போதையைப் போடுதல்

in கட்டுரை

மொழிபெயர்ப்பாளரும் நண்பருமான லபக்குதாஸ் (இயற்பெயர் நவநீதன்) ஒரு “தண்ணீர் பார்ட்டி”. வாரநாட்கள் தவிர தினமும் குடிப்பவர். நேற்று மாலை வீட்டுக்கு யாரோ வருகிறார்கள் என்று என் மனைவி சொன்னபோது எனக்கு நவநீதனுடன் ஒரு சந்திப்பு திட்டமாகியிருப்பதாகச் சொல்லித் தப்பித்தேன். பல சிக்கல்களில் நான் அவர் பெயரைப் பயன்படுத்திக்கொள்வது பழக்கம்.

நான் அவர் வீட்டுக்குச் சென்றபோது கதவு பாதி திறந்திருந்தது. அதை மேலும் திறந்துகொண்டு உள்ளே சென்றேன். லபக்குதாஸ் பல சுற்றுக்கள் “ஓல்டு மாங்க்” அருந்தியிருந்தார் (“நானே ஒரு ஒல்டு மாங்க்குதான்யா”). கூடுதலாக இரண்டு மிக்சர் தட்டுகளைப் பார்த்து இரண்டு பேர் குடித்துவிட்டுப் போனதைப் புரிந்துகொண்டேன். நான் குடிப்பவன் அல்ல. “மிக்சர் பார்ட்டி”தான்.

நான் வருவதாக அவரிடம் சொல்லவேயில்லை. இருந்தாலும், “ஏன்யா லேட்டு?” என்றார். அவர் இருந்த நிலையில் வீட்டுக்குள் ஒரு மாடு நுழைந்திருந்தால்கூட அதனிடமும் அதையேதான் கேட்டிருப்பார். என் கண்களைப் பார்க்காதது போல் பார்த்து “இந்த இது… எது?… ஆயிரத்தி அறுபதுகள்ல… புதுசு… எல்லாம் லெதர்… நான் வேணாம்ட்டேன்… கண்டிக்கணும்… ப்ரியம்… அது தாத்பரியத்தின் மௌன ரேகை…” என்று ஒரேயடியாகக் குழறினார். இதற்குப் போட்டியாக என்னாலும் பேச முடியும். அரிதாக சில மேடைப் பேச்சுகள், கட்டுரைகள், மதிப்புரைகள், கவிதைகள், நாவல்கள் அப்படி அமைந்துவிடுகின்றன. ஆனால் அன்றைக்குப் பார்த்து எனக்குப் பொறுமை இல்லை.

இரண்டு ஊர்கள் பயணமிட்டு வந்ததற்காவது சிறிது நேரம் அவரது புத்தக அலமாரியை மேய்ந்துவிட்டுப் போகலாம் என எழுந்து அலமாரியை நோக்கி நகர்ந்தேன். லபக்குதாஸ் என் அசைவுகளை லட்சியமே செய்யவில்லை. அவரைப் பொறுத்த வரை நான் தாமதமாக வந்தேன், அவ்வளவுதான். மற்றபடி நான் அங்கே இல்லை. போதை தர்க்கம் அறியாது.

கடைசியாக நான் திரும்பிப் பார்த்தபோது அவர் தொட்டுக்கொள்வதற்கு வைத்திருந்த பாகற்காய்ப் பொரியலில் ஒரு துண்டை எடுத்து “உங்கிட்ட ஏன் எப்பவும் ஒரு பிட்டர்னஸ்?” என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar