பதினேழு லார்ஜ்

in கட்டுரை

இன்று காலை டீக்கடையில் அறிமுகமில்லாத ஒருவரிடம் பேச்சு வாக்கில் என் குடும்பப் பிரச்சினைகள் அத்தனையையும் உளறிவிட்டேன். பேசி முடித்ததையடுத்த தர்மசங்கட நிசப்தத்தின்போதுதான் திகீர் என்று உறைத்தது. நான் போன பின்பு இவரும் மாஸ்டருமாய்ச் சேர்ந்து சிரித்துக்கொள்வார்களோ? இவர் யாரிடம் எல்லாம் போய்ச் சொல்வாரோ? “பாவம், வாழ்ந்து கெட்ட மனுசன்” என்பாரோ? அடுத்து யார் யாரெல்லாம் என்னிடம் சமீபத்திய நிலவரத்தை விசாரிப்பார்களோ? அவமானத்தில் வயிற்றில் புளி கரைந்தது. அப்போதுதான் என் மனதின் தற்காப்பு இயந்திர மனிதன் விழித்துக்கொண்டான்.

‘இதை டீக்கடையாக இல்லாமல் ஒரு மதுக் கடையாகக் கற்பனை செய்துபார்! அந்தச் சூழலில் இம்மாதிரியான பகிர்தல்கள் இயல்புதானே? எத்தனை அருந்துநர்களுக்கு சக அருந்துநர்களின் வீட்டுப் பிரச்சினைகள் தெரிந்திருக்கும்! அவர்கள் எல்லாம் அந்தத் தகவல்களையொட்டி நடவடிக்கை எடுத்திருந்தால் சமூகம் சீர்குலைந்திருக்காதா? இந்நேரம் கலவரங்கள் ஏற்பட்டு ஊரடங்கு உத்தரவு, துப்பாக்கிச் சூடெல்லாம் நடந்துகொண்டிருக்க வேண்டுமே! என்னத்திற்கு மனதைப் போட்டுக் குழப்பிக்கொண்டு? சூழ்நிலைக்கேற்ப நடந்துகொள்வோம்’ என்று தெளிவடைந்தேன்.

தேநீர் குடித்த பின்பு தள்ளாடி எழுந்து நின்றேன். காசைக் கல்லாவின் மேல் வைத்தேன். மனதிற்குள் பதினேழு லார்ஜ் இறங்கியிருந்தது. வாழ்க்கையில் குடித்தேயிராத எனக்கு அது சற்று அதிகம். தடுமாற்றத்தைச் சமாளிக்க என் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தவரின் தோளை முட்டுக்குப் பிடித்துக்கொண்டேன். சட்டைப்பையிலிருந்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து அவர் சட்டைப்பையில் திணித்து “செலவுக்கு வச்சிக்க” என்று அவர் கன்னத்தைக் கொஞ்சம் பலமாக இருமுறை செல்லமாய்த் தட்டிவிட்டு வெளியேறினேன்.

டீக்கடைக்கு வெளியே சில அடிகள் தள்ளாடித் தள்ளாடி நடந்தேன். பிறகு விடுவிடு என்று வீட்டுக்கு வந்துவிட்டேன். நாளையிலிருந்து வேறு டீக்கடைதான்.

Tags:

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar