ஒரு கணமும் மறுகணமும்

in கட்டுரை

“யாங்கா!…”

பெண் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். நாற்பத்தி சொச்ச வயதுப் பெண். வறுமை அவள் ஏழை என்றது. கச்சலான உடல். யாரோ எந்த நிகழ்வுக்காகவோ எப்போதோ வாங்கிக் கொடுத்த அழுக்கேறிய புடவை. இடுங்கத் தவறிய கண்கள். பேச்சில் ராகம் சென்னைத் தமிழுக்குரியதாகத் தெரியவில்லை. கையில் சிறு துணிப்பை. அதனுள் என்ன இருக்கக்கூடும் என்று என்னையே கேட்டுக்கொண்டேன். மேலும் பழைய புடவைகள்? ரேஷன் அட்டை? வேலை தேட வெளியூரிலிருந்து வந்து காணாமல் போன கணவனின் புகைப்படம்? கூரையில்லாப் பள்ளியில் படிக்கும் குழந்தைக்காக நடைபாதைக் கடையில் வாங்கிய மலிவான பிளாஸ்டிக் பொம்மை? நிறைய கவலைகள்? கனவுகள்? பயங்கள்? டப்பாவில் முள்முறுக்கு?

“…பின்னாடி வண்டி வருது பாருங்கா!”

மறுகணம், என்னையும் அறியாமல் ஒரு ஈரேழு தப்படி முன்னே சென்று கோல்கீப்பர் கோலத்தில் விழுந்தேன். ஒரு வாகனம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வேகமாக என் மீது ரிவர்ஸ் எடுத்திருந்தது.

சுதாரித்து எழுந்து உட்கார்ந்து இரு கைகளையும் ஒரே சமயத்தில் இடமும் வலமும் புரட்டிப் பார்த்தேன். எங்குமே சிராய்ப்புகள் இல்லை. சிறிது மண் ஒட்டியிருந்தது. அன்றாடம் அந்த இடத்தைக் கடந்து சென்ற ஆயிரம் சகமனிதர்களின் பாதச் செருப்பு பட்டகன்ற மண். உள்ளூர்க்காரர்களும் வெளியூர்க்காரர்களும் கலந்து நடமாடிப் பல ஊர்கள் அந்த மண்ணில் சங்கமித்திருந்தன. அது எனக்கு வேண்டாம் என்று அதை இருகைகளிலிருந்து தட்டியும் துடைத்தும் அகற்றினேன். இருபக்கமும் இருவர் இறுகப் பிடித்துக்கொள்ள ஒருவன் ஒங்கிக் குத்தியது போல் அடிமுதுகில் ஒரு வலி.

நான் பயன்படுத்திப் பழகி எனது பௌதீக ஆளுமையின் ஒரு பகுதியாகவே ஆக்கிக்கொண்டுவிட்ட ரூபாய் நோட்டு, சில்லறைக் காசு, கிரெடிட் கார்டு போன்ற உடைமைகள் சிதறிக் கிடக்கின்றனவா என்று விழிகள் சுற்றுப்புறத்தைத் துழாவின. எல்லாம் சரியாக இருந்தன. என்னைச் சேகரித்துக்கொண்டு எழுந்து நின்றேன். மோதிய வாகனம் அந்த இடத்தில் இல்லை. என்னை சரியான சமயத்தில் எச்சரித்த விவரணைப் பெண் மட்டும் அங்கிருந்தாள்.

“வண்டி வருதுன்னு கத்தினுக்குறேன், என் மூஞ்சையே பாத்துக்கினுருக்குற? லூசா நீ?”

கண்டிப்பாகச் சென்னைதான் என்று தோன்றியது.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar