கடிதம்: செய்தித்தாளைக் குழந்தைகள் பார்க்கலாமா?

in கடிதம்

பேரன்புடைய பேயோன் அவர்களே,

நான் காலையில் செய்தித்தாள் படிக்கும்போது எனது 8 வயது மகள் எட்டி பார்த்து அது என்ன, இது என்ன என்று ஒவ்வொரு கெட்ட செய்திக்கும் விளக்கம் கேட்கிறாள். அவை என்ன மாதிரியானச் செய்திகள் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. “போடி உள்ளே!” என்று திட்டவும் மனம் வரவில்லை. இதனை எப்படி சமாளிப்பது?

எல். குழந்தைஸ்வாமி,
திருப்போரூர்

அன்பின் குழந்தைஸ்வாமி,

செய்தித்தாள்களைப் பெரியவர்கள் படிப்பதையே நான் ஊக்குவிப்பதில்லை. நீங்கள் “என்னடா?” என்றால் குழந்தைகளைப் பற்றி, குறிப்பாகப் பெண் குழந்தைகளைப் பற்றி, கேட்கிறீர்கள்.

எத்தனையோ விஷயங்களைக் குழந்தைகள் எதிர்கொள்ளக் கூடாது என்று பொத்திப் பொத்தி வளர்க்கிறோம். செய்தித்தாளையும் பத்திரிகைகளையும் அவைகளில் சேர்த்துக்கொள்ளுங்கள். வளர்ந்த பின்பு தெரிந்துகொள்ள வேண்டிய யதார்த்தங்களை அவர்கள் பிஞ்சிலேயே பழுத்துவிட்டால் உலகைப் பற்றிய அவர்கள் பார்வை அவநம்பிக்கை மிகுந்ததாகிவிடும். ஆழமான புரிதலும் சரியான வழிகாட்டலும் இல்லாத அவநம்பிக்கை, விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே செய்தித்தாளைக் குழந்தைகளின் கைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.

உங்கள் குழந்தைக்கு உலகம் தெரிவது அவசியம் என்பதை மறுக்க முடியாது. இப்போதே தொடங்க வேண்டும் என்றால் அவளுக்கு “கோ கரிக்குலர் ஆக்டிவிட்டி”யாகத் தமிழ்த் திரைப்படங்களைப் பார்க்கச் செய்யுங்கள். வாரம் மூன்று படங்கள் என்ற டோஸ் சரியாக இருக்கும். அவள் மனமுதிரும் சமயத்தில் மனம் இறுகி உலகை எதிர்கொள்ளத் தயாராகியிருப்பாள். எல்லா அநீதிகளையும் வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு பகுதியாக ஏற்கும்படி அவள் பக்குவப்பட்டுவிடுவாள். அது வரை குழந்தையின் புத்தகங்களுக்கு அட்டை போடக்கூட செய்தித்தாளைப் பயன்படுத்தாதீர்கள்.

தவிரவும், செய்தித்தாள்கள் அவற்றின் உரிமையாளர்களின் வாழ்வாதாரத்திற்காக நடத்தப்படுபவை. அவர்களுக்கும் பேப்பர் கடைகளுக்கும் இடையிலான வியாபாரம். இது விசயத்தில் நாம் குறுக்கிட வேண்டாம்.

அன்புடன்
பேயோன்

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar