பேட்டிக்கு வந்த மலர்

in கட்டுரை

என்னை நேர்காணலிடத் துடிப்பான இளம் பெண் பத்திரிகையாளர் ஒருத்தி வந்திருந்தார்.  தொடங்குவதற்கு முன்பு என்னோடு ‘இன்பார்மலாக’ச் சிறிது பேசிக்கொண்டிருந்தார். எனக்குப் பக்கத்து இருக்கையில் என் மனைவி.

என் ஊர் எது, எங்கே படித்தேன், எனக்கு என்ன பூக்கள் பிடிக்கும் என்று அவர் கேட்ட ஒவ்வொரு கேள்வியையும் நான் பேச வாயைத் திறப்பதற்குள் – இத்தனைக்கும் நான் வேகமாகத்தான் திறந்தேன் – மனைவி தடுத்தாட்கொண்டு பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.

கேள்விக்காரி என்னை ஒரு மாதிரி தர்மசங்கடமாகப் பார்த்தார். “நம் இருவருக்கு இடையே இன்னொரு பெண் தேவையா?” என்றன இமைகளில் மெல்லிய கோடாகக் கரிய லிப்ஸ்டிக் பூசிய அவரது கெண்டைக் கண்கள். நான் பார்வையாலேயே அவரை சமாதானப்படுத்திவிட்டு மனைவியிடம், “கொஞ்சம் தண்ணி கொண்டாயேன், ஒரே தாகமா இருக்கு” என்றேன்.

மனைவி திடீரென்று அப்பாவியாகி எழுந்து பேசிக்கொண்டே சமையலறைக்குப் போய் ஒரு டம்ளரில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார்.

இப்போது அடுத்த அஸ்திரம்: “இவுங்க காபி கேக்குறாங்க, இவுங்களுக்கு காபி வேணுமாம்” என்றேன். பத்திரிகையாளர் திடுக்கிட்டு மறுக்கப் பார்த்தார். நான் அவரைக் கையமர்த்தி, “கூச்சமே படாதீங்க, இது என் வீடு மாதிரிதான்” என்றேன்.

மனைவி அகன்றதும் அந்தப் பெண்ணிடம் சொன்னேன்:

“இனிமே கலை, இலக்கியம், சினிமா, உலக அரசியல் பத்தி மட்டும் கேளுங்க. வேற எதப் பத்திக் கேட்டாலும் உங்களுக்கு அவுங்களோட பேட்டிதான் கெடைக்கும். பர்சனல் மேட்டர்லாம் ஈமெயில்ல பேசிக்குவோம்.”

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar