பால் பொங்கல்

in கட்டுரை

கியாஸ் அடுப்பில் வைத்த பாலைப் பார்த்துக்கொள்ளும்படி என்னிடம் சொல்லிவிட்டு மனைவி கடைக்குப் போனார். பொங்காத பாலை எவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டிருப்பது? போர். எனவே பொழுது போக அதை ஒரு கரண்டியால் கடிகாரச் சுற்றில் கிளறிக்கொண்டே இருந்தேன். அதுவும் சலித்துப்போக, கடிகாரச் சுற்றுக்கு எதிராகக் கிளறிக்கொண்டிருந்தேன்.

காலம் ஸ்தம்பித்தாற்போல் இருந்தது. மனைவியும் வந்தபாடில்லை, பாலும் வெந்தபாடில்லை. ஒருவேளை கரண்டியின் கிளறல்தான் பால் பொங்காதிருக்க ஊக்குவிக்கிறதோ என்று சந்தேகம் எழ, கரண்டியை அகற்றிவிட்டேன். கவிதையின் அடுத்த வரிக்காகப் போராடிக்கொண்டிருக்கையில் நம்முடைய நிலைமை இப்படி ஆகிவிட்டது பார் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

திடீரென்று பாலுக்கு புத்தி வந்து ஒரேடியாகப் பொங்கியது. எந்த ரயிலைப் பிடிக்க இத்தனை அவசரம்? பாத்திரத்தை மீறிப் பால் வழிந்தது. அது வழிய வழியக் கரண்டியால் அதைத் தடுத்தெடுத்துத் திரும்பத் திரும்பப் பாத்திரத்திற்குள் ஊற்றினேன். அப்படியும் திமிறி வழிந்துகொண்டிருந்தது பால். அதுவே எதிர்பாராத கணத்தில் சட்டென்று அடுப்பை அணைத்து “இப்ப என்ன பண்ணுவே?” என்றேன். பால் அப்படியே அடங்கியது. கேவலம் அரை டம்ளர் பாலுக்கே அவ்வளவு இருந்தால் எனக்கு எவ்வளவு இருக்கும்!

அடுப்பைச் சுற்றி வெளுத்ததெல்லாம் பால். மனைவி வந்து துடைப்பார்.

Tags: ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar