மின்னூலுக்கு முன்னுரை

in கட்டுரை

பைசா பிரயோசனம் கிடையாது, பைசா செலவு கிடையாது.

– என் பாட்டி

‘வாழ்க்கையின் அர்த்தம்’ என்ற இந்த நூல் எனது 676ஆவது புத்தகம் என்கிறது ஒரு பதிப்புத் துறைப் புள்ளிவிவரம். இது எனது சொந்த ஊகத்துக்கு அருகே வருகிறது. என்னுடைய கணக்குப்படி இது என்னுடைய 675ஆவது நூல்.

பத்துப் பன்னிரண்டு குழந்தைகளைப் பெற்ற தகப்பன் சில குழந்தைகளின் பெயரை மறந்துவிடுவது போல, என் புத்தகங்களில் பலவற்றின் தலைப்பு எனக்கு நினைவில்லை. என் புத்தகம் ஒன்றை என் பெயரை மறைத்துவிட்டு என்னிடம் நீட்டினால் எனதில்லை என்று நான் அதைப் படிக்க மறுத்துவிடக்கூடும். அப்படி ஒரு புத்தகம் என்னிடம் தரப்பட்டுக் கட்டாயத்தின்பேரில் படித்து அதை மிக மோசம் என்று விமர்சித்ததும் என்னுடைய புத்தகம்தான் என்று அறிந்த பின்பு ஆச்சரியமடையாததும் நிகழ்ந்ததுண்டு.

‘வாழ்க்கையின் அர்த்தம்’ என்ற இந்தப் புத்தகம் என்னுடையது என்பதை நான் மறக்கப்போவதில்லை. ஏனென்றால் எல்லோரும் வாழ்க்கைக்குச் சொறிந்துகொடுத்துக்கொண்டிருக்க, புணர்ச்சிப் பரவசம் போன்ற அதன் தற்காலிக நிவாரணக் கணங்களை அதன் பிரதிநிதித்துவ டப்பாக்களாக ‘டான்ஸ்’ ஆடிக்கொண்டிருக்க, உறவுகள், கலைகள், அரசியல் என்று சிடுக்குமொழியில் பீறாய்ந்துகொண்டிருக்க, நான் மட்டுமே ரத்தம் வடியும் அதன் கோரப் பற்களை, அதன் பகட்டுக்குள்ளே பதுங்கியிருக்கும் அழுகிய நிர்வாணத்தை, நிரந்தரத்தின் காரட்டைக் காட்டி நம்மை அது தள்ளி விடும் பாம்புமிகு படுகுழிகளை, எந்தப் பூக்களையும், எந்தப் பட்டாம்பூச்சிகளையும், எந்த வனங்களையும், எந்த வானவில்களையும் பிடித்துத் தொங்காமல் இந்தப் புத்தகத்தில் சித்தரிக்கிறேன். வார்த்தைகளின் துரோகங்களுக்கு உடந்தையாவதில்லை எனதெழுத்து.

‘குழாயைச் சரியாக மூடுவதில்லை’, ‘மேட்ச்சிங் கிட்னி’, ‘நம்மை மீறிய விஷயம்’ போன்ற சிறுகதைகளில் மனித சுயநலத்தை, உறவுகளின் பொய்மையைத் தரிசிக்கலாம். ‘போதையைப் போடுதல்’, ‘குற்றக் குழந்தைகள்’, ‘பால் பொங்கல்’ போன்ற பகிர்வுகளில் தனிமனித சுதந்திரத்தின் விரைகளைச் சமூகம் தனது சர்வாதிகார எதிர்பார்ப்புகளால் கசக்குவதைக் காணலாம். தனிமனிதன் பெரும் ஆபத்திற்கிடையே கடமை அரக்கனின் பிடியிலிருந்து தப்பிச் செல்லத் துடிப்பதை ‘விஷ ஊசி’யில் பார்க்கலாம். வாழ்வியல் சடங்குகள் எனும் ராட்சத இயந்திரத்திலிருந்து கழன்றாலும் அவ்வியந்திரத்தின் சிக்கல்களிலிருந்து விடுபடச் சாத்தியமில்லாத கொடூரத்தைப் பற்றி மணவாழ்க்கை பற்றிய கடிதங்களில் படிக்கலாம். தகவல் தொடர்பு யுகத்திலும் மொழியின் தொடர்புறுத்தவியலாமை பற்றி ‘ஒரு துக்கம் விசாரித்தல்’, ‘இப்படித்தான் ஒருமுறை’, ‘ஒரு கை ஓசை’ ஆகிய படைப்புகளில் புரிந்துகொள்ள முயலலாம். ‘ரேமன்’, ‘பனிப் புயல்’ ஆகிய சிறுகதைகளில் கெட்ட கனவுகளே கொண்டாட்டங்களின், சாகசங்களின் இடத்தை இட்டு நிரப்புவதை உணரலாம். ‘மனமாற்றம்’, உள்ளீடற்ற வெகுஜனக் கதையாடல்களின் மாயச் சுழலில் சாமானியன் சிக்குறுவதைச் சொல்கிறது.

இவற்றை நான் அழுதுகொண்டு எழுதவில்லை. இதழோரத்து விரக்திச் சிரிப்பின் கசிவை நாவால் நக்கியிழுத்துக்கொண்டு எழுதவில்லை. நான் அடிப்படையில் ஜென் புத்திஷ்டன். எழுதும்போது சிந்தனைகளையே வைத்துக்கொள்வதில்லை. எண்ணங்கள் குறுக்கிட அனுமதிப்பதில்லை. மனதைக் காலியாக்குகிறேன். எனது நனவிலியின் மேல் பாரத்தைப் போட்டுத் தட்டச்சு செய்யத் தொடங்குகிறேன். Be the sword என்று ஒரு ஜப்பானிய சமுராய்ப் பழமொழி உண்டு. அதைப் போல, எழுதாதே, எழுத்தாக இரு என்கிறேன். ஆழ்மனதிலிருந்து நினைவுகள், உணர்வுகள், கருத்துகள், புலன்கள் பொறுக்கிய பிம்பங்கள் மற்றும் ஒலிகள் ஆகியவற்றைச் சுமந்த சொற்கள் தாமாக வந்து விழுவதையும் மூளை அவற்றை மொழியின் தர்க்கத்தால் கோர்ப்பதையும் உணர்ந்து பரவசிப்பதற்கு மட்டும் ஒரு துளி சுயத்தைத் தக்கவைத்துக்கொள்கிறேன்.

இந்த ஒரு துளி சுயத்தில் கலந்து ஜோடனைகளற்ற என் புற உலகை வேடிக்கை பார்க்குமாறு வாசகர்களை அழைக்கிறேன். துண்டிலக்கியம், தேர்ந்தெடுத்த படைப்புகள் என மேலும் இரு மின்னூல்களை அடுத்த மாதம் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறேன். அது வரை இந்தப் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

பேயோன்

12-12-2014
சென்னை

குறிப்பு: ‘குழாயைச் சரியாக மூடுவதில்லை’ என்ற சிறுகதை ஆனந்த விகடனின் ‘பேயோன் பக்கம்’ பகுதியில் வெளிவந்தது.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar