விஷ ஊசி – 3

in புனைவு

அத்தியாயம் 1, அத்தியாயம் 2

3

விஷ ஊசி பாரீஸிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தூரத்தைத் தாண்டியிருந்தான். வரைபடப்படி அவன் பெதீத்ஃப்ளேர் என்ற கிராமத்தினூடே சென்றுகொண்டிருந்தான். ஹிட்லரின் ஆட்டோபான் மாதிரி வரவில்லை என்றாலும் சாலைகள் ஏற்கத்தவையாக இருந்தன.

சாலையின் மருங்குகள் இரண்டிலும் கும்மிருள். வானிலும் முழுநிலவுகள் எவையும் இல்லை. நட்சத்திரங்கள்கூடத் தென்படவில்லை. அருகில் சென்று பார்த்தால்தான் உண்டு. பகலில் பசுமித்திருக்கக்கூடிய இருபுற வயல்கள் இப்போது இரவின் தாரிருளில் முக்கியெடுத்தது போல் தோற்றமளித்தன. அதாவது தோற்றமே அளிக்கவில்லை. முந்தைய பயணங்களின் நினைவுகள்தாம் வயல்களின் இருப்பை விஷ ஊசிக்கு நினைவூட்டின.

கிராமப்புறங்களில் யாருக்குமே வெளிச்சத்தில் ஆர்வம் இல்லையோ என்னவோ, ஆங்காங்கே ஓரிரு சர்ச்சுகள், பெரிய வீடுகள், கடைகள், எதிர்ப்பட்ட வாகனங்கள், சில மின்விளக்குகள் ஆகியவை தவிர வெளிச்சத்தை வேறெங்கும் பார்க்க முடியவில்லை.

ஆனால் விஷ ஊசி காலத்தைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் இந்த முடிவைக் கட்டியிருந்தான். அவன் மட்டும் கைக்கடிகாரத்தைப் பார்த்திருந்தானானால் நேரம் நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்ததைக் காட்டியிருக்கும். இப்போதும் ஒன்றும் கெட்டுப்போயிருக்கவில்லை. அவன் பார்க்கலாம்தான். ஆனால் அவன் பார்க்கவில்லை.

புற்களின், விதவித மலர்களின் மணம் விஷ ஊசியின் முகர்ச்சிக்கு உகந்தன. இருந்தாலும் மின்மினிப்பூச்சிகளின் காட்சிதான் அவனை ஒரேடியாக முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னே ஓர் இங்கிலாந்துக் கிராமத்தில் கொண்டுபோய்ப் போட்டது. மின்மினிப்பூச்சிகள் எப்போதுமே அவனுக்கு இருட்டின் திருட்டுச் சுருட்டுகளை நினைவூட்டின. விஷ ஊசியும் சக பத்துவயதுப் பையன்களும் தத்தம் தந்தைமாரிடமிருந்து கவர்ந்தெடுத்து வந்த மலிவான சுருட்டுகளை ஊரெல்லையில் இருளில் புகைத்துக்கொண்டிருப்பார்கள். விஷ ஊசிக்கு எந்நேரமும் ஏதாவது வேலை இருந்ததால் தாமதமாகச் செல்வான். காத்திருக்கும் மின்மினிப்பூச்சிகளில் ஒன்று மவுனமாய் ஒரு சுருட்டை எடுத்துக் கொடுக்கும். விஷ ஊசி அதை வாயில் வைத்துக்கொண்டு தந்தையின் லைட்டரால் மின்மினிப்பூச்சியைப் பிரசவிப்பான். சுருட்டின் வாடையைக் கலைக்க ஒரு பையன் பிராந்தி எடுத்துவந்திருப்பான். எல்லோரும் அதை ஆளுக்கிரு மடக்குகள் குடித்துவிட்டுக் காலிப் புட்டியை ஓங்கிச் சாலை நடுவே அறைந்து உடைப்பார்கள். பின்னர் சிறிது தொலைவு நடந்து ஏதாவது பண்ணையில் நுழைந்து கோழி அல்லது வாத்து முட்டைகளை உடைத்துக் குடிப்பார்கள். சில சமயங்களில் முட்டை இல்லாதுபோய் உள்ளே கையை விட்டு எடுக்க வேண்டியிருக்கும். விட்ட கையை எப்போதும் எடுக்க வந்துவிடாது. சில வாத்துகள் பிடிவாதமானவை. ஒரு கையில் செருகிய வாத்துடன் ஒரு பண்ணையிலிருந்து நண்பர்களுடன் தப்பித்து ஓடிய காட்சி விஷ ஊசியின் மனக் கண்ணில் பட்டது. சுருட்டுகளும் வாத்துகளும் மட்டுமல்ல. மேரி எலியட். ஆனால் அவளை இன்னொரு அத்தியாயத்திற்கு வைத்துக்கொள்வோம். ஆக மொத்தம் இந்த வாழ்க்கைக்குத்தான் அவன் திரும்பிச் செல்ல விரும்பினான்.

இதற்கிடையே… ஊரக ரம்யத்தை ரசித்துக்கொண்டிருந்த விஷ ஊசியின் தலைக்குப் பின்னே ஒரு கவலை நிழலாட்டம் போட்டுக்கொண்டிருந்தது. அவனுடைய காரில் மூன்று பெட்டிகள் இருந்தன. ஒன்றில் ஆடைகள், அதன் ரகசிய அறையில் நிறைய பணம். இரண்டாவதில் ஆடைகள், ரகசிய அறையில் ரேடியோ. மூன்றாவதில் புத்தகங்கள், சிறு சிறு ஒப்பனைப் பொருட்கள், ரகசிய அறையில் பல நாட்டு பாஸ்போர்ட்டுகள், பல நாட்டுப் பணங்கள், ஒரு துப்பாக்கி. இவை மூன்றும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது உளவு பாலபாடம். மூன்றையும் ஒரே சமயத்தில் எப்படித் தூக்கிச் செல்வது என்ற கவலை விஷ ஊசிக்கு ஒரு ஓரத்தில் இருந்தது. பாரீஸில் இருந்தளவுக்குக் கெடுபிடியான சோதனைப் புள்ளிகளை இனி அவ்வளவாகப் பார்க்க முடியாது என்றாலும் சோதனைப் புள்ளிகள் ஓர் அச்சுறுத்தலே. உட்பிரான்ஸை அடைந்து மாயமாகும் வரை இந்த அச்சுறுத்தல் சவால் இருந்து தீரும். இப்போது சுமார் 150 மீட்டர் தொலைவில் பிரகாசமான விளக்குகள் தெரிந்தன. அது ஒரு சோதனைப் புள்ளி.

Tags: , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar