பிப் பார்த்தவர், இருவரிடமும் வரைபடத்தில் ஓர் இடத்தை ஒரு குச்சியால் வட்டமிட்டுக் காட்டினார்.

“இந்நேரம் நம் ஆள் இந்த இடங்களில் எங்கு வேண்டுமானாலும் இருக்கக்கூடும்” என்றார் பாட்மர். காவலர்கள் இருவரும் கூச்சத்தில் மௌனமாக இருந்தார்கள்.

“அவன் போராளிகளின் ஆளாக இருந்தால்…” பாட்மர் தொடர்ந்தார், “இங்கே இருப்பான் என்று யூகிக்கிறேன்” என்று வரைபடத்தில் லியோனைக் காட்டினார்.

“லியோன் எங்கிருக்கிறது என்று தெரியுமா?” என்றார் பாட்மர்.

“தெரியாது” என்றார்கள் காவலர்கள்.

பற்றவைக்காத பைப்பை வாயில் வைக்கப்போனவர் நிறுத்தி, “லியோன் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் என்ன ஓலுக்கு பிரான்ஸ் மீது படையெடுக்கிறீர்கள்?” என்றார்.

இருவரும் மன்னிப்பு கேட்டார்கள்.

“தோக்வில் சாலையில் என்ன நடந்தது? நீ சொல்” என்றார் பாட்மர் பௌமரிடம்.

பௌமர் அனைத்தையும் சொன்னான்.

“மூட்டைகளை வைத்து வாக்குவாதம் செய்த ஆள் யார்? நம் ஆள் திசைதிருப்புவதற்கு அவன் உதவிக்கொண்டிருந்தானா?”

“தெரியவில்லை சார். நானும் பவுல் ஹிம்மலும் வேறு இடத்தில் இருந்தோம். எங்களுக்கு முன்பு அங்கே இடம்வகித்த காவலர்கள் வாக்குவாதம் செய்த நபரை வேறு இடத்திற்குக் கூட்டிச் சென்றார்கள். அதன் பிறகுதான் நாங்கள் அங்கே வந்தோம். ஒரு கேள்வி கேட்க அனுமதி வேண்டும் ஐயா.”

“வழங்கினேன்.”

“இந்த லுட்விக் க்ரால் முக்கியமான ஆளா ஐயா?”

“லுட்விக் க்ரால்! உளவு வட்டாரங்களில் ஓரளவு அறியப்பட்ட பெயர். உண்மையிலும் ஒவ்வொரு வட்டாரத்திலும் அவனுக்கு ஒவ்வொரு பெயர். எங்களுக்கு அவன் ‘வெட்டுக்குருவி’. லுட்விக் க்ரால் நாங்கள் அவனுக்கு செய்துகொடுத்த ஜெர்மன் பாஸ்போர்ட்டில் இருக்கும் பெயர். பிரான்சில் அவன் ழாக்-லூயி ரிஷார். வழக்கமான உளவாளி அவன்.”

பைப்பைப் பற்றவைக்க வாயருகே எடுத்துச் சென்ற பாட்மர், மீண்டும் நிறுத்தினார்.

“அவன் முக்கியமான ஆளாக இருக்கலாம், இல்லாதும் இருக்கலாம், அவனை நாங்கள் எடுபிடியாகத்தான் பயன்படுத்திக்கொண்டிருந்தோம். ஆனால் எடுபிடிகளை நம்ப முடியாது. நம்மிடம் எடுபிடிகளாக இருந்த சிலர் கூட்டணிப் படைகளின் உளவுப் பிரிவுகளில் பெரிய அதிகாரிகளாகப் பதவி உயர்வு பெற்ற கதைகள் உண்டு. க்ராலுக்குப் பேச்சு திக்கும். அவ்வப்போது நாலு வார்த்தை பேசுவான். ஆனால் ஒரு நாள் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டான். இந்த மாதிரி ஆட்களை நம்ப முடியாது. அவனுக்குப் போராளிகளோடும் தொடர்பிருக்கலாம். அவனுக்கு என்ன தெரியும் என்பது நமக்குத் தெரிய வேண்டும். அவன் எதிரி ஆளா என்று தெரிய வேண்டும். அதற்காகத்தான் அவனைத் தேடுகிறோம்.”

“என்னால் ஏதும் செய்ய முடிந்தால்…” ஹிம்மல் குறுக்கிட்டான். பெரிய அதிகாரியான பாட்மர் வெறும் காவலர்களான அவர்களிடம் இவ்வளவு பேசியதில் அவனுக்கு மகிழ்ச்சி கலந்த நிம்மதி ஏற்பட்டது.

“உங்களால் முடிந்ததைத்தானே செய்தீர்கள். அவன் தப்பித்ததில் உங்கள் இருவருக்கும் பங்கிருக்கிறதுதானே? இப்போது நீங்கள் போகலாம். ஆனால் உங்களை விட்டுவிட்டோம் என்று நினைக்காதீர்கள். உங்கள் மீது நடவடிக்கை பாக்கி இருக்கிறது. உங்கள் மேலதிகாரியிடம் சொல்லாமல் ஊரை விட்டுச் செல்லாதீர்கள். இங்கு நாம் பேசியதை யாரிடமும் சொல்லாதீர்கள். க்ரால் அகப்பட்டால் உங்களைக் கூப்பிட்டு விசாரிப்போம். போய் வாருங்கள். ஹைல் ஹிட்லர்.”

“ஹைல் ஹிட்லர்!”

“ஹைல் ஹிட்லர்!”

பௌமரும் ஹிம்மலும் திரும்பிச் செல்லும்போது பாட்மர் தமது லூகர் துப்பாக்கியால் இருவரது பின்மண்டையிலும் சுட்டார். சத்தம் கேட்டு இரு காவலர்கள் ஏந்திய இயந்திரத் துப்பாக்கிகளுடன் ஓடி வந்து ரத்தத்தில் கால் நனைத்தார்கள்.

பாட்மர் தமது பைப்பைப் பற்றவைத்தார். “இந்த அறையைச் சுத்தம் செய்யுங்கள். எனக்கு ஒரு சந்திப்பு இருக்கிறது” என்று அவர்களிடம் சொல்லிவிட்டு வெளியேறினார்.

(தொடரலாம்)

Tags: , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar