ஆங்கில நாசூக்கு

in கட்டுரை

ஆங்கிலம் எதையும் நாசூக்காக்கிவிடுகிறது. அதனால்தான் தமிழில் கெட்ட வார்த்தைகளைப் பேசத் தயங்குபவர்கள்கூட ஆங்கிலக் கெட்ட வார்த்தைகளைச் சரளமாகப் பேசுகிறார்கள்.

ஒரு பேரிளைஞர் என் வீட்டுக்கு வந்திருந்தார். தம் கவிதைத் தொகுப்பின் வெளியீட்டு விழாவில் பேச அழைத்தார். முதலில் தொகுப்பை அக்கணமே படித்துப்பார்த்துக் கருத்துச் சொல்லும்படி கேட்டுக்கொண்டார். பக்கத்திற்கு 50 ரூபாய் தர ஒப்புக்கொண்டார்.

தொகுப்பைப் பக்கம் விடாமல் படித்தேன். சுத்தமாகப் பிடிக்கவில்லை என்று சொன்னால் சரியாக இருக்காது. ஒரு நிரபராதிக்கு சிறைத் தண்டனை அளித்துவிட்டது போல் கோபம் வந்தது. புத்தகத்தை ‘டப்’பென்று மூடிப் பட்டென்று அவரிடம் நீட்டினேன். அவர் எதிர்பார்ப்பின் இளிப்புடன் என்னைப் பார்த்தார்.

“இந்தக் கவிதைகள எழுதுனதுக்காக… இந்த டேபிள் மேல இருக்குறதையெல்லாம் கீழ தள்ளிட்டு… உங்கள அது மேல படுக்க வெச்சு… உங்க சட்டையோட கீழ் மூணு பட்டனைக் கழட்டி சட்டையக் கொஞ்சம் மேல தள்ளி… அந்த மொண்ணை பேப்பர் கட்டர் இருக்கு பாருங்க, அதால உங்க வயித்துல ரவுண்டா, ஆழமா வெட்டி வயித்தக் கிழிச்சி… கொடல வெளிய எடுத்து… அத எங்க வீட்டு வாசல்ல தோரணமா மாட்டுனேன்னு வச்சிக்கிங்க… அப்புறம் உங்கள மாதிரி ஒரு பய கவிதைன்னு சொல்லிக்கிட்டு இந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வெக்க மாட்டான்” என்றேன்.

அந்த நபர் முகம் வெளிறி “சார்?” என்றார்.

“சும்மா, ஜஸ்ட் திங்க்கிங் அலௌட்” என்றதும் இயல்பானார்.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar