ஓர் எளிய ‘ரெசிப்பி’

in கட்டுரை

உலகம் என்னை சமையலின் பயனீட்டாளனாகவே பார்க்கிறது என்பதை நான் அறிவேன். ஆனால் மனைவி ஊரில் இல்லாதபோது சமையல் கலையின் ஆழ அகலங்களைத் தேடியலைவது எனக்குப் பிடித்தமான செய்கைகளில் ஒன்று.

இவ்வாறு நான் கண்டுபிடித்த ஓர் எளிய ‘ரெசிப்பி’யை இங்கு பகிர்ந்துகொள்கிறேன். இந்த பட்சணத்தைத் தயாரிக்க அதிகபட்சம் 30 நிமிடங்கள் ஆகலாம். இது குறிப்பாகத் திருமணம் ஆகாதவர்களுக்குப் பயன்ப(டட்)டும்.

தேவையானவை:

ஓட்டல் வாங்கிய பிரியாணி – 1
தண்ணீர் – 4 கோப்பைகள்

முதலில் பிரியாணியை ஒரு ஹாட்பேக்கில் வைத்துக்கொள்ளுங்கள். ஹாட்பேக் இல்லை என்றால் பிரியாணியை உங்கள் வீட்டில் சிறிதும் குளிர்ச்சி இல்லாத ஓர் இடத்தில் – எ.கா., ஃப்ரிட்ஜுக்குக் கீழே – வைத்துவிடுங்கள்.

உட்புறம் நன்கு குழிவாக உள்ள ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றுங்கள். பிறகு அதைக் கரண்டியால் கிளறிக்கொண்டிருங்கள். ஆவி பறப்பதைப் பார்த்து மயங்கிவிடாதீர்கள். தண்ணீர் கொதிக்கும் வரை கிளறுங்கள். தண்ணீர் விரைவில் சூடாவதற்கு அடுப்பின் நெருப்பை மூன்றாவது கியரில் வைத்திருங்கள்.

(குறிப்பு: எப்போதுமே தேவைக்கு இரு மடங்கு தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள். பாதியைக் காலில் சிந்திக்கொண்டால்கூட மீதி வீணாகாமல் இருக்கும்.)

பாத்திரத்தில் நீர் மட்டம் உயரத் தொடங்கியதும் அடுப்பை அணையுங்கள். இப்போது அதே கரண்டியால் தண்ணீரை எடுத்து ஒரு டம்ளரில் ஊற்றுங்கள். அல்லது அந்தக் கரண்டியில் நீங்கள் ஆர்வம் இழந்துவிட்டிருந்தால் அதை சிங்க்கில் போட்டுவிட்டு வேறு கரண்டியைப் பயன்படுத்துங்கள்.

இப்போது நீங்கள் தயாரித்த உணவை சாப்பிடத் தயார்! பிரியாணிப் பொட்டலத்தைப் பிரியுங்கள். சாப்பிடத் தொடங்குங்கள். தேவைப்படும்போதெல்லாம் நீங்கள் வைத்த வெந்நீரைக் குடித்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் உங்கள் உழைப்பெல்லாம் வீணாகிவிடும்.

பிற்சேர்க்கை: இதைப் படித்துவிட்டுச் சில பேர் ‘தண்ணீர் போதுமே, வெந்நீர் எதற்கு’ என்று கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். ஆனால் குடிநீரைக் காய்ச்சிக் குடிப்பதுதானே நல்லது?

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar