பனிப் புயல்

in சிறுகதை

இமாலயக் குளிர் என்பார்களே, அப்படி இருந்தது. தாங்கவில்லை. அந்த பூதாகாரமான மேட்டைப் பற்றி என்னுடைய முதல் மனப்பதிவு அதுதான். நான் ஒரு ஆளே ஏழு அங்குல தடிமனுக்கு ஆடைகள் அணிந்திருந்தேன். மற்றவர்களும் நடமாடும் பலூன்களைப் போல் நடமாடிக்கொண்டிருந்தார்கள். மூன்று லார்ஜ் ராணுவ ரம் உள்ளே போனதில் சற்றுப் போதை இருந்ததே ஒழியப் பற்கள் தந்தியடிப்பதை நிறுத்தவில்லை. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுப் பயிற்சியில் தேற்றிய உடலை மது அருந்தி வீணாக்குகிறோமே என்று குருராஜன் புலம்பினான். காற்றோடு வந்த பனித் துகள்கள் எங்கள் மீசை, தாடியை நரையாக்கியிருந்தன. ஏன், எங்களைச் சுற்றி இருந்த மலைகள் எல்லாமே பனியால் நரைத்திருந்தன.

நாங்கள் அலுவலகத்திற்கு ஆளுக்கொரு மாதம் விடுமுறை போட்டுவிட்டுக் கிளம்பியபோது மொத்தம் 12 பேர் இருந்தோம். குளிரில் விறைத்தும் ஆபத்தான சரிவுகளில் வழுக்கி விழுந்தும் இனம்புரியாத காய்ச்சல்களிலும் செத்துப்போன ஏழு பேர் தவிர இப்போது ஐந்து பேர்தான் பாக்கி. பாதாளப் பிராப்தி கிடைத்த இருவர் எங்கள் சப்ளைப் பொதிகளில் பாதியை எடுத்துக்கொண்டு போனதுதான் பெரிய அடி. கடைசியில் ஷெர்ப்பா மட்டும்தான் உயிரோடு இருப்பான் என்றான் ஷர்மா.

எங்கள் ஷெர்ப்பா ஒரு கில்லாடி கில்பர்ட். மைனஸ் 25 டிகிரியில்கூட அவனுக்குப் பற்கள் நடுங்கவில்லை, உதடுகள் வெடிக்கவில்லை. எங்கள் அவஸ்தைகளைப் பார்த்து முன்பே இடுங்கிய கண்கள் முழுசாய் மூடிக்கொண்டு சிரிப்பான் (அப்படி ஒருமுறை அவன் சிரித்தபோது நாங்கள் அருகிலிருந்த பாறைகளுக்குப் பின்னே ஓடி ஒளிந்துகொண்டோம். சிரித்து முடித்துவிட்டுச் சில நொடிகள் எங்களைத் தேடிக்கொண்டிருந்தான்). எது எப்படியோ, எங்கள் உயிர்ப்பிழைப்பு அவனை நம்பித்தான் இருந்தது.

இப்போது அவனை நினைக்கும்போது மனதில் ஒரு சித்திரம் வருகிறது. முதலில் அதை வடித்துவிடுகிறேன். ஷெர்ப்பாவுக்கு வயது ஐம்பதுக்கு மேல் இருக்கும். எப்போதும் குளிர்ச்சியான வானிலையில் இருந்ததால் வயதுக்கு மீறிய முதுமை எதுவும் தெரியாமல் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவன் போலத்தான் இருந்தான். அவன் முகம் தோலுரித்து நல்ல சூட்டில் நெருப்பில் வாட்டிய உருளைக்கிழங்கு போல் இருந்தது. மது வாடையும் பீடா வாடையும் மாறி மாறி அடித்தன. அடிக்கடி ரத்தத்தைத் துப்பிக்கொண்டிருந்தான். ஆனால் ஆரோக்கியமான ஆள். அவனைக் காட்டிலும் வயதில் குறைந்த எங்களையெல்லாம்விட.

தவிரவும் அவன் மரணத்தைப் பார்த்திருந்தான். அடுத்தது நாமா அல்லது பக்கத்து ஆளா என ஒவ்வொருவரும் ஆதங்கப்பட்டுக்கொண்டிருக்கையில் அவன் எங்களில் ஏழு பேரை வழியில் ஆங்காங்கே புதைத்திருந்தான். செத்த எழுவரில் நான்கு பேர்தான் கிறிஸ்தவர்கள் (ஒரு வெள்ளைக்காரன், ஒரு தென்கொரியன், இரு இந்தியர்கள்). ஆனால் அவன் ஒவ்வொருவரையும் புதைத்த பின் மரக்கட்டைகளால் செய்த ஒரு திடீர்ச் சிலுவையை நட்டுவைத்தான். இமாலய மலையேறிகளுக்கு வழிகாட்டும் வேலையில் பாதி அவர்களைப் புதைப்பதுதான் போலும்.

இந்த குருராஜன் என்பவன் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி. வயது 30க்கு மேல் இருக்காது. எதிலேயோ கொள்ளை லாபம் அடித்து விருப்ப ஓய்வு பெற்றவன். அவனுக்கு ஷெர்ப்பா மேல் சந்தேகம் இருந்தது. எங்களை எங்கேயாவது அழைத்துச் சென்று பள்ளத்தில் தள்ளிவிட்டு சப்ளைகளைத் திருடிக்கொள்வான் என்று பயந்தான் குருராஜன். அந்தப் பொல்லாத பயம் எங்களையும் தொற்றாமல் இல்லை. எனினும் பள்ளத்தில் தள்ளப்பட்டுக் குளிரில் விறைத்துச் சாவதைவிட சப்ளைகள் திருடுபோவது பற்றித்தான் அதிகம் கவலைப்பட்டோம். இமய மலையேற்ற அனுபவசாலிகளுக்கு இந்தப் பயம் புரியும். நாங்கள் வெறும் வங்கி அதிகாரிகள், குருராஜனைத் தவிர. அவன் ஓய்வு. எங்களுக்கு நறுவிசாக டை கட்டத் தெரியும். உறைகுளிரில் சாகாமல் இருக்கத் தெரியாது. பரங்கிமலையில் மேற்கொண்ட பயிற்சி இமயமலைக்குப் போதவில்லை. இத்தனைக்கும் நாங்கள் உச்சி மார்கழியில் பயிற்சி பெற்றோம். நானும் கொடைக்கானலைவிட நான்கு மடங்கு உயரம், அவ்வளவுதானே, சமாளித்துக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன். கடைசியில் அது முற்றிலும் வேறுபட்டதொரு பந்து விளையாட்டாக இருந்தது.

எதற்கு இவ்வளவு பீடிகை? நல்ல கேள்வி. சுருங்கச் சொன்னால் எங்கள் ஷெர்ப்பா திடீரென்று இறந்துவிட்டான். அது எங்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. அந்தக் காற்றில் ஷெர்ப்பாவைத்தான் நாங்கள் நம்பியிருந்தோம். மாரடைப்பு என்றான் சண்முகம். ஷெர்ப்பாவின் உடல் குளிர்ந்துபோய் சொரசொர என்று ஆகியிருந்தது. நாங்கள்கூடக் குளிர்ந்து சொரசொரத்திருந்தோம். அந்த இடத்தின் சீதோஷ்ணமே அப்படி. எங்கள் ஐந்து பேரில் மாரடைப்பு பற்றி அதிகம் தெரிந்தவன் நுங்கம்பாக்கம் கிளையின் சண்முகமே. அவனது உறவினர்கள் பலர் இதயம், நீரிழிவு, காசம், சிறுநீரகம் எனப் பல்வேறு நோய்களால் இறந்திருந்தாலும் கடைசியாக எல்லோரையும் மாரடைப்புத்தான் காவு கொண்டது. ஷெர்ப்பாவுக்கு மூச்சு நின்றுவிட்டதா என்று பார்க்க விழைந்தான் சண்முகம். ஆனால் ஒரு பனிப்புயலின் ஒரு பகுதி போல் வீசிக்கொண்டிருந்த கனத்த காற்று அதற்குப் பேரிடைஞ்சலாக இருந்தது. ஷெர்ப்பாவின் நாசித் துவாரங்களுக்கு அருகில் புழங்கிய காற்று மூச்சுக் காற்றா பனிப்புயல் போட்ட குட்டியா என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஷெர்ப்பாவைக் கிள்ளியும் உதைத்தும் சிகரெட்டால் சுட்டும் கத்தியால் லேசாகக் கீறியும் பார்த்த பின்பு அவன் இறந்துவிட்டதாக ஏகோபித்து முடிவு செய்தோம்.

இப்போது ஷெர்ப்பாவைப் புதைக்கும் வேலை என் தலையில் விடிந்து தொலைக்குமோ என்று நான் உள்ளூர அஞ்சுகையில் ஆபத்பாந்தவனாய் தனஞ்சை செயல்பட்டான். இந்த எதிர்ப் பனிப்புயலுடன் மல்லுக்கட்டியவாறு பள்ளம் தோண்டுவதெல்லாம் வங்கி அதிகாரிகளுக்கு ஆகாத காரியம் என்றான் தனஞ்சை. அது மட்டுமின்றி, ஒருவேளை ஷெர்ப்பா அவன் செத்துவிட்டான் என்ற எங்கள் தீர்மானத்தையும் மீறி உயிரோடு இருந்தால்? புதைப்பது அவனை நிரந்தரமாய்ச் சாகடித்துவிடும்தானே? அது கொலை ஆகிவிடும் அல்லவா? ஆகையால் அவனை அப்படியே போட்டுவிட்டுப் போகலாம் என்று முடிவானது.

குருராஜன் உடனே ஷெர்ப்பாவின் பெரிய முதுகுப் பையில் என்னென்ன இருக்கிறது என்று ‘இன்வென்டரி’ எடுக்கத் தொடங்கினான். மற்ற அனைவரும் அதில் ஆர்வத்துடன் பங்கேற்றோம். ஓர் உபரி சுத்தியல், நான்கு ஜோடி சுருட்டுகள், மூன்று புட்டி ரம், ஒரு புட்டி பிராந்தி, உலர்ந்த முழு பிரெட்டுகள் இரண்டு, சுக்கா ரொட்டிகள் ஆறு, உலர்ந்த பழங்கள் மற்றும் கொட்டைகள் சுமார் கால் கிலோ, கெட்டி ரக நைலான் கயிறு, டைனமைட் குண்டுகள் இரண்டு, மிகப் பழைய ஒளிவீச்சுத் துப்பாக்கி (flare gun) ஒன்று, கம்பளிப் போர்வை, மருந்து வகைகள் சில, ஒரு கத்தி கபடா தொகுதி, நேபாள எழுத்துக்கள் போட்ட டர்க்கி டவல் ஒன்று, விநோத அலங்காரங்களால் மறைக்கப்பட்ட சாமி படம் சிறியது ஒன்று, மாற்று ஆடைகள் பூஜ்யம். இவை போக அவன் அணிந்திருந்த நல்ல பூட்ஸ், ஒரு நீண்ட வேட்டைக் கத்தி, ஆக்சிஜன் டப்பாக்கள், ஸ்வெட்டர்கள், குல்லாய்கள், பைனாக்குலர் மற்றும் பிற பயனுள்ள லொட்டு லொசுக்குகளையும் கணக்கில் சேர்த்தோம். இது தவிர இரு கைகளுக்குமான ஊன்றுகோல்கள்.

குருராஜன் ஷெர்ப்பாவை நிர்வாணமாக்காமல் விட மாட்டான் போலிருந்தது. நாங்கள் அதை ஏற்கவில்லை. ஷெர்ப்பாவின் பையில் இருந்த பொருட்களை மட்டும் எடுத்துக்கொள்ளத் தீர்மானித்தோம். பஞ்சகாலங்களில் அவை உதவக்கூடும். வெடிகுண்டுகளைப் பயன்படுத்தத் தெரியாததால் அநாவசியத் தற்கொலையில் இறங்க விரும்பாமல் அவற்றை விட்டுவிட்டோம். இத்தனை முக்கியமான பொருட்களைப் பார்த்த பின்பு ஷெர்ப்பா உயிரோடு இருக்க சாத்தியம் இல்லை என்று எங்களுக்குத் தோன்றியது. இருவாரகாலம் எங்களுக்கு வழிகாட்டிய ஷெர்ப்பாவுக்கான இறுதி மரியாதையாக அவனது ஆடைகளைச் சூறையாடாமல் விட்டுச் சென்றோம். எங்கள் ஷெர்ப்பாவின் பெயர்கூட எங்களுக்குத் தெரியவில்லை என்பது எங்கள் மனதைக் கனக்கச்செய்தது. அவன் சொன்னான். எங்களுக்குத்தான் குளிரில் மறந்துபோனது – எல்லோருக்குமாய். அதோடு முடிந்தது ஷெர்ப்பாவின் கதை.

ஷெர்ப்பா இல்லாத பயணத்தின் அபாயத்தை குருராஜனின் முதல் யோசனையில் உணர்ந்தேன். எங்கேயாவது உட்காரலாமா என்றான் குரு. ஷெர்ப்பாவின் மரணத்திற்குப் பின்பு எங்கள் எடை அதிகரித்திருந்தது என்னவோ உண்மைதான். அதற்காக எதிரில் என்ன இருக்கிறது என்று தெரிய விடாத ஒரு பனிக் காற்றுக்கு இடையே, கூடாரத்துக்குள்தான் என்றாலும், இளைப்பாறுவது மடத்தனமாகத் தெரிந்தது. சிரமத்தைச் சமாளிக்க ஷெர்ப்பாவின் சாராய புட்டி ஒன்றைத் திறந்து பரிசோதனை ரீதியாகச் சில மடக்குகளைக் குடித்தோம். சில நூறு அடிகளுக்குக் கீழ் நாங்கள் வாயைத் திறந்தால் வெறும் நீராவிதான் வந்தது. இங்கே நாங்கள் பேசினால் நீராவி வெளிப்பட்டு உடனே உறைந்து தூளாகித் தொப்பென்று கீழே உதிர்ந்தது ஆலங்கட்டி மழையாய். அவை நமது வார்த்தைகளாக இருக்கக்கூடும் என்றார் கவிஞர் தனஞ்சை. எப்படிப் பார்த்தாலும் அவை ஐஸ் கட்டிகள்; எனவே அவை மேல் கால் வைத்து வழுக்கி விழாமல் நடப்போம் என்றான் சரவணன் என்ற இன்னொரு சகபயண வங்கி அதிகாரி.

சிறிது நேரம் இப்படி விளையாடிய பின்பு சண்முகம் வரைபடத்தை வெளியே எடுத்தான். சண்முகம்தான் எங்களுக்கு ‘ஒழுங்காக்கி’. எனக்கெல்லாம் வழி சொன்னால் புரிந்துகொள்ளத் தெரியாது. சண்முகத்தைப் புதிய ஷெர்ப்பா என்றோம். அவன் அதைக் கேட்டு முதலில் பெருமைப்பட்டாலும் பிறகு முகம் சிறுத்து அப்படி அழைக்க வேண்டாம் என்றான். எங்கள் இலக்கு நெல்சன் சிகரம் என்ற இடம். ஏழை மனிதனின் எவரெஸ்ட் என்று பெயர் பெற்ற அந்த இடத்தை அடைய இன்னும் 4 மேல்நோக்கிய கிலோமீட்டர்கள் இருந்தன. அதாவது கிட்டத்தட்ட 13,000 அடிகள். “பதிமூன்றாயிரம் அடிகள்” என்பது ஒரு சாமியாரின் பெயர் போலிருப்பதாகக் குருராஜன் அபிப்பிராயப்பட்டான். அணிந்திருந்த ஆடைகள் மற்றும் இதர சுமைகளையும் ஏறியேறிக் கனத்த தொடைகளையும் தூக்கிக்கொண்டு ஏற முடியாது என்று தோன்றியது எனக்கு. மூட்டுவலி வேறு ‘இப்போது வரலாமா, அல்லது இன்னும் கொஞ்ச நேரம் போகட்டுமா?’ என்று கேட்டுக்கொண்டிருந்தது. இந்தக் குளிரில் தாகம் எடுக்கவும் வழி இல்லை. சொன்னேன். ஆமோதித்தார்கள். ஆனால் அகதிப் பனிக் கரடிகள் போல் அலையாமல் உண்ண உணவு, இருக்க இடம், பிடிக்க சூடு எல்லாம் கிடைக்குமிடம் நெல்சன் சிகரம்தான். அதை அடைவதற்கு முன்பு ஓய்வில்லை என்று முடிவாகச் சொல்லிவிட்டான் எங்கள் திடீர்க் கொடுங்கோலன் சண்முகம்.

இரண்டாயிரம் அடிகூடத் தாண்டியிருக்க மாட்டோம். அதற்குள் பிரச்சினை ஷெர்ப்பாவின் உருவில் வந்தது. உண்மையில் ஷெர்ப்பா சாகவில்லை. அதற்கு பதிலாக, அவன் விழித்தெழுந்து எங்களைத் தேடத் தொடங்கியிருந்தான். என்ன சிக்கல் என்றால் நாங்கள் அவனைக் கத்தியால் குத்திக் கொல்ல முயன்று சப்ளைகளைத் திருடிச் சென்றுவிட்டதாக ஷெர்ப்பா நம்பியது போல் தெரிந்தது. அரைகுறை இந்தியில் அவன் இதைக் கத்தியதை அனைத்திந்திய வேலைவாய்ப்புக்காக ராஷ்ட்ரபாஷா முடித்த குருராஜன் சொன்னான். அது பொய் என்று அதைவிட மோசமான அரைகுறை இந்தியில் திருப்பிக் கத்த எங்களுக்குக் குரல் இல்லை. ஒரு மாதக் குளிர் மலையேற்றம் எங்களை அதற்குத் தயார்ப்படுத்தவில்லை. திடீரென்று நாங்கள் எதிரெதிர்ப் போரிடும் தரப்புகளானோம். ஷெர்ப்பா எங்களை நெருங்க விடவில்லை. பனியை உருண்டை பிடித்து வீசினான். பிறகு பெரிய கற்களை வீசினான். பின்பு என்ன நினைத்தானோ, டைனமைட் குண்டை வீசினான். மூவர் சிதறினோம். குருராஜனுக்கு ஒரு கால் தெறித்து விழுந்தது. அவனது ரத்தம் உடனே உறைந்தது. ஷெர்ப்பா அதைப் போர் நிறுத்தமாகக் கருதுவான் என்று நம்பி குருராஜனுக்கு அவசரமாகக் கட்டுப் போடத் தொடங்கினோம். கட்டுப் போட்டு முடித்த பின்புதான் தெரிந்தது எங்கள் உழைப்பு வீண் என்று. ஒரு கால் போனதற்கே அவன் நிரந்தரமாக விடைபெற்றிருந்தான். செய்த பாவத்துக்குக் கூலி கிடைத்துவிட்டதாக நினைத்திருப்பான் குருராஜன். அவன் கும்பிட்ட தெய்வம் அப்படி.

நாங்கள் பயந்துபோனோம் என்பதைச் சொல்ல மறந்துவிட்டேனே. எங்களுக்கு ஒதுங்கக் கிடைத்த இடம் ஒரு முதிர்ச்சியற்ற குகை. அதன் சுவர் இரண்டடி ஆழம்தான் இருந்தது. குடையாமல் மேற்கொண்டு உள்ளே போக முடியாது. காற்றில்லாத மழைக்குச் சிறிது நேரம் ஒதுங்கலாம். ஒருபக்கம் சீனர்கள், இன்னொரு பக்கம் பாகிஸ்தானியர்கள், எங்கள் பக்கம் இந்தியர்கள். மூவரில் யாராவது உதவுவார்கள், தாக்குவார்கள், எந்த வழியிலாவது குறுக்கிட்டுக் காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்த்தோம். கதகதப்பான சிறை அறைக்கு மனம் ஏங்கியது. ஏதேனும் நடக்கும் வரை போர்த்திக்கொண்டு காத்திருந்தோம். அது ஷெர்ப்பா எங்களைச் சந்தடியில்லாமல் நெருங்க மட்டுமே வழிசெய்தது. ஸ்வெட்டர்கள், உபரி ஆடைகள் எவையும் இன்றி வெறும் சட்டை, பேண்ட், ஹவாய் செருப்புடன் அரை நிர்வாணமாகத் தெரிந்தான் ஷெர்ப்பா (நாங்கள் விட்டுச்செல்ல முடிவெடுத்த பொருட்களை குருராஜன் தனக்குக் கிருஷ்ணார்ப்பணம் செய்துகொண்டது எனக்குத் தெரியாது).

கண்களில் கொலை வெறி, நெற்றியிலும் மூக்கிலும் பான் பீடா கரைசல் என ஷெர்ப்பா ஒரு நவயுக ஜெங்கிஸ் கான் போல் தோற்றமளித்தான். நாங்கள் அவனிடம் பரிபாஷையில் பேச முயன்றோம். தனஞ்சை எங்களைக் கைநிறுத்தினான். நான் போய்ப் பேசுகிறேன் என்றான். பர்ஸிலிருந்து மனைவி, குழந்தைகள் அடங்கியதொரு புகைப்படத்தை எடுத்து உயர்த்திக் காட்டிக்கொண்டு ஷெர்ப்பாவை நெருங்கினான். ஷெர்ப்பாவின் காட்டுத்தனமான கத்தி வீச்சில் புகைப்படம் தனஞ்சையின் கையோடு சேர்ந்து தூர விழுந்தது. பனியில் கிடந்த குடும்பப் புகைப்படத்தைப் பார்த்து தனஞ்சைக்கு வெறி வந்தது. ஷெர்ப்பா மீது பாய்ந்தான். ஷெர்ப்பா கத்தியை தனஞ்சையின் பாய்ச்சலுக்கேற்பப் பிடித்துக்கொண்டு பக்கவாட்டில் நகர்ந்துகொண்டான். தனஞ்சை சிறிய வாழை மரம் போல் கீழே விழுந்தான். விழுந்தபோது அவனுக்காக ஷெர்ப்பா நீட்டிப் பிடித்திருந்த கத்தியில் கழுத்து கொஞ்சம் அறுபட்டது. அசையாத கோலத்தில் குப்புறக் கிடந்த தனஞ்சையின் வலதுகை பனியை அள்ள முயன்றது. ஆனால் அதைத் தூக்கி ஷெர்ப்பா மேல் எறிவதற்குப் புரண்டு படுத்து எழுந்து உட்கார வேண்டும் என்பதை உணர்ந்தானோ, உயிர்தான் பிரிந்ததோ, தனஞ்சையின் கை பனியின் மீதான பிடியைத் தளர்த்தியது. அவனுக்கு இனிமேல் குளிர்ந்திருக்காது.

நானும் சரவணனும் ஷெர்ப்பாவிடமிருந்து தோராயமாகப் பத்தடி தூரத்தில் ஒரு பாறைக்குப் பின்னால் ஒளிந்திருந்தோம். மலையோடு மலையாக ஒட்டிக்கொண்டிருந்த அந்தப் பாறை எங்கள் இடுப்பளவுதான் இருந்தது. ஷெர்ப்பா சாவகாசமாக தனஞ்சையின் குளிராடைகளையும் பூட்ஸையும் கழற்றி அணிந்தான். அடுத்து கத்தியை சோம்பலாய்ச் சுழற்றியபடி எங்களை நோக்கி மெல்ல வந்தான். நானும் சரவணனும் அவசரமாக ஷெர்ப்பாவுக்குச் சொந்தமான பைக்குள் கை விட்டுத் தேடினோம். ஆளுக்கொரு முனையைப் பிடித்து ஃப்ளேர் துப்பாக்கியை வெளியே எடுத்தோம். அதைப் பிரயோகித்துப் பலனில்லாவிட்டால் ஷெர்ப்பா எங்களை மிக மெதுவாகக் கொல்ல வாய்ப்பிருந்தது. எனக்கொரு ஒரு யோசனை தோன்றியது. ஒரு சாராய புட்டியை எடுத்து அவனிடம் காட்டினேன். ஷெர்ப்பா திகைத்து நின்றான். பிறகு தூக்கிப் போடு என்று சைகை செய்தான். நான் பயங்கலந்த கவனத்தோடு அதை அவன் மேல் எறிந்தேன். ஷெர்ப்பா அதைப் பிடித்து உடனே பல்லால் திறந்து தொடர்மடக்குகளில் சுமார் 200 மில்லி குடித்தான். பிறகு வேட்டைக் கத்தியை அதன் உறையில் சேர்ப்பித்தான். இளித்தபடி எங்களை நோக்கி நடந்து வந்தான். நாங்களும் நிம்மதியில் அளவுக்கு மீறிப் பல்லைக் காட்டிக்கொண்டும் இருகைகளையும் துப்பாக்கி முனையில் போல் உயர்த்திய நிலையிலும் அவனை நோக்கி நடந்தோம். அங்கேயே இருங்கள் என்று சைகை செய்தான் ஷெர்ப்பா. திடீரென்று காற்றின் ஓலம் பெருத்தது, யாரோ வீசியெறிந்தது போல் முகத்தில் உறைபனி அடித்தது. ஷெர்ப்பா காலி சாராய புட்டியை உயரமான ஒரு பாறை மேல் தூக்கியடித்து உடைத்தான்.

சாராயத்தை வீசியது என்னைப் பற்றிய நம்பிக்கையை ஷெர்ப்பாவின் மனதில் விதைத்துவிட்டது போல் தெரிந்தது. அவனும் எங்கள் இரண்டடிக் குழிவில் ஒண்டிக்கொண்டான். எதுவும் நடக்காதது போல் மழலை இந்தியைக் கைவிட்டு ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினான். நானாவது உடைந்த ஆங்கிலத்தில் பேசுவேன். ஷெர்ப்பாவின் ஆங்கிலம் ‘நன்கு பொடித்தது’. எங்கள் வசதிக்கு அவன்தான் கிடைத்தான். இருந்தாலும் அவன் சொல்லவந்ததை எங்களுக்குப் புரியவைத்துவிட்டான். சமீபத்தில் இறந்தவர்கள் தன்னைக் கொல்ல முயன்றதால்தான் செத்தார்கள் என்றும் மற்றபடி அவன் ஒரு குழந்தை போல என்றும் ஷெர்ப்பா நெஞ்சைத் தொட்டு விளக்கினான். கடுந்தென்றல் புயலாகி நம்மை உயிரோடு புதைப்பதற்குள் நெல்சன் சிகரத்தை அடைவதுதான் புத்திசாலித்தனம் என்றான். எங்களைப் போன்ற சோப்ளாங்கிக் கற்றுக்குட்டிகளை வைத்துக்கொண்டு இலக்கை எட்டுவதற்குக் குறைந்தது ஒருநாள் ஆகும் என்றான் ஷெர்ப்பா. அந்த 13,000 அடிகளில் 11,000 பயணப்படாமல் அப்படியே இருந்தன. ஷெர்ப்பா விவகாரம் நடந்திராவிட்டால் ஐந்து பேரும் உயிரோடு 5000 அடி ஏறியிருப்போம். இனி திரும்பிப் போக முடியாது. உலகிலேயே மிக உயரமான புலி வாலைப் பிடித்த கதை எங்களுடைய இந்தப் பயணம்தான்.

பேசிக்கொண்டே ஷெர்ப்பா இடுப்பிலிருந்து வேட்டைக் கத்தியை எடுப்பதைக் கவனித்தேன். மெதுவாக ஒரு பதற்றம் பற்றிக்கொண்டாலும் மேலுக்கு அலட்டிக்கொள்ளாமல் இருந்தேன். கத்தியை எடுக்கிறான் பார் என்ற முணுமுணுப்பைக் கேட்டுத் திரும்பிப் பார்த்த இடத்தில் சரவணனுக்கு பதிலாக குருராஜன் இருந்தான். அவனுக்கு இரண்டு கால்கள் இருந்தன. பிராணவாயு குறைவான அதிஉயரச் சூழல்களில் தோற்ற மயக்கங்கள் ஏற்படுவது பற்றி எங்களுக்குச் சொல்லப்பட்டிருந்தது என்றாலும் சந்தேகத்திற்கிடமின்றி அங்கே இருந்தது குண்டுவெடிப்புக்கு முந்தைய குருராஜன்தான். இருந்த நிலைமையில் அருகாமைக்காரன் யாராக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தேன். கண்ணில் புலப்படுபவனாக இருந்தால் போதும்.

உடனே நெல்சன் சிகரத்தின் மலையேறிகள் குடிலை அடைந்து படுத்துக்கொள்ளலாம் என்று இருந்தது. அதைவிட மே மாத வெயிலுக்கான தேவை அதிகம். ஆனால் அது சென்னைக்குப் போனால்தான் கிடைக்கும். ஷெர்ப்பா கத்தி விளிம்பால் அடுத்த சாராய புட்டியை நெம்பிக் கிழித்துத் திறந்தான். இடதுகையால் புட்டியை உயர்த்தி வேகமாகச் சில மடக்குகள் குடித்தான். வேண்டுமா என்று எங்களைக் கேட்டான். நான் மறுக்க, சட்டெனக் கத்தியை நீட்டி குருராஜனின் கழுத்தில் செருகினான். “ராமச்சந்திரப் பிரபுவே” என்று கத்த முயன்று கத்தியைப் பிடித்துக்கொண்டு சரிந்தான் குருராஜன். “ராமச்சன்” வரைதான் சொன்னான். “திரப் பிரபுவே” சிவப்புத் திரவமாக வாயிலிருந்து பொங்கி வந்து அவன் மார்பிலும் நிலத்திலும் கொட்டியது. அருகில் இருந்தவன் குருராஜன்தான் என்று உறுதியானது. சற்று முன்பு ஒரு காலையும் உயிரையும் இழந்தவன் சரவணனாக இருக்கலாம். இழவெடுத்த பனிப் பொழிவில் யார் முகமும் சரியாகத் தெரியவில்லை.

ஷெர்ப்பா இன்னும் சில மடக்குகள் எடுத்தான். நான் எதுவும் சொல்லத் தெரியாமல், நடந்த சம்பவத்தை அவன் விளக்குவான் என்ற நம்பிக்கையில் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். ‘இவன்தான் நம் பிரச்சினைகளுக்கெல்லாம் குற்றவாளி; இனிமேல் தடையின்றி நிம்மதியாகப் பயணிக்கலாம்; கவலைப்படாதே, எண்ணி நான்கு மணிநேரத்தில் இவனை மலை மூடிக்கொள்ளும்; எப்படியும் சப்ளைப் பஞ்சத்தோடு உயிருடன் இருந்திருந்தால் இவர்கள் எல்லோரும் மூளை வீங்கிச் செத்திருப்பார்கள்’ என்றான் ஷெர்ப்பா. எனக்கு பயமாக இருந்தது. மரணத்தை அவ்வளவு பக்கத்திலிருந்து பார்த்ததில்லை. ஷெர்ப்பா திடீரென்று சரளமாகத் தமிழ் பேசத் தொடங்கியிருந்ததும் நல்ல அறிகுறியாகப் படவில்லை. நண்பர்களும் வேண்டாம், எதிரிகளும் வேண்டாம்; எல்லோரையும் கொன்றுவிட்டு எங்காவது ஒதுங்கிவிடுவோம் போல் இருந்தது. ஒதுங்குவதற்கு இருந்த ஒரே இடம் நெல்சன் சிகரம். அதை அடைய ஷெர்ப்பா வேண்டும். அதற்குப் பின்பு முடிந்தால் ஹெலிகாப்டர் இரவல் கேட்டுக் கொஞ்சம் தாழ்வான இடத்திற்குப் போய்ச் சேரலாம். அதன் பிறகு மொத்தமாகத் தரையிறங்குவது எளிதாக இருக்கும்.

“நெல்சன் சிகரம் போயாக வேண்டும் ஷெர்ப்பா” என்றேன்.

“இல்லை, நாம் கீழே போகிறோம்” என்றான் ஷெர்ப்பா.

நான் பதறினேன். கீழே போக நாட்கணக்கு ஆகும். உயிரோடு அடிவாரத்தை அடைவதாவது!

“ஷெர்ப்பா உன்னைக் கூட்டிச் செல்வான். ஷெர்ப்பாவை நம்பு. ஷெர்ப்பாவுக்கு எல்லாம் தெரியும்” என்றான், வேறு யார், ஷெர்ப்பாதான். “வெறும் கயிற்றைப் பிடித்துக்கொண்டு பாதுகாப்பாக இறங்கும் வழி ஒன்று இருக்கிறது. அபாயத் தருணங்களுக்கு மட்டும் நான் அதைப் பயன்படுத்துவேன். இப்போது அதைப் பயன்படுத்திக் கீழே இறங்குவோம். அங்கே கால் வழுக்கும். கயிற்றை கெட்டியாகப் பிடித்திருந்தால் பத்திரமாகப் போய்ச் சேர்வோம்.”

ஷெர்ப்பாவின் வார்த்தைகள் எனக்குத் துளிகூட தைரியத்தைத் தரவில்லை. ஷெர்ப்பா போன்ற ஓர் ஆளுடன் சாகப்போகிறோமே என்ற எண்ணம்தான் எழுந்தது. விபத்துகளில் குடும்பத்தோடு சேர்ந்து சாகிறவர்கள் கொடுத்துவைத்தவர்கள். ஆனால் நான் யாருடன் சாவது என்று தேர்வு செய்யும் நிலையில் இல்லை. இப்போது ஷெர்ப்பாதான் கடவுள். அவனிடம் சரணடைந்தேன். அவன் என்னை உயிரோடு கீழே கொண்டு சேர்த்தால் நல்லது. அது நடக்காவிட்டால் என் அதிர்ஷ்டம் அவ்வளவுதான் என்று மனதிற்குப் புகட்டிக்கொண்டேன். என் குடும்பம் நடுத்தெருவிற்கு வராதிருக்கப் பல வகைக் காப்பீடுகள் இருக்கின்றன. அது போதும் எனக்கு. குடும்பத்தினரைப் பற்றி நினைக்கையில் அவர்களுடைய முகங்கள் எனக்குத் தொடர்பில்லாத ஏதோ ஓர் இணை உலகத்தில் வாழ்பவர்களுக்குரியவை போல் இருந்தன. ஷெர்ப்பா அந்தச் சிந்தனையின் மேல் காறித் துப்புவது போல் ஒலியெழுப்பினான்.

பழகிய இடம் போல் ஷெர்ப்பா அந்த முரட்டுப் பரப்பில் வேகமாக நடக்க, நான் அவனைப் பின்தொடர்ந்தேன். இப்போது நானும் அவனும் மட்டும்தான் இருந்தோம் என்று கிலியாக உறைத்தது. என்னோடு வந்த மிச்சம் பேர் அவனுக்கு பலியாகியிருந்தார்கள். இவன் ஏன் என்னை விட்டுவைத்ததோடு எனக்கு உதவவும் செய்கிறான் என்ற கேள்வி எழுந்தது. இவனுக்கு நான் பாக்கி எதுவும் தர வேண்டியதில்லை. மொத்த வழிகாட்டுக் கூலியையும் அடிவாரத்திலேயே கொடுத்தாயிற்று. என்னைக் கொல்லக்கூடத் தேவையில்லை, தனியாக விட்டுச் சென்றாலே இரவுக்குள் கட்டியாகி செத்துப்போய்விடுவேன். அப்படி இருக்கையில் இவன் என்னை எதற்காக, எங்கே இழுத்துக்கொண்டு போய் உதவுகிறான்? அவனைப் பொறுத்த வரை நானும் துரோகிதானே. புரியவில்லை.

இரண்டு பெரும் பாறைகள் போன்ற அமைப்புகளுக்கு இடையே வளைவாக, சந்து போல் ஓர் இடம் வந்தது. “இங்கே ஜாக்கிரதை” என்றான் ஷெர்ப்பா. நாங்கள் அதனூடே சென்றோம். பத்திருபது அடிகளுக்குப் பிறகு மீண்டும் திறந்த வெளி. துருத்திக்கொண்டிருந்த ஒரு கல்லில் தடுக்கிக் குப்புற விழுந்தேன். சட்டென்று எழ முடியாமல் முதுகுப் பாரம் அழுத்தியது. முன்னே சென்றுகொண்டிருந்த ஷெர்ப்பா அருகில் வந்தான். என் பையைப் பிடித்துத் தூக்கி என்னை நிறுத்துவான் என்று நினைத்தால் பையிலிருந்து சில பொருட்களை வெளியே எடுத்தான். “இப்போது எழுந்திரு” என்றான். எவ்வளவு எடுத்தானோ தெரியவில்லை, அதிகம் சிரமப்படாமல் எழுந்தேன். பாரம் லேசாக இருந்தது. ஷெர்ப்பா கீழே எடுத்து வைத்த பொருட்களைத் தனது பைக்குள் ஒவ்வொன்றாக வைத்தான். எனக்கு வழிப்பறி கொடுப்பது போல் இருந்தது. “உன்னால் தூக்க முடியாது. அப்புறம் தருகிறேன்” என்றான் ஷெர்ப்பா.

இப்போது நாங்கள் விளிம்பு போல் ஓர் இடத்திற்கு வந்திருந்தோம். ஷெர்ப்பா பாதி நிரம்பிய ஒரு சாராய புட்டியைத் தன் பையிலிருந்து எடுத்து நடந்தபடியே குடிக்கத் தொடங்கினான். புட்டிக் கையால் நேராகக் காட்டி, “குதி” என்றான். நான் முன்னே நடந்து சென்று பார்த்தேன். நான்கடி ஆழத்தில் மேகங்களைத் தவிர எதுவும் தெரியவில்லை. “இங்கேயா?” என்றேன். “பயப்படாதே, இங்கே வெறும் புதர்கள்தான் இருக்கும். அடிபடாது. அங்கேயே இரு. சிறுநீர் கழித்துவிட்டு நானும் வருகிறேன். அதற்கு முன் என்னால் குதிக்க முடியாது” என்றான்.

நான் நம்பிக்கை இல்லாமல் சிறிது நேரம் மேகப் பொதியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். திரும்பி ஷெர்ப்பாவைப் பார்த்தேன். அவன் குடித்தவாறு மெல்ல ஒரு பாறை இடுக்கைக் குறி வைத்து நடந்துகொண்டிருந்தான். கண்டிப்பாகக் காலில் அடிபடும் என்று நினைப்புடன் நான் மேகத்தின் மேல் குதித்தேன். ரொம்ப நேரத்திற்கு ஜில்லென்று இருந்தது.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar