நாவல் யோசனை

in கட்டுரை, புனைவு

ஒரு கற்பனை நாட்டின் மன்னன் நீதி வழுவாது ஆட்சி நடத்துகிறான். ஆனால் அவனுக்கு வயதாக ஆகக் கொடுங்கோலனாக மாறுகிறான். அவனது வாரிசுகள் கொடுங்கோன்மையை ஆதரித்து நாட்டில் கோர தாண்டவம் ஆடுகிறார்கள். மக்கள் தாங்கொணாத் துயரத்தில் ஆழ்கிறார்கள்.

இந்நிலையில் அந்நாட்டின் இளவரசர்களில் ஒருவன் ஒரு திருமண நிகழ்வில் வேற்று நாட்டு இளவரசி ஒருத்தியைச் சந்தித்துக் காதல் கொள்கிறான். அவளும் அவனிடம் காதல் வயப்படுகிறாள். ஆனால் அவன் ஒரு கொடுங்கோல் மன்னனின் கெட்ட மகன் என்று அறிந்ததும் அவனைத் திருந்தச் சொல்கிறாள். இல்லாவிட்டால் தன்னைக் கரம்பிடிக்க முடியாது என்று உறுதிபடக் கூறுகிறாள்.

இளவரசியிடம் தன் மனத்தை முழுவதுமாக இழந்துவிட்ட இளவரசன் திருந்துகிறான். தந்தையிடம் நாட்டை ஒழுங்காக ஆளச் சொல்கிறான். மன்னன் சிரித்து மறுப்பதோடு அவனைச் சிறையில் அடைக்கிறான். இளவரசன் சிறையிலிருந்து தப்பித்துக் காதலியின் தந்தை-மன்னனிடம் தஞ்சம் புகுகிறான். தனது நாட்டின் மீது போர் தொடுத்து மக்களை மீட்கும்படி கேட்டுக்கொள்கிறான். இளவரசியின் தந்தை-மன்னன் அதற்கு ஒப்புக்கொண்டாலும் இனி மகள் பக்கம் தலை வைத்துப் படுக்கக் கூடாது என்று இளவரசனுக்குக் கட்டளையிடுகிறான். இளவரசன் ஒரு ஜோசியனைக் கலந்தாலோசித்துவிட்டு இதற்குச் சம்மதிக்கிறான். இளவரசிக்கு இது விஷயம் தெரியாது.

இளவரசியின் தந்தை திடீர்த் தாக்குதலாக இளவரசனின் நாட்டின் மீது, அதுவும் இளவரசனின் தலைமையில் போர் தொடுக்கிறான். கொடுங்கோல் படையினர் சரணடைந்து இளவரசன் வெல்கிறான். இது வரை நாட்டை அடிமைப்படுத்திய தனது சகோதரர்களைச் சிறையில் அடைக்கிறான். பின்னர் தன் உப்பரிகையில் நின்று மக்களைக் கூட்டுகிறான், நல்ல காலம் வரப்போகிறது என்று அறிவிக்கிறான். ஆனால் திடீரென்று எல்லாம் மறைந்துவிடுகிறது. “சே, கடைசியில் எல்லாம் கனவா!” என்று அலுத்துக்கொண்டு ஸ்டூலில் நிமிர்ந்து உட்கார்கிறான் வடபழனி விமலா நர்சிங்ஹோம் வார்டு பாய்.

Tags: ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar