மேட்ச்சிங் கிட்னி

in சிறுகதை

“அப்பா, சாப்பிட வாங்கப்பா” என்று கத்தினாள் பார்கவி. அப்பா மொட்டை மாடியில் செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தார்.

“எதுக்கு எல்லாத்துக்கும் உங்கப்பாவக் கூப்ட்டுக்குற?” என்றான் மாணிக்கம்.

“இது அவர் சாப்பிடற நேரம். உங்களுக்கு அவரோட சாப்பிடப் பிடிக்கலன்னா சீக்கிரமா சாப்பிடுங்க, இல்லன்னா லேட்டா சாப்பிடுங்க” என்று பொங்கினாள் பார்கவி.

“சீக்கிரமாதான் சாப்பிடுறேன். அஞ்சு நிமிஷத்துக்கு மேல சாப்புட என்ன இருக்கு இங்க?”

பார்கவி பதில் பேசாமல் தீபாவளி போனஸில் வாங்கிய 29 அங்குலத் தொலைக்காட்சியைப் பார்த்தவாறு வெள்ளரிக்காய் நறுக்கிக்கொண்டிருந்தாள்

“உங்கப்பாவப் பாரு” என்றான் மாணிக்கம், “இப்படியே வெயிட் போட்டுக்கிட்டிருந்தார்னா அவரை மொட்டை மாடிலதான் வெச்சுக்கணும். இப்பவே போலீஸ் என்கொயரில்லாம் வருது…”

பார்கவி தொலைக்காட்சி சத்தத்தை இரண்டு புள்ளிகள் அதிகரித்தாள்.

“இந்த ஊர்ல எவ்ளோ தெரு இருக்கு! சாயந்தரம் ஆனா மெதுவா நாலு தெரு நடக்கலாம்ல? ஊர் பூரா கடனா வாங்கிருக்காரு? வெளியூர் ஆளுதான? ரொம்ப நேரம் அசையாம உக்காந்திருந்தா கொலஸ்ட்ரால் பிச்சிக்கும். அதுக்குத்தான் சொல்றேன். நல்லதச் சொன்னா கேட்டுக்கணும். இதுல இவனுக்கு என்ன லாபம்னு யோசிக்கக் கூடாது.”

மாணிக்கம் பேசி முடிக்கும்போது பூபதி கூடத்திற்குள் வந்தார். “மாப்ள, ஆபீஸ் கெளம்பலியா?” என்றார்.

“சாப்ட்டு ஓடிற வேண்டியதுதான்” என்றான் மாணிக்கம்.

பார்கவி சாப்பாட்டுத் தளவாடங்களைக் கொண்டுவந்து வைத்தாள். “சாப்பிட வரலாம்” என இருவரையும் பொதுவாக அழைத்தாள்.

பிளஸ் ஒன் படித்துக்கொண்டிருந்த மகன் கோபால் பள்ளி மூட்டையுடன் உள்ளறையிலிருந்து வெளிப்பட்டான். தொலைக்காட்சி எதிரில் குப்பைமேடாக இருந்த காபி மேஜையிலிருந்து சாப்பாட்டுப் பையை எடுத்துக்கொண்டான்.

“காலைலயே எங்கடா கெளம்பிட்டே?” என்றான் மாணிக்கம்.

“போப்பா!” என்றவன், “குட்பை எவ்ரிபடி!” என்று கைகாட்டிவிட்டு வாசலை அண்மித்தான்.

“லைட்டர் எடுத்துக்கிட்டியா?” மாணிக்கம் விசாரித்தான்.

“அவனை சும்மா ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்காதீங்க!” கண்டித்தபடி நறுக்கிய வெள்ளரிக்காயை எடுத்துக்கொண்டு எழுந்தாள் பார்கவி.

“மாப்ளைக்கு எப்பவும் விளையாட்டுதான், இல்ல மாப்ள?”

“உங்களுக்குப் புரியுது, சம்பந்தப்பட்டவங்களுக்குப் புரியலியே!” என்றான் மாணிக்கம்.

“ஹெஹ்ஹெஹ்ஹே” என்றார் பூபதி.

மாணிக்கமும் பூபதியும் சாப்பிட உட்கார்ந்திருந்தார்கள். மாணிக்கத்தின் தட்டில் சோற்றைப் போட வந்தாள் பார்கவி.

“அட, முதல்ல அவருக்குப் போடு. அவர்தான் கெஸ்ட்டு” என்றான் மாணிக்கம்.

“இருக்கட்டும் மாப்ள, என்ன ஆயிடப்போவுது?”

“நீங்க சாப்பிட லேட்டாயிரும்ல?”

பார்கவி பரிமாறிக்கொண்டே அவனை முறைத்தாள். மாணிக்கம் பதிலுக்கு ஒன்றரைக் கண் செய்து காட்டினான்.

“ஜோக்கு” என்றான். பார்கவி கண்டுகொள்ளாதது போல் சென்றாள். பூபதி தர்மசங்கடப்பட்டது போல் மாணிக்கத்திற்குத் தோன்றியது.

பார்கவி குழம்போடு வந்தாள்.

அவள் குழம்பை ஊற்றுகையில், “மெதுவா ஊத்து, வெடிச்சிரப் போவுது” என்றான் மாணிக்கம்.

மாணிக்கம் அலுவலகத்திற்குக் கிளம்பிய பின்பு பார்கவியிடம் பூபதி கேட்டார், “அதெப்டிம்மா நீ எவ்ளோ முறைச்சாலும் மாப்ளைக்குக் கோவமே வர மாட்டேங்குது?”

“அவருக்குக் கோவம் வராது. ஆனா நம்மள நல்லா ஏத்திவிட்டு வேடிக்கை பாப்பாரு” என்றாள் பார்கவி எரிச்சலோடு.

“கொஞ்சம் பேசுவாரு, அவ்ளோதான?”

“என்னல்லாம் பேசுவாருன்னு உங்களுக்குத் தெரியுமா?”

“என்னதான் பேசுவாரு?”

“அதெல்லாம் உங்ககிட்ட சொல்ல முடியாது. கோபிக்கே அவர் மேல ச்சீ-ன்னு ஆயிடுச்சு.”

“அவனை என்ன பண்றாரு?”

“பேசுறாரே, அது போதாதா? அப்பாவா நார்மலா ஒரு வார்த்தை பேசுறாரா? எப்பப் பாத்தாலும் ஏதாச்சும் எடக்கு முடக்காத்தான் பேசிக்கிட்டிருப்பாரு. டெஸ்ட்ல முப்பது மார்க் வாங்கிட்டு வந்து நிக்குறான், இவரு அவன்கிட்ட ட்ரீட் கேக்குறாரு. முதுகுல நாலு வெக்க வேணாம்?”

“நான் உன்னையோ நீலாவையோ என்னிக்காவது அடிச்சி நீ பாத்திருக்கியா?”

“ஒவ்வொரு குழந்தைய ஒவ்வொரு மாதிரி வளக்கணும்.”

“சரி, விடும்மா. அவனவன் குடிச்சிட்டு வந்து பொண்டாட்டி புள்ளைங்கள அடிக்கிறான்.”

“அப்படி பண்ணாகூட பரவாயில்லயேப்பா, நான் திருப்பி அடிச்சிருவேன். விட்டுட்டு எங்கயாவது போயிடுவேன். இவுரு பேசிப் பேசியே கொல்றாரு. இவர்கிட்ட எப்டி பேசறதுன்னும் தெரியில.”

“நீ பேசாம இரு. அப்புறம் பெருசா வளந்துரும். பேசி மனசை ஆத்திக்கோ. தினமும் கோயிலுக்குப் போ. வெள்ளிக்கிழம பூஜை பண்ணு. மனசு நிம்மதியா இருக்கும்.”

வெளியே ஏதோ பெரிய சத்தம் கேட்டது. பார்கவியின் வீட்டு காலிங் பெல் காட்டுத்தனமாக நான்கைந்து முறை அழுத்தப்பட்டது. பார்கவி பல்லைக் கடித்துக்கொண்டு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். நடுத்தெருவில் மாணிக்கம் நினைவின்றி விழுந்து கிடக்க, அவனைச் சுற்றிப் பத்து பேர் அவனை உட்காரவைக்க முயன்றுகொண்டிருந்தார்கள். மாணிக்கத்தின் பைக் பல அடிகள் தள்ளி பெட்ரோலை ஊற்றியபடி எதிர்ப்பக்கமாகக் கிடந்தது. சிறிது தொலைவில் ஒரு டாடா இண்டிகா ஒரு கதவு திறந்த நிலையில் இருந்தது.

பார்கவி பதறிப் படிகளில் இறங்கி ஓடினாள். சூழ்ந்திருந்தவர்கள் விவரம் சொன்னார்கள். மாணிக்கம் வண்டியைப் பின்னால் நகர்த்தும்போது இண்டிகாகாரன் வேகமாக வந்து இடித்திருக்கிறான். மாணிக்கம் பைக்கிலிருந்து தூக்கியெறியப்பட்டிருக்கிறான். பைக் எங்கேயோ போய் விழுந்துவிட்டது. கார்காரன் காரை விட்டு ஓடிப்போய்விட்டான். பெட்ரோல் டேங்க் கூட உடைந்துவிட்டது. மாணிக்கம் அதிர்ச்சியில் மயங்கிவிட்டான், ஆனால் அடிகிடி எதுவும் பட்ட மாதிரித் தெரியவில்லை. முகத்தில் தண்ணீர் அடித்து சோடா குடிக்கவைத்து பக்கத்து கிளினிக்கில் முதலுதவி கொடுக்கலாம் என்றார்கள்.

அப்போது மாணிக்கத்தின் வயிற்றுப்பகுதிச் சட்டையில் வேகமாக ரத்தம் பரவித் தரையில் சிந்தத் தொடங்கியது. உடனே 108 ஆம்புலன்சை அழைத்தார்கள். பார்கவி ஐயையோ என்று விம்மினாள். அதற்குள் பூபதியும் கீழே இறங்கி வந்துவிட்டிருந்தார்.

ஆம்புலன்ஸ் வந்ததும் மாணிக்கத்தை உடனே அதில் ஏற்றினார்கள். “நீங்க இருங்கப்பா, நான் பாத்துக்குறேன்” என்று பூபதியிடம் சொல்லிவிட்டு பார்கவி ஆம்புலன்சில் ஏறினாள்.

மாணிக்கத்தை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தார்கள். சிறிது நேரத்தில், தமிழில் பேசினால் அடித்துவிடக்கூடிய தலைமை ஆசிரியை போல் ஒரு மருத்துவர் வந்து பார்கவியிடம் விளக்கினார்: “ரெண்டு கிட்னீஸும் டேமேஜ் ஆயிருக்கு. ரைட் கிட்னிய ட்ரீட் பண்லாம். ஆனா ரொம்ப நாள் வராது. ரிமூவ் பண்றது பெட்டர். லெஃப்ட் கிட்னி சுத்தமா டேமேஜ் ஆயிருக்கு. லிவர் இஸ் ஓ.கே. நோ ஹெட் இஞ்சுரீஸ், அதனால கவலையில்ல. நமக்கு அர்ஜன்ட்டா ஒரு கிட்னி டோனர் வேணும். எங்களோட யூஷுவல் சோர்சஸ்ல கேட்டிருக்கோம். ஆனா உங்க ஹஸ்பெண்டுக்கு மேட்ச்சிங் கிட்னி கிடைக்கலைன்னா அடுத்து என்ன பண்ணணும்னு யோசிக்கணும். உங்க வீட்ல யாரெல்லாம் இருக்கீங்க?”

“நான், என் பையன் -”

“என்ன வயசு பையனுக்கு?”

“பதினாறு. ப்ளஸ் ஒன் படிக்கிறான். அப்புறம் எங்கப்பா இருக்காரு. அவருக்கு 69 வயசு” என்றாள் பார்கவி சப்ஜாடாக.

“அப்ப உங்க மூணு பேருக்கும் சில டெஸ்ட்ஸ் பண்ணணும். கிட்னி மேட்ச் ஆகுதான்னு பாக்கணும்.”

“என் பையனுக்குக்கூடவா?”

“அடல்ட் கன்சென்ட் இருந்தா பையன் கிட்னி குடுக்கலாம். உங்க ஹஸ்பெண்டுக்கு எந்த கிட்னியும் மேட்ச் ஆகலன்னா என்ன பண்ணுவீங்க? பட் இட்ஸ் அப் டு யூ.”

“இல்ல டாக்டர், அவனுக்கும் டெஸ்ட் பண்ணிடுங்க, பரவால்ல.”

“பயப்படாதீங்க. கிட்னி டொனேட் பண்ணா ஒண்ணும் ஆகாது. இன்ஷுரன்ஸ், மெடிக்ளெய்ம் எல்லாம் இருக்கில்ல?”

மாணிக்கத்திற்குச் சகலவித குழாய்களையும் பொருத்தியிருந்தது மட்டுமின்றி திரையில் எண்களும் வரைபடமும் தெரியும் ஓரிரு இயந்திரங்களையும் இணைத்திருந்தார்கள். மேல் தோற்றத்திற்கு ரத்தக் காயம் இல்லாமல், ஆனால் சாகக் கிடப்பது போல் தெரிந்தான் அவன்.

மறுநாள் மாணிக்கத்திற்கு நினைவு திரும்பியது. அது வரை பார்கவிக்குச் சந்தேகமாகத்தான் இருந்தது. திடீரென்று நர்ஸ்கள் எல்லாம் குறுக்கும் நெடுக்கும் ஓடி காபரா செய்து ‘மாணிக்கம் பேஷன்ட் எக்ஸ்பயரி ஆகிவிட்டார்’ என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது? இருந்தாற்போலிருந்து எல்லா சுமையும் தன் மீது விழுந்தால் எப்படி இருக்கும் என்று அவளுக்கு உதறியது.

மாணிக்கம் கொஞ்சம் பேசினான், தண்ணீர் கேட்டான். அங்கிருந்த நாற்காலியில் பூபதி உட்கார்ந்திருப்பதைப் பார்த்துக் கண்ணை மூடிக்கொண்டான். அதற்குள் பூபதி அவனைப் பார்த்துவிட்டார்.

“இப்ப பரவால்லையா மாப்ள?” என்றார்.

“வலி பின்னுது” என்றான் மாணிக்கம்.

இரவு கனிவான தோற்றம் கொண்ட வேறொரு முதுநிலை மருத்துவர் வந்தார். அவரும் பெண்தான். “எங்க சோர்சஸ்கிட்டேந்து மேட்ச்சிங் கிட்னி கிடைக்கல. எய்தர் உங்க அப்பா அல்லது உங்க பையன்தான் குடுக்கணும். ரெண்டு பேர்தும் மேட்ச் ஆகுது” என்றார்.

“எங்கப்பாவோட கிட்னி மேட்ச் ஆகுதுன்னா அதையே எடுத்துக்குங்க. அவரு ஹெல்த்தியாதான் இருக்காரு” என்றாள் பார்கவி.

“வேணாம் ப்ளீஸ்!” என்றான் படுக்கையிலிருந்து மாணிக்கம் மூச்சு வாங்க.

“என்ன பேசுறீங்க? கிட்னி இல்லாம உயிரோடயே இருக்க முடியாது!” என்றாள் பார்கவி.

“நான் எங்க வேணாம்னு சொன்னேன். உங்கப்பாதுதானே வேணாம்னேன்!”

“விளையாடாதீங்க-ங்க! அப்ப சின்னப் பையன்கிட்டேந்து கிட்னி எடுப்பாங்களா?”

“அவன் என் பையன்தானே. அப்பனுக்கு மகன் செய்யக் கூடாதா? மனுஷனுக்கு ஒரு கிட்னி போதும். அவனோட கிட்னியக் குடுங்க. இல்லன்னா என்னை சாக விடுங்க” என்றான் மாணிக்கம் சன்னமாக, ஆனால் உறுதியாக.

பார்கவி சிலைத்து நின்றிருந்தாள். ‘இவனும் ஒரு மனிதனா?’ என்பது அவளுக்கு உறுதிப்பட்டது. எக்கச்சக்கமான சூழ்நிலையில் வந்து மாட்டிக்கொண்டோமே என்பது போல் மருத்துவர் விழித்தார், புன்னகைக்க முயன்றார்.

“டெசிஷன் உங்களுதுதான். இப்ப மணி எய்ட் தர்ட்டி. டென் தர்ட்டிக்கு வந்து பாக்கறேன் உங்களை. எதுக்கும் கவலைப்படாதீங்க” என்று அகன்றார் மருத்துவர்.

மருத்துவர் போன பின்பு பார்கவி மாணிக்கத்திடம் கண்ணீர் கலந்து கேட்டாள்: “உங்களுக்கு கோபி மேல பாசமே இல்லியா? எவ்ளோ சின்னப் பையன் அவன். உங்க பையனுக்கு நீங்க குடுக்கணும். உங்க சுயநலத்துக்காக அவனைக் கூறு போடணுமா! எங்கப்பா கிட்ட நான் என்ன சொல்வேன்? அவர் உங்களுக்கு என்ன பாவம் பண்ணாரு?”

மாணிக்கம் பதிலளிக்காமல் கண்களை மூடிப் படுத்திருந்தான். முன்பகை இல்லாமல் யார் மீதும் வெறுப்பு வரக் கூடாது என்று எவனோ கிளப்பி விட்டிருக்கிறான் என்று நினைத்துக்கொண்டான்.

ஒன்பதரை மணிக்குக் கனிவான மருத்துவர் நல்ல செய்தி சொன்னார். “மேட்ச்சிங் கிட்னி கெடச்சிருக்கு. ஸோ கவலப்படாதீங்க. இந்த ஸ்லிப்பை பில்லிங்-ல குடுத்து பே பண்ணிடுங்க. நாளைக்கு மார்ணிங் சர்ஜரி பண்ணிடலாம். ஹீஸ் அதர்வைஸ் ஓக்கே.” பார்கவிக்கு மனதிலிருந்து பெரிய பாரம் இறங்கியது. குடும்பம் சிதையாமல் தப்பித்தது போல் உணர்ந்தாள்.

எது எதற்காகவோ எடுத்துவைத்த தொகைகளைத் திரட்டி அறுவைச் சிகிச்சைக்குக் கட்டினாள் பார்கவி. அது வரை செலவு செய்த லட்சங்களில் ஏறத்தாழ அறுபது சதவீதத்தைத்தான் மெடிக்ளெய்ம், காப்பீடுகள் ஆகியவற்றில் மீட்க முடியுமாம். எதற்காக இந்த வீண் செலவு என்று அவளுக்குத் தோன்றாமல் இல்லை.

மூன்று பேர் பகிர்ந்துகொண்ட ஒரு வார்டில் இருவார காலம் இருந்தார்கள். ராத்தங்கல், டயாலிசிஸ் வேதனைகள், ஃப்ளாஸ்க் காபி, கேன்டீன் இட்லி, திடீர் செலவுகளுக்குப் பணம் கட்டுதல், மருந்து, உபகரணங்கள் வாங்கித் தருதல், இதர அலைச்சல்கள், இடையிடைக் கவலைகள், பயங்கள் என்று இரண்டு வாரங்கள் கழிந்தன.

டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குத் திரும்பி வந்த அன்று மாணிக்கம் இருவார செய்தித்தாள்களை அருகில் குவித்துப் போட்டு ஒவ்வொன்றாக மேய்ந்துகொண்டிருந்தான். பார்கவி கஞ்சிப் பாத்திரம் மற்றும் டம்ளருடன் அவனது அறைக்குள் வந்தாள்.

“எங்கப்பா நாளைக்கு நைட் கெளம்பறாரு” என்றாள் குற்றம்சாட்டும் தொனியில்.

“அவரைக் கிளம்பவைக்க ஆறு லட்சமும் ஒரு கிட்னியும் செலவாயிருக்கு. பீம்பாய் பீம்பாய்!” என்றான் மாணிக்கம்.

“அவர் ஒண்ணும் உங்களுக்காகக் கெளம்பல. நாளைக்குக் கெளம்பணும்னுதான் ப்ளான். அவருக்கு 2 மணிக்கு ஃப்ளைட்.” உண்மையில் பூபதிக்கு சிகாகோவில் இளைய மகள் வீட்டில்தான் வாசம். அந்த சொகுசைப் போய் விட்டுவிட்டு இங்கே வந்து ஏன் இடத்தை அடைத்துக்கொள்கிறார் என்று மாணிக்கத்திற்குப் புரிந்ததே இல்லை.

“ஆகா, அப்ப நான்தான் அவசரப்பட்டுட்டனா?” என்றான் அவன்.

எப்போதும் போல் பார்கவி பதில் சொல்லாமல் கஞ்சி சார்ந்த பொருட்களை வைத்துவிட்டுப் போனாள். அவள் போனதும் பின்னாலேயே கோபி வந்தான்.

“என்னடா, இப்பதான் அப்பா ஞாபகம் வந்துதா?” என்றான் மாணிக்கம்.

“அப்பா, நான் உங்கிட்ட ஒண்ணு கேக்கணும்” என்றான் கோபி எங்கோ பார்த்துக்கொண்டு.

“என்னடா?”

“உனக்காக நான் ஆயுசு பூரா ஒரே ஒரு கிட்னியோட வாழணுமாப்பா?” கோபிக்கு அழுகை வருவது போல் இருந்தது.

“தாத்தா மட்டும் ஆயுசு பூரா ஒரே ஒரு கிட்னியோட வாழலாமாடா? உனக்குத் தாத்தா புடிக்காதா?”

“தாத்தாவ விடு. என் உடம்புலேந்து ஒரு முக்கியமான பார்ட்ட அப்டி எடுக்கலாமா? நான் சின்னப் பையன்தானே?”

“டேய், நான் ஆயுசு பூரா உன் தாத்தாவோட கிட்னியோட வாழணுமாடா? அத யாராவது யோசிச்சுப் பாத்தீங்களாடா? நீ என் மவன்தானே?”

கோபி வாதத்தில் தோல்வியை ஒப்புக்கொள்ளும் தோரணையில் தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு அறையிலிருந்து வெளியேறப் போனான்.

“டி.வி. சீரியல் ரொம்பப் பாக்காதடா! உருப்புடாம போயிருவ!” என்றான் மாணிக்கம் கோபியின் முதுகிடம்.

Tags:

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar