அஞ்சலித் தொழிற்சாலை

in கட்டுரை

நண்பர் லபக்குதாசின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவர் தமது அறையில் கணினி முன்னே உட்கார்ந்து விசைப்பலகையில் நெற்றியைத் திரும்பத் திரும்ப மோதிக்கொண்டிருந்தார்.

“என்னய்யா பிரச்சனை?” என விசாரித்தபடி கணினித் திரையைப் பார்த்தேன். திறந்த வேர்டு கோப்பு ஒன்றில் “அஞ்சலி: வன்மதி மோகன்” என்று இருந்தது. ஆடிப்போனேன். அதற்குக் கீழே நான்கு வரிகள் உரைநடை. வன்மதி ‘புகழ்’ மோகனுக்கு அதிகம் 30 வயதுதான் இருக்கும்.

“ஒரு பாராவுக்கு மேல நகர மாட்டேங்குது” என்றார் துன்பமாய்.

“வன்மதி இப்ப இல்லையா?” என்றேன் குறையாத அதிர்ச்சியுடன்.

“இல்லாம என்ன? இப்பவே எழுதி வெச்சிட்டா நாளைக்கு உபயோகப்படும்” என்று கணினியில் ஒரு ஃபோல்டரைக் காட்டினார். எல்லாம் உயிரோடுள்ள ஆட்களுக்கான அஞ்சலிகளாய்க் கிடந்தது.

“ஆள் திடீர்னு ஆக்சிடன்ட்ல போயிட்டான்னு வைங்க, அவன் ஆவிய வச்சு ரிசர்ச் பண்ண முடியாது. உயிரோட இருக்குறப்பவே டீட்டெயில்ஸ் வாங்கிக்கணும்.”

“அஞ்சலிக் கட்டுரைக்கு வேணும்னு கேட்டு வாங்குனீங்களா?”

“இளம் எழுத்தாளர் அறிமுகம் எழுதுறேன்னு சொன்னேன், மளமளன்னு அவனே ஃபுல் டீட்டெய்ல்ஸ் சொல்லிட்டான். கட்டுரையா வடிவம் பெற மாட்டேங்குது, அதான் பிரச்சனை.”

ஃபோல்டரை மூடப் போனவரைத் தடுத்து அந்தப் பெயர்களில் என்னுடையதும் இருக்கிறதா என்று பார்த்தேன். இருந்தது.

“அத ஓப்பன் பண்ணுங்க” என்றேன்.

“எது, உங்களுதா?” என்று என்னுடைய அஞ்சலியைத் திறந்தார்.

உள்ளே “பேயோன்: 1967-201?” என்று இருந்தது. ‘அட பேராசைக்காரப் பாவி மனிதா!’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு அதன் கீழே பார்த்தால் எனது எல்லாப் புத்தகங்களும் அடங்கிய ஒரு பட்டியல் மட்டுமே காணப்பட்டது.

“இன்னும் எழுதலியா?” என்றேன்.

“எழுதுனதுதான் இது. உங்களுதாச்சே, நான்லீனியரா பண்ணிருக்கேன்.”

“அது சரி. உங்களுக்கும் எவனாவது எழுதி வெச்சிருக்கப் போறான்” என்றபோதுதான் இந்த யோசனை எனக்குத் தோன்றாமல் போயிற்றே என்று கடிந்துகொண்டேன்.

நான் வயதான எழுத்தாளர்களுக்கு மட்டும்தான் எழுதிவைத்திருக்கிறேன். லபக்குதாசின் தொலைநோக்கோ, சாலை விபத்துகள், திடீர் நோய்கள் போன்ற வாழ்வின் திடீர் அநிச்சயங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளது.

“அதுக்கு நம்மால என்ன பண்ண முடியும்? வன்மதி பத்தி ஏதாவது பேசுங்க. ரெண்டு மணிநேரமா ட்ரை பண்றேன். ஒண்ணுமே எழுத வர மாட்டேங்குது.”

“வாங்க, ஒரு பிரேக் எடுத்துக்குங்க. அப்புறம் தானா எழுத வரும்” என்று டீ சாப்பிட அவரை அழைத்துச் சென்றேன்.

சென்றேனே தவிர உள்ளுக்குள் புன்னகைத்துக்கொண்டேன். வன்மதி மோகனெல்லாம் லேசில் சாகும் ரகம் அல்ல. கெஞ்சிக் கூத்தாடினால்கூட வழிக்கு வர மாட்டார். கடைசியில் வன்மதிதான் லபக்குதாசுக்கு அஞ்சலி எழுதுவார் என்று தோன்றியது. விதி அப்படித்தான் விளையாடும்.

பிறகுதான் தோன்றியது: அஞ்சலி என்பது ஆசுகவி மாதிரி வர வேண்டும். ஆள் போனதாகச் செய்தி வந்ததும் அந்த அவசரத்தில் உட்கார்ந்து எழுத வேண்டும். அப்போதுதான் நாவல் மாதிரி இல்லாமல் அஞ்சலிக்கே உரிய, வாசிப்புத் திருப்தியை அள்ளித் தருகிற வடிவ அமைதி வரும். இல்லாவிட்டால் வெறும் “அவர் நல்ல எழுத்தாளர் மட்டுமல்ல, அவர் ஒரு நல்ல மனிதரும்கூட”-தான். லபக்குதாஸ் போன்ற கார்ப்பரேட் மனோபாவமுள்ள எழுத்தாளர்களுக்கு அது புரிய வாய்ப்பில்லை.

ஒரு பெருமூச்சு விட்டு லபக்குதாசைப் பார்த்தேன். அவர் குறிப்பாக எதிலும் பார்வையைப் பதிக்காமல் மௌனமாகத் தேநீரை உறிஞ்சிக்கொண்டிருந்தார்.

Tags: ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar