ஞாயிற்றுக்கிழமையாவது மயிராவது

in துண்டிலக்கியம்

குடும்பஸ்தனுக்கு ஞாயிற்றுக்கிழமையாவது மயிராவது. குளித்து டிபன் சாப்பிட்டு முடித்தாயிற்றா? ஒரு சின்னத் தூக்கம் போட்டுவிட்டு மெல்ல ஒரு வாக்கிங் போய்விட்டு வந்து ஏதாவது டிவிடியைப் போட்டுப் பார்த்தால் சுகமாக இருக்குமா? இருக்கும்தானே? அதை விட்டுவிட்டுக் காலில் சக்கரம் கட்டிக்கொள். சலவை ஆடையை அணிந்து திரவியம் பூசிக் கும்பலாக ஷாப்பிங் மாலுக்கு ஓடு, கொழுப்பையும் சர்க்கரையையும் கொட்டித் தயாரித்த விலையுயர்ந்த குப்பைகளை பிறவிப் பயனே அடைந்தது போல் ஒவ்வொன்றாக உள்ளே தள்ளு. கடைகளை மேய், கட்டுபடியாகாததைப் பார்த்துப் பெருமூச்சு விடு, இருப்பவனைப் பார்த்து ஏங்கு, இல்லாதவனைப் பார்த்து நிம்மதியடை, இப்படியே முக்கால் நாளைப் போக்கி வீட்டுக்கு வந்து களைத்து விழு. எஞ்சிய நாளை சோம்பலாகத் தொலைக்காட்சி முன்பு கழிக்க முடிவெடு. திடீர் விருந்தாளிகளை உபசரித்து இளி, இரவு சாப்பிட்டுவிட்டுக் கிளம்பலாமே என்ற வார்த்தைகள் பேசப்படுகையில் வாழ்க்கையில் நம்பிக்கை இழ. புதியன கழிந்து வீடு அமைதியானதும் கிடைத்த எச்சில் நேரத்தில் சாப்பிட்டுவிட்டுத் தூங்கு. சந்தோசமாக இரு, போ.

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar