தோசை மாவு அவசரம்

in கட்டுரை

மகனுக்குப் பள்ளி செல்லும் நேரம் நெருங்கியது. தோசை மாவு வாங்கி வந்து தோசை கிடைத்த பின் அதை மதிய உணவாக எடுத்துக்கொண்டு பள்ளி கொள்வார் துரை. மனைவியின் விரட்டலில் மாவு வாங்கக் கிளம்பினேன்.

வேகமாக நடக்கையில் ஒரு பள்ளிச் சிறுவனைக் கடந்து சென்றேன். முந்தப்பட்டதால் அந்தப் பையனின் ஈகோ அடிவாங்கிவிட்டது போலும். சரசரவென்று என்னை முந்தினான். விடுவேனா? அய்ம்பதாம் அகவையை நெருங்கும் என்னை ஒரு பொடியன் மீறுவதாவது! இரண்டு எட்டுகளில் அவனை முந்திச் சென்றேன். அவன் ஓட்டமும் நடையுமாக என்னைத் தாண்டினான்.

“டேய், இருடா! கொஞ்சங்கூட மரியாதை இல்லாம என்ன அவ்ளோ அவசரம்?” என்று அவனைக் கையால் தடுத்து நான் முந்தினேன்.

அவன் பதில் சொல்லாமல் பந்தயத்தைத் தொடர்ந்தான். வேகத்திற்கு உதவ செருப்புகளைக் கழற்றிக் கையிலொன்றாக வைத்துக்கொண்டு அவனை ‘குடுகுடு’ என்று கடந்தேன். இப்போது அவன் முறை.

“நில்லுடா, எங்க ஓடுற?” என்று கத்தி அவனை மீண்டும் தாண்டினேன். அந்தத் தாண்டுதலில் மளிகைக் கடையும் அடக்கம். மாவு வாங்க ஒதுங்கினால் தோல்வியை ஒப்புக்கொண்டது போல் தெரியும். நான் நெடுங்கவிதை எழுதிக்கொண்டிருந்தபோது வேலை மெனக்கெட்டு செருப்புப் போட்டுக்கொண்டு கிளம்பியதே தோசை மாவுக்காக அந்த மளிகைக் கடைக்குச் செல்லத்தான் என உலகம் அறியாது.

சிலர் வேடிக்கை பார்த்தார்கள். அவர்கள் அந்தப் பையனைத்தான் ஆதரிப்பது போல் தெரிந்தது. நான் அதைப் பொருட்படுத்தவில்லை. யாருடைய அங்கீகாரத்தையும் நம்பி வாழ்பவன் அல்ல நான். அது அந்தக் காலம்.

முதுகில் படிப்பு மூட்டை சுமந்த அந்தப் பொடியன் நினைத்தால் ஓடிப்போயிருக்க முடியும். என்னால் என் சரீரத்தை, அல்லது எவரின் சரீரத்தையும், தூக்கிக்கொண்டு ஓட முடியாது. ஆட்ட விதிகளை மதிக்கும் அவன் மேல் எனக்குக் கொஞ்சம் மரியாதை வந்தது. இலக்கை அடைவதைக் காட்டிலும் என்னை முந்தினாலே போதும் என்று அவன் நினைத்தது புரிந்தது. “இங்கிருந்து வெளியே” என்ற காஃப்காவின் தத்துவம் நினைவுக்கு வந்தது. இருந்தாலும் போட்டி போட்டிதான்.

சுமார் ஏழெட்டு தெருக்களுக்குப் பின்னர் பள்ளி வந்து சேர்ந்தது. அது என் மகன் படிக்கும் பள்ளி. சிறுவன் சட்டென உள்ளே சென்றான். திரும்பிப் பார்க்காமல் எனக்குக் கைகாட்டி “பை அங்கிள்!” என்றுகொண்டே ஓடினான். “போடா தோத்தாங்குளி, நான்தான்டா வின்னு!” என பதிலுக்குக் கத்திவிட்டு மூச்சிரைக்கத் திரும்பினால் மகனுடன் மனைவி முறைத்தபடி தொக்கி நிற்கிறார் “யார் அந்தப் பையன்?” என்று.

Tags:

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar