ஷிப்பிங் ஃப்ரீ

in கட்டுரை

பேருந்துப் பயணத்தில் பக்கத்து இருக்கையில் வந்து உட்கார்ந்தவரை நிமிர்ந்து பார்த்தால் வாசகர். புதிதாக வாங்கிய காஃப்கா சிறுகதைத் தொகுதியில் மூழ்கியிருந்தேன். முதல் கதையே தகராறு.

“என்ன புக்கு சார் அது?” என்றார் அவர்.

“இதுதான்” என்றேன் அட்டையைக் காட்டி.

“ஓ, காஃப்காவா? சூப்பர் சார், நான்கூட படிக்கணும்” என்றார்.

“வேணுமா?” என்றேன் புத்தகத்தை நீட்டி.

“இல்ல சார், நீங்க படிங்க.”

“முன்னூத்தம்பது ரூவாதான்.”

“இல்ல சார், வேணாம், நீங்க படிங்க.”

“அடடே, என்ன நீங்க இவ்ளோ கூச்சப்படறீங்க? நம்மளுக்குள்ள என்ன ஃபார்மாலிட்டி? வாங்கிக்குங்க! புது புக்கு!”

“எதுக்கு சார் இதெல்லாம்?”

“சரி, உங்களுக்காக முன்னூத்தி இருவது. இந்தாங்க, புடிங்க.”

வாசகர் ஏதோ உயரமான இடத்திலிருந்து குதிக்க வந்து மனம் மாறிக் கீழே இறங்க வழி தெரியாதது போல் விழித்தார். காசில்லையோ என்னவோ.

“கடசியா முன்னூர்ருவா. ஷிப்பிங் ஃப்ரீ” என்றேன்.

வாசகர் நல்ல புத்தி வந்து பர்ஸிலிருந்து முன்னூறை எடுத்துத் தந்துவிட்டுப் புத்தகத்திற்குக் கை நீட்டினார்.

“இனிமே புஸ்தகம் உங்களுதுதானே, படிச்சிட்டுத் தரேன்’ என்று ஜன்னலோரமாக வைத்துக்கொண்டேன்.

வாசகர் கண்டிப்பாக ஏதோ ஒரு இனம்புரியாத உளைச்சலில் மௌனமாக இருந்தார்.

“அப்புறம் சமீபத்துல என்ன படிச்சீங்க?” என்றேன்.

அவருக்குப் பேச்சு வராமல் சிவாஜி போல் உதடுகள் துடித்தன. எனக்கு உடனே புரிந்துவிட்டது.

“நம்ம புக்கு ஏதாவது படிச்சீங்களா? சாரிங்க.”

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar