சொந்த சிம்பொனிகள்

in துண்டிலக்கியம்

செல்பேசியில் எனக்குப் பிடித்த மொஸார்ட்டின் 25ஆம் சிம்பொனியை ஹெட்ஃபோனில் விட்டுக்கொண்டு இசையின் மாய உலகில் சஞ்சரித்துக்கொண்டிருந்தேன். சிம்மக் குரலாளுக்கு அது பொறுக்கவில்லை போலும்.

காதுகளின் ஹெட்ஃபோனை விநோதமாகப் பார்த்துக்கொண்டே என்னிடம் பேசத் தொடங்கினார். ஒரு பக்க ஹெட்ஃபோனைக் கழற்றிவிட்டுக் கேட்க ஆரம்பித்தேன். அக்கா பையனுக்கு வேலை கிடைத்திருக்கிறதாம், அவ்வளவுதான் விஷயம். ஆனால் நெருங்கிய உறவினரின் பேச்சு தொடங்கியதோ அந்த இளைஞனின் கல்வித் தகுதி மற்றும் வேலைவாய்ப்புத் தேடலில்.

ஓர் அற்புத ஆன்மீக அனுபவம் அற்பமாகத் தடைபட்டதில் எனக்குள் ஒரு பெரும் பூகம்பமே கொந்தளித்தது. இருந்தாலும் ஆத்திரப்பட்டுப் பயனில்லை என்று சமாதானப்படுத்திக்கொண்டேன். செல்பேசியையும் இசைக் காதணிகளையும் அமைதியாக மேஜை மேல் ஏறக்கட்டினேன்.

“நான் பிஸியாக இருப்பதையும் மீறி நீ என்னுடன் இத்தனை செய்திகளைப் பகிர்ந்துகொள்வது எனக்கு சந்தோசமாக இருக்கிறது. இருந்தாலும் இந்த விவரமெல்லாம் என்னுடைய தகவல் பசிக்குப் போதவே போதாது” என்று நிதானமாகச் சொல்லிவிட்டு, இது போன்ற தருணத்திற்காகத் தயாராக எடுத்து வைத்திருந்த ஸ்டீபன் ஹாக்கிங்கின் ‘A Brief History of Time-ஐ அவரிடம் நீட்டி, “பெருவெடிப்பிலிருந்து ஆரம்பி” என்றேன்.

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar