கானலைத் தேடும் தண்ணீர்கள்

in கட்டுரை

இந்த மாதிரி எத்தனை எழுத்தாளர்களுக்கு நடக்கிறது என்று அறிய ஆவல். இன்று காலை பக்ரீத்தைக் கொண்டாட ‘வெல்கம் புக்ஹவுஸ்’ என்ற சற்றுப் பெரியதொரு புத்தகக் கடைக்குச் சென்றிருந்தேன்.

வழக்கம் போல் தமிழ்ப் புத்தகப் பகுதியில் நின்று ஒரு சிறுகதைத் தொகுப்பை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். சற்று நேரத்தில் என் அருகே ஒருவர் வந்து என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவரும் ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தார். தற்செயலாக, அது “கானலைத் தேடும் தண்ணீர்கள்” என்ற என்னுடைய கட்டுரை நூல். அவர் என் பக்கம் திரும்பி, “சார், உங்க புக்குதான்!” என்று இளிப்பார் என எதிர்பார்த்தேன். ஆனால் அவருக்கு என் முகம் தெரியவில்லை.

மனிதர் புத்தகத்தில் ஆழ்ந்தார். என் கவனம் அவர் மீதுதான் இருந்தது. படித்துக்கொண்டிருந்தவர் சில நொடிகளில் “ஹ!” என்றார். இன்னும் சில கணங்களுக்குப் பின்பு “ஐயையோ!” என்று கூவினார். கல்லாவில் இருந்தவரும் ஆங்காங்கே நின்ற வாடிக்கையாளர்களும் அவர் பக்கம் எட்டிப் பார்த்தார்கள். அவரோ எதையும் கவனிக்க முடியாதபடிக்கு மிக ஆழமாக உள்ளே போயிருந்தார்.

“ஹெஹ்ஹெஹ்ஹே, என்னய்யா இது, ம்?” என்றார் அடுத்து. பிறகு “அகிலாண்டேஸ்வரி!” என்றார் அரை விம்மலாய். சிறிது நேரம் மறுப்பது போல் தலையசைத்துக்கொண்டே சில பக்கங்களைக் கடந்தார். பின்பு இரு கைகளிலும் புத்தகத்தைத் தாங்கிப் பிடித்திருந்தவர் ஒரு கையால் சரக்கென்று ஒரு பக்கத்தைக் கிழித்து அதே வேகத்தில் கசக்கித் தலைக்குப் பின்னால் தூக்கியெறிந்தார், படிப்பதைத் தொடர்ந்தார்.

இப்போது ஒருவர் கல்லாக்காரரை நெருங்கி விசாரித்தார். பின்னவரின் பதிலில் வெளிப்பட்ட தகவல்கள்: புத்தகதாரி அந்தக் கடையின் நீண்டகால வாடிக்கையாளர், நிறைய காசு கொடுத்துப் புத்தகங்களை அள்ளிச் செல்வார், பெரிய படிப்பாளி, நன்றாகப் பழகுவார்; அவர் இவ்வாறு நடந்துகொள்வது இதுவே முதல் முறையாகும்.

புத்தக மனிதர் திறந்துவைத்திருந்த பக்கத்தினுள் சத்தம் மட்டும் அதிகம் வரும் விதமாக “தூ!” என்று துப்பினார். சில பக்கங்களுக்குப் பின்னர் நிலைகுலைந்து அருகில் இருந்த தூணை ஒரு கையால் கட்டிப்பிடித்துக்கொண்டார். பின்பு சுதாரித்து நின்று புத்தகக் கடையின் கூரையைப் பார்த்து “கன்னி மூல கணபதி பகவானே!” என்று சொல்லிவிட்டு புத்தகத்தாலேயே முன்மண்டையைப் பல முறை அறைந்துகொண்டார். பிறகு எதுவுமே நடக்காதது போல் தொடர்ந்து படிக்கத் தொடங்கினார். என் புத்தகத்தின் உள்ளடக்கத்தை அவர் மன்னித்து ஏற்றுக்கொண்டுவிட்டது போல் தெரிந்தது. ஆனால் அவரது உள்-அமைதி வெகுநேரம் நீடிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து உறுமினார். அவர் முகம் உக்கிரத்தில் சிவந்து வியர்த்தது. எனக்கு மனதில் ஒரு கணம் ஞான ஒளி சிவாஜி எட்டிப் பார்த்துவிட்டுப் போனார்.

புத்தகக்காரர் புத்தகத்தின் முடிவுக்கு வந்தார். பின்னட்டையைப் பார்த்தார். அதில் என் புகைப்படத்தைப் பார்த்தார். பிறகு மெல்லத் தலையைத் திருப்பி என்னைப் பார்த்தார். அவரது கண்கள் வெளிறிப்போயின. மீண்டும் புகைப்படத்தைப் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டார்.

“ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” என்றேன் அவரிடம் அமைதியாக. பின்பு மெல்லிய நடிப்புப் புன்னகையுடன் மெல்ல விலகி நடந்து ஓடியே போய்விட்டேன்.

Tags: , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar