ஒரு கை ஓசை

in கட்டுரை, புனைவு

செல்பேசியில் என்னை வந்தடைந்த ஒரு செய்தி நெஞ்சில் இடியாக இறங்கியது. அதோடு நில்லாமல் சிறிது நேரம் அங்கேயே அலைபாய்ந்துகொண்டிருந்தது. செங்கல்பட்டைச் சேர்ந்த என் வாசகர் இராம.திரு. அபிஷேக் இருவாரங்களுக்கு முன்பு வாகன விபத்துக்குள்ளாகியிருக்கிறார். நிறைய ரத்தம் இழந்தாலும் பிழைத்துவிட்டார். இப்போது ஓரளவு தேறி என்னைப் பார்க்க விரும்புவதாகச் சொல்கிறார். கேட்டதும் செங்கல்பட்டுக்குக் கிளம்பிவிட்டேன்.

நிறைய படித்தவரான அபிஷேக், அநேகமாக எனது ஒரே வாசகர். எனது படைப்பு ஒன்று வெளியாகும்போது அதைச் சிலாகித்து எனக்கு மின்னஞ்சல் அனுப்ப அவர் தவறியதே இல்லை. சென்ற வாரம் ஆகக்கொடூரமான சிறுகதை ஒன்றை எழுதி வெளியிட்ட பின்பு அவரிடமிருந்து பாராட்டு மடல் எதையும் காணோமே என்று சில நொடிகள் வியந்துகொண்டிருந்தேன். விபத்தில் தவறிவிட்டிருக்கிறது வாசிப்பு.

அபிஷேக்கிற்கு வயது 65. ஆமாம், நம்பி விபத்துக்குள்ளாகும் வயதல்லதான். ஆனால் அவர் அதை வேண்டுமென்று செய்திருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை. இத்தனைக்கும் அவர் எனது சமீபத்திய சிறுகதையைப் படிக்கவில்லை. ஏன், இரு மாதங்களுக்கு முன்பு தொலைபேசியில் பேசியபோதுகூட அவர் விபத்து பற்றி மூச்சு விடவில்லை. இப்போது அந்த உரையாடலைப் பற்றி யோசித்தால், அவர் அதை நாசூக்காகத் தவிர்த்தது போல் தோன்றுகிறது.

12 மணிக்குக் கிளம்பி செங்கல்பட்டுப் பேருந்து நிலையத்தைச் சென்றடைகையில் மதியம் சுமார் 2.30 மணி இருக்கும். அகோரப் பசி என் உடலின் கொழுப்புகளைத் தின்றுகொண்டிருந்தது. இந்தப் பசியில் போனால் நோயாளி என்றும் பார்க்காமல் அபிஷேக்கிடம் தாறுமாறாக சத்தம் போட்டுவிடக்கூடிய ஆபத்து இருந்தது. எனவே அருகில் இருந்த உணவகத்தில் இட்லி சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். அப்போது காலையில் செல்பேசியில் அழைத்த அதே நபரிடமிருந்து அழைப்பு வந்தது. இப்போதுதான் அபிஷேக் தூங்கி முடித்துக் கண்விழித்தாராம். வலதுகை போய்விட்டதாம். பதறிப்போனேன். என் முகத்தில் உழைப்பாளி போல் வியர்வை முத்துக்கள் அரும்பின. இட்லியை ஸ்பூனால் சாப்பிட்டுக்கொண்டிருந்தவன், உள்ளுணர்வால் சட்டென ஸ்பூனை எறிந்துவிட்டு நேரடியாகக் கையால் எடுத்து சாப்பிடத் தொடங்கினேன்.

இட்லியை அடுத்துப் பொங்கலும் வடையும் உள்ளே போய்க்கொண்டிருக்க, அபிஷேக்கிற்கு என்ன ஆறுதல் சொல்லப்போகிறேன் என்று மலைப்பாக இருந்தது. அவரது மென்மையான இயல்புக்கும் குரலுக்கும் மாறான உருவம் அவருக்கு. 6.3 அடி உயரம், அதற்கு ஏற்ற அகலம். குறுகலான சந்தில் எதிர்ப்பட்டால் அவர் மீது இடித்துக்கொள்ளாமல் நடக்க முடியாது. இடித்துக்கொள்ளக் கூடாது என்றால் அவரைப் படுக்கச் சொல்லி அவர் மேலே ஏறித்தான் நடந்து போக முடியும். அதுவே ஒரு சிறிய மாடி ஏறி இறங்குவது போல் இருக்கும். அல்ஜைமர்ஸ் வந்தால்கூடக் காணாமல் போக இடமளிக்காத ஆகிருதி அவருடையது. மாமிச மாளிகை போன்ற அந்த சரீரத்தில் ஒரு நீண்ட கை இல்லாவிட்டால் பளிச்சென்று தெரியும். இதில் வேதனையான விசயம் என்னவென்றால், அவர் பெருமளவு வலதுகைப் பழக்கம் உள்ளவர். இந்த வயதில் வலதுகையை இழப்பது கொடுமையிலும் கொடுமை என்பதைக் கல்நெஞ்சக்காரர்கள்கூட ஒப்புக்கொள்வார்கள், ஆனால் தங்களுக்கு அவ்வாறு நேர்வதை விரும்ப மாட்டார்கள்.

கிட்டத்தட்ட இருபதாயிரம் சதுர அடியில் பல அரச மரங்களின் ரம்மியம் சூழ அமைந்திருந்த தனியார் மருத்துவமனை அது. ஆனால் இந்த வர்ணனையைப் பிறகொரு சமயம் வைத்துக்கொள்கிறேன். அபிஷேக் அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து மாற்றலாகி ஒரு தனி அறைக்கு வந்திருந்தார். அறைக்கு வெளியே நின்றிருந்த அவரது மனைவியும் மகள்களும் என்னைக் கண்டு சங்கடமாகப் புன்னகைத்தார்கள். அபிஷேக் கழுத்திலிருந்து கால் வரை போர்த்தப்பட்டு சில மருத்துவ உபகரணங்களை அணிந்து படுத்திருந்தார். அவரால் இனி என்றைக்குமே உரிக்க முடியாத சாத்துக்குடிகளைக் கொண்ட பையுடன் என்னைப் பார்த்ததும் தமது ஆன்மாவில் புரையோடியிருந்த துயரம் அனைத்தையும் கண்களுக்குக் கொண்டுவந்து என்னைப் பார்த்தார். அல்லது கண்திறந்த வாக்கில் தூங்கிக்கொண்டிருந்தாரோ என்னவோ. அப்படித்தான் போல. எனக்குத் தகவல் சொன்ன அன்பர் உள்ளே வந்தார். அபிஷேக்கின் கால் கட்டைவிரலை லேசாக அசைத்து, “யார் வந்திருக்காங்க பாருங்க” என்றார். அபிஷேக் அரைத் தூக்கத்திலிருந்து விடுபட்டு என்னைப் பார்த்தார். செல்பேசி அன்பர் நாசூக்காக வெளியேறினார்.

“என்ன சார் இப்படி ஆயிருச்சு!” என்று அரற்றினார் அபிஷேக்.

இந்தக் கேள்வியைத்தான் நான் எதிர்பார்த்தேன் என்றாலும் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் ‘ஐஸ்பிரேக்க’ராக விக்கிபீடியா உதவியது.

“ரெண்டாயிரத்துப் பதிமூணுல தமிழ்நாட்டுல பதினாலாயிரத்தி ஐநூத்தி நாலு விபத்துகள் நடந்திருக்கு. அதுல பதினஞ்சாயிரத்தி ஐநூத்தி அறுவத்திமூவர் செத்துப் போயிருக்காங்க. அதுனால நீங்க பொழைச்சது ஆகப்பெரிய சில்வர் லைனிங். உங்களுக்குக் கை போனதுல எனக்கும் வருத்தம்தான். ஆனா உங்களை உயிரோட பாக்கறனே அது என்னோட அதிர்ஷ்டம். ஏன்னா வர்ற வழில ஒரு லாரிக்காரன் என்னை ஜஸ்ட்ல மோதியிருப்பான்…”

அவரோ எனது வருத்தத்தை லட்சியமே செய்வதாக இல்லை. “கையே போயிடுச்சே சார்” என்றார் பிடிவாதமாக. அவர் ஆறுதலை ஏற்கும் மனநிலைக்கு வருவதற்கு முன்பு அவர் விளையாட்டுக்கே போகலாம் என்று முடிவு செய்தேன்.

“ஆமாம் சார். வெயிட்டைக் குறைக்கணும், வெயிட்டைக் குறைக்கணும்னு சொல்லிக்கிட்டே இருப்பீங்க. ஆனா இப்படிக் குறையும்னு யார் எதிர்பாத்திருக்க முடியும்?” என்றேன்.

“ஆமாம் சார், இப்ப வெறும் கஞ்சிதான் சார் குடிக்கிறேன்!”

“நான் இங்க வர்றப்பல்லாம் ‘வாங்க, ஒரு கை குறையுது’ன்னு ரம்மி ஆடக் கூப்புடுவீங்க. இப்ப உங்களுக்கே ஒரு கை குறையிற மாதிரி ஆயிடுச்சு பாருங்க…”

“அதத்தான் சார் தாங்க முடியல. கை இல்லாம எப்படி சார் வாழுவேன்? அதுக்கு உயிரே போயிருக்கலாம்.”

“ஆங் – உயிரப் பத்தி மட்டும் பேசாதீங்க, எனக்குக் கெட்ட கோவம் வரும். உயிருக்கு மதிப்பே கிடையாது. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் உயிர மட்டும் விட்டுரக் கூடாது. கை போனா செயற்கைக் கை பொருத்திக்கலாம். உயிர் போனா திரும்பி வராது. வந்தாலும் திரும்பி நமக்கேதான் வரும்னு கியாரண்டி கிடையாது…”

“வாஸ்தவம்தான் சார்” என்றார் அமைதியாக. செயற்கைக் கை பற்றிய நினைவூட்டல் அவருக்கு ஆறுதல் அளித்திருக்கக்கூடும்.

“‘செயற்கைக் கை’-ன்றதுலயே ரெண்டு கை இருக்கு பாருங்க…”

சிறிது நேரம் மௌனமாக இருந்தவர், “நான் ஓரமா, மெதுவா இருவத்தஞ்சு கிலோமீட்டர்ல போயிட்டிருந்தேன். லூசுக் கூமுட்டை எதையோ குடிச்சிட்டு சைடுல வந்து மோதிட்டான். கையும் போச்சு காரும் போச்சு. இன்னொரு கார் வாங்குனாகூட ஓட்ட முடியுமா?” என்று பொருமினார்.

“ஐயைய, இப்ப எதுக்கு அதெல்லாம் கெளறிக்கிட்டு? அந்தாளப் புடிச்சாங்களா?”

“அவன் ஸ்பாட்லயே காலி சார்.”

“பாத்தீங்களா? உடனே தண்டனை குடுத்த ஆண்டவன் உங்களுக்கு ஒரு வழி காட்டாமலா இருப்பான்?” அபிஷேக் தேர்ந்த சிவபக்தர். அதனால்தான் அறுபத்திமூவரை நைச்சியமாகப் பேச்சில் நுழைத்தது.

“அவனுக்கே அடுக்காது சார்…”

“சார், உங்களை என் அண்ணனா நெனச்சிக்கிட்டு ஒண்ணு சொல்லவா? மனுஷனுக்குக் கை-ன்றது கிட்னி மாதிரி சார். ஒண்ணு போயிட்டா இன்னொண்ண வெச்சு சமாளிச்சிக்கலாம். பொண்ணுங்களுக்கு நல்லபடியா கல்யாணம் பண்ணி வெச்சிட்டீங்கல்ல, இனிமே உங்களுக்கு எத்தனை கை இருந்தா என்ன சார்? உங்க கடமைகள நீங்க நிறைவேத்திட்டீங்க. நீங்க சம்பாதிச்சுத்தான் பொழைக்கணும்னு இல்ல. உக்காந்து சாப்புட சொத்து இருக்கு. உங்களுக்கு ஒரு கை அதிகமா இருக்குறதா நெனச்சிக்குங்க. இவ்ளோ பெரிய ஒடம்புல ஒரு கை இல்லன்னா இப்ப என்ன சார் ஆச்சு? ஒரு கைதானே சார்? மயிராப் போச்சு விட்ருங்க!”

அபிஷேக் கண்களை மூடிக்கொண்டார். அந்தக் கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது. ஆனால் உலகத் தரமான இசையை ரசிப்பது போல் புன்னகைத்தார்.

“இதுக்குத்தான் சார் உங்களக் கூப்ட்டேன்” என்றார்.

Tags:

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar