விநாயக சதுர்த்திக் காட்சிகள்

in கட்டுரை

ஆண்டுக்கு ஒருமுறை காலையில் எழுந்து பல் தேய்த்துவிட்டுப் பிள்ளையார் வாங்கப் போவது எனக்கும் என் மகனுக்கும் ஒரு சடங்கு. நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, சனியனைச் செய்து முடித்தால் ஒரு காரியம் ஆயிற்று. இன்று காலையில் பிள்ளையார் தாங்கி அட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு நானும் வாரிசும் கிளம்பினோம். நான் நாகரிகமாகத் தோற்றமளித்தேன். என் மகனுக்கு அவனுடைய தாயார் – என் மனைவி – விபூதி, குங்குமம், சந்தனம் என்று நெற்றியை ரணகளம் ஆக்கியிருந்தார். தான் அலங்கரிக்கப்படும் objectification அவமானத்தை அறியாத மாட்டுப் பொங்கல் மாடு போல் அவன் ‘எல்லாம் நன்மைக்கே’ என்ற முகபாவத்தோடு வந்தான்.

எதுவும் விட்டுப்போகாதிருக்க ஒரு பட்டியல் தயாரித்துச் சட்டைப்பையில் வைத்திருந்தேன்:

பிள்ளையார் (சின்னது) – 1
குடை (சின்னது) – 1
எருக்க மாலை (மொட்டுகள் உடையாதது) – 1
பிள்ளையார்க் கண் – 4
உபரி களிமண் – தேவைக்கேற்ப
சாமந்தி – 2 முழம்
மல்லிகை – 2 முழம்
ஊதுபத்தி – 1 டப்பா
மஞ்சள் வாழைப்பழம் – 6

மளிகைக் கடைக்குப் போவது போல் இருந்தது. ஆனால் அவன் பொருட்களை வீட்டுக்குக் கொண்டுவந்து போட்டுவிட்டுப் போய்விடுவான். நாம் அலைய வேண்டியிருக்காது. ஒரே பிரச்சினை, அவனிடம் வாழைப்பழம் இல்லாவிட்டால் நம்மைக் கேட்காமல் லேஸ் சிப்ஸ் போட்டுவிடுவான்.

எல்லோர் வீட்டு வாசலிலும் தெளிவாக, அழகாகக் கோலம் போட்டிருந்தார்கள். மழைக்காலத்தில் நாய்க்குடைகள் மற்றும் புற்றீசல் போல் தெருக்களெங்கும் பிள்ளையார் கடைகள் முளைத்திருந்தன. தரையெல்லாம் வீண் ஓலைத் தோரணங்கள் இறைந்து கிடந்தன. ஓரிரு மாடுகள் அவற்றை அசை போட்டுக்கொண்டு எங்களை வேடிக்கை பார்த்தன. மக்கள் வருடாந்தர சடங்குகளுக்கே உரிய உற்சாகத்துடன் பொருட்களை பேரம் பேசி வாங்கிக்கொண்டிருந்தார்கள். பிள்ளையார்களின் அணிவகுப்பில் எல்லா பிள்ளையார்களும் ஒரே மாதிரி இருந்தாலும் அவற்றிலும் தங்களுக்கு வேண்டியதை மக்கள் கவனமாகத் தேர்ந்தெடுத்து வாங்கியதைப் பார்க்க சந்தோசமாக இருந்தது.

நடமாடும் வாகனங்களைக் காணோம். நடராஜா சர்வீஸ்கள்தான் அஸ்திக் கலசம் போல் பிள்ளையார்-குடை-எருக்கமாலை சேர்க்கையைச் சுமந்தபடி காணப்பட்டனர். வெறும் பிள்ளையாருடன் நடை போட்டவர்களைப் பார்த்துக் குடை விற்பனையாளர்கள் “சார், கொட சார்!” என்று கத்தினார்கள். முக்கியமாக, குடும்பப் பெண்களும் இளம்பெண்களும் பட்டாடை அணிந்து ஆங்காங்கே கொண்டாட்டக் களை பறித்தார்கள். அவர்களுக்கு அது ஒரு முழுமையான ஷாப்பிங் அனுபவமாக இருக்கும். அவனவன் லுங்கி அணிந்திருக்க, இந்தப் பெண்கள் மட்டுமே சாமி கும்பிடும் பாரம்பரியத்தைக் கொண்டாடுவதன் முக்கியத்துவத்தை அறிந்தாற்போல் பூவும் பட்டுமாய் ஜொலித்தார்கள். எனவே நானும் வாரிசும் அவர்களை வேடிக்கை பார்த்தோம்.

இவற்றுக்கிடையில் சம்பந்தமில்லாத கடைகள் வழக்கம் போல் இயங்கின. தேநீர்க் கடைகளுக்கு வெளியே சிலர் தேநீர் குடித்துக்கொண்டும் சிகரெட் பீடி பிடித்துக்கொண்டும் இதையெல்லாம் வேடிக்கை பார்த்தார்கள். முறைசார்ந்த ஆடை அணிந்து அலுவலகத்திற்குச் செல்பவர்கள் பலரையும் பார்த்தேன். அவர்களுக்கு விடுமுறை இல்லை. அவர்கள் போலி மதசார்பின்மை நிறுவனங்களில் பணிபுரிவார்களாக இருக்கும்.

நானும் மகனும் பிரதான சாலையின் முனையை அடைந்துவிட்டோம். அங்கிருந்து பார்த்தால் இன்னொரு நீண்ட தெரு விழாக் கோலம் பூண்டிருந்தது. யாரும் கேட்பாரில்லை. நாங்கள் அதனுள் புகுந்தோம். களிமண் பொம்மைகள் மற்றும் இத்யாதிகளிடையே முதலில் கண்ணில் பட்டவை பாலிதீன் பைகளில் இருந்த கொழுக்கட்டைகள். ஒவ்வொரு பையிலும் ஆறு இருந்தன. ஒரு பை 30 ரூபாய் என்றும் 25 ரூபாய்க்குத் தருவதாகவும் எனக்காக அவர்களே பேரம் பேசி முடித்துக் கையில் தந்தார்கள். நான் பேரம் பேசியிருந்தால் 20 ரூபாய்க்குக் கேட்டிருப்பேன். கடைக்காரர் என்னைப் பிரதிநிதித்துவம் செய்ததற்கான சம்பளமாக நான் ஐந்து ரூபாய் அழ வேண்டியிருந்தது. விலைவாசி.

அந்தத் தெருவில் ஒரு தேவாலயத்தைக் கடந்தோம். அதன் வாசலிலும் பூக்கடைகள், குடை விற்பனையாளர்கள். தேவாலயச் சுவற்றில் கைவிரித்த யேசுவைப் பார்த்ததும் எனக்குத் தோன்றியது: விநாயக சதுர்த்தி என்பதால் இன்று உருவ வழிபாடு தூக்கலாக இருக்கும். கிறிஸ்தவ சகோதரர்கள் புளகாங்கிதப்படுவார்கள். ஆனால் முஸ்லிம் சகோதரர்களின் மத உணர்வு புண்படலாம். அதனால்தான், இந்தக் கூட்டத்தில் சாவு வீட்டுத் தெருவினூடே திருமணப் புரோகிதர் போல் பட்டுக்கொள்ளாமல் நடந்த ஐயங்கார்கள்கூடக் கண்ணில் பட்டார்கள்; ஒரு இஸ்லாமியரைக்கூடப் பார்க்க முடியவில்லை. அல்லது என் அதிர்ஷ்டம் அவ்வளவுதானோ என்னவோ.

அந்த நீண்ட தெருவிலும் அடுத்து வந்த தெருக்களிலும் நாங்கள் அது வரை பார்த்ததே திரும்பத் திரும்ப வந்தன. இதையெல்லாம் தொலைக்காட்சியில் காட்டி “இன்று கொண்டாடப்பட்டது” என்று பொழிப்புரை கொடுப்பான். எனக்கு விநாயகர் சதுர்த்தியை அனுஷ்டித்த உணர்வு ஏற்பட்டது. மகனுக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். வழக்கமாகக் கேள்விகளின் ஊற்றாக இருப்பவன் வேடிக்கை பார்ப்பதில் தன்னை இழந்திருந்தான். என் வீடு நெருங்கும்போது இந்தக் கொண்டாட்டங்கள் நூறு ஆண்டுகளுக்கு முன்பு எங்கே இருந்தன என்று மகனுக்குச் சொல்லத் தொடங்கினேன். இன்னும் ஆயிரம் ஆண்டுகளில் இது பழைய தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இந்திர விழா போல் பேசப்படும் எனவும் அவனை எச்சரித்தேன். அவனுக்கு இப்போது புரியாது. ஆனால் எதிர்காலத்தில் அவன் என் பேச்சை நினைவுகூர வாய்ப்பிருந்தது.

என் வீட்டு அழைப்பு மணியை அழுத்தியபோதுதான் வயிற்றில் பகீர் என்றது. நெருங்கிய உறவினர் கதவைத் திறந்து எங்கள் இருவரின் கைகளையும் பார்த்துவிட்டு, “வாங்கலியா?” என்றார்.

“இதோ, அதுக்குத்தான் கெளம்பிக்கிட்டிருக்கோம்.”

“கையில என்ன?”

“கொழுக்கட்டை” என்று காட்டினேன்.

“நான்தான் வீட்ல செஞ்சிருக்கனே, இது எதுக்கு வீணா?” என்றார் எரிச்சலாய்.

“இதுவும் ஒரு டேஸ்ட்டுதான். சாப்ட்டுப் பாரு” என்று கொழுக்கட்டைப் பையைத் திறந்து நீட்டி நான் ஒன்றை எடுத்துக் கடித்தேன். ரப்பர்.

Tags: ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar