மூன்று ரூபாய்

in கட்டுரை

பிரியாணிப் பாத்திரத்தில் கடைசிப் பருக்கைகளை விடாமல் கிளறி எடுப்பவனின் தீவிரத்துடன், அதே சமயத்தில் இதையெல்லாம் பகிரங்கமாகச் செய்யலாம் என்ற அமைதியுடன், மூக்கினுள் வலதுகைச் சுண்டுவிரலை நுழைத்து கடிகாரச் சுற்றிலும் எதிர்கடிகாரச் சுற்றிலும் இரண்டு மூன்று முறை 360 டிகிரி திருப்பிக்கொண்டிருந்த தேநீர்க்கடை உரிமையாளர் என்னைப் பார்த்துவிட்டு, “சாருக்கு ஒரு டீ” என்றார்.

அட வயிற்றால் போகிறவனே, இந்தக் கையாலா இவன் பாக்கி மூன்று ரூபாய் சில்லறையை எடுத்துக் கொடுக்கப்போகிறான் என்று நொந்துகொண்டேன்.

என்னிடம் சரியான சில்லறை இல்லை. பாக்கியை அப்புறம் வாங்கிக்கொள்கிறேன் என்று நழுவிவிடலாம். ஆனால் அவர் எனக்குத் தர வேண்டியதை மறந்துவிட்டால் மூன்று ரூபாய் போனது போனதுதான். எக்காரணத்தைக் கொண்டும் அது திரும்ப வராது. அதனிடம் நிரந்தரப் பிரியாவிடை பெற வேண்டியதுதான்.

யோசித்து முடிப்பதற்குள் தேநீர் வந்தது. குடித்துவிட்டு கிளாஸை வைத்துவிட்டு சட்டைப் பையிலிருந்து பத்து ரூபாய்த் தாளை எடுத்தேன்.

“இந்தாங்க. பாக்கி மூண்ருவா அப்பறமா வாங்கிக்கிறேன்” என்றேன்.

“இல்ல சார், எனக்கு மறந்துரும். நீங்கெ கையோடே வாங்கிட்டுப் போயிடுங்கெ” என்று உரிமையாளர் வலதுகையால் மூன்று ரூபாய்ச் சில்லறையை எடுத்து நீட்டினார். அவருக்குச் சுத்தமான இன்னொரு வலதுகை இருந்திருக்கலாம் போல் இருந்தது எனக்கு. ஓடிவிடலாம் போலவும்தான்.

“ஆ! உங்களுக்கு மூண்ருவா அன்னிக்கித் தரணும்ல?” என்றேன் வேதனை பீறிடும் திடீர் சாமர்த்தியத்துடன்.

“ஓ! அப்ப சரி. பாத்தீங்களா, எனக்கு நியாபகம் இருக்காது, அதுதான் ப்ரச்சனெ” என்று சில்லறைக் காசுகளை அவற்றுக்குரிய கிண்ணங்களில் பிரித்துப் போட்டார். நாளிறுதியில் எனது மூன்று ரூபாய் திரும்பி வர முடியாத இடத்திற்குப் போய்விட்டது.

வீட்டை நோக்கி நடக்கையில் திடீரென்று ஆங்காங்கே கீழே கிடந்த சோடா மூடிகள் எல்லாம் எனக்குச் சேர வேண்டிய சில்லறைகளாகவே தெரிந்தன. பூமாதேவியை நினைத்து ‘சரியான சில்லறை கொடுக்கவும்’ என்று ஜபித்தபடி தரையை புரூஃப்ரீடிங் பார்வையால் அளாவத் தொடங்கினேன்.

வீடே வந்துவிட்டது. ஒன்றும் கிடைக்கவில்லை. நான் பார்த்த அத்தனை சோடா மூடிகளையும் பொறுக்கிப் பழைய பேப்பர் கடையில் எடைக்குப் போட்டிருந்தால் பத்து ரூபாயாவது கிடைத்திருக்கும். மூணு இண்ட்டு மூணு ஒன்பது, மீதி ஒரு ரூபாய் லாபம் அடித்திருக்கலாம். ஆனால் அதிர்ஷ்டம் இல்லை.

ஏழை நாட்டில் பிறந்துவிட்டு இந்த மானம் மரியாதையெல்லாம் எவன் கேட்டான்?

Tags:

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar