நண்பர்களும் வாசகர்களும்

in கட்டுரை

லபக்குதாசுடன் பல ஆழமான விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன்.

பிரக்ஞைக்கும் புறக் காரணிகளுக்கும் இருக்கக்கூடிய உறவு, அல்லது பிரக்ஞை என்பது புறக் காரணிகள் இன்றி (அப்படி எவையும் இல்லாததால்) நம் புலன் உணர்வுகளைக் காரணமில்லாமல் simulate செய்கிற, தனக்குள் அடங்கிய, தான் மட்டுமே இருக்கிற ஓர் அற்ப மாயையா, காலத்திற்கும் பிரக்ஞைக்கும் உள்ள உறவு, மரணம் எப்படி ‘உயிர் பிரித’லாக இல்லாமல் ஒரு ‘நிறுத்த’மாக (cessation) விளங்குகிறது, தூசு பறக்கும்போது கண்கள் தாமாகச் சட்டென மூடிக்கொள்வது போன்ற அனிச்சைச் செயல்களிலும் இந்த ஓட்டலில் பரோட்டா கொடுமையாக இருக்குமே என்பன போன்ற கவலைகளிலும் வெளிப்படும் சின்னஞ்சிறு பயங்கள்கூட எப்படி உயிர்பிழைத்தல் (survival) குறித்த பயத்துடன் நேரடித் தொடர்பு கொண்டுள்ளன என்றெல்லாம் அவரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். இம்மாதிரி விஷயங்கள் நான் அன்றாடப் போக்கில் சிந்திப்பவைதான். வாசகர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்காக இவை பற்றி எழுதுவதில்லை.

லபக்குதாஸ் சிகரெட்டுகளை ஊதிக்கொண்டே எல்லாவற்றையும் மௌனமாகத் தலையசைத்துக் கேட்டுவிட்டு, “இதெல்லாம் எந்த புக்குல வருது?” என்று கேட்டு அவமானப்படுத்திவிட்டார். “நாமளும் நாலு வார்த்த கத்துக்குவோம்.”

அதே விஷயங்களை வார்த்தை மாறாமல் அருமை வாசகர் ‘வன்மதி’ மோகனிடம் சொன்னபோது அவர் வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்துவிட்டு “இதெல்லாம் புக்கா போடலாமே சார்?” என்றார்.

இதுதான் நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் உள்ள வேறுபாடு.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar