மடியில் விழுந்த மலர்

in கட்டுரை

ஒரு பூங்காவின் பெஞ்சு எனக்கு இடம் கொடுத்திருந்தது. அதன் சுண்ணாம்புப் பூச்சு உரிந்து ஒரு தலைமுறை ஆகியிருக்கும். அனாதைச் சருகுகளும் நிராகரிக்கப்பட்ட பறவை எச்சங்களுமே அந்த சிமெண்ட் பெஞ்சில் மிச்சமிருந்தன.

அப்போது எங்கிருந்தோ ஒரு பூ என் மடியில் வந்து விழுந்தது. ஓசையில்லாமல் உரிமையாக என் மடியில் ஏறி அமரப் பார்த்த ஒரு பூனைக்குட்டி போல. வெள்ளையாக இருந்தது அந்தப் பூ, ஒரு வெள்ளைப் பூனை போல. பூக்களின் அருவியில் ஒரு துளி மட்டும் என் மேல் விழுந்தது போல. அதன் ஐந்து இதழ்களுக்கு நட்டநடுவே சிவப்பும் கருநீலமும் ஆரஞ்சுமாய் இன்னொரு பூவைக் காட்டின வண்ணங்கள். ஐந்து இதழ்களும் ஐவேறு திசைகளைக் காட்டின. ஐந்து திசைகளிலும் நான்தான் இருக்கிறேன் பார் என்றன. உண்மைதான். பூங்காவில் அந்தப் பூ காட்டிய திசைகள் எங்கும் அதன் சகாக்கள் பரவியிருந்தன.

பூவை மடியிலேயே விட்டிருந்தேன். அதை என் மடியிலிருந்து கறக்க எனக்கு மனம் வரவில்லை. இன்னுங்கூடச் செடியில் இருக்கும் நினைப்பிலேயே தனது ஈரத்தை, குளிர்ச்சியைத் தக்கவைத்திருந்த அந்தப் பூ ஒரு குழந்தையாக என் மடியில் கிடந்தது. அந்தப் பூ எனக்கு ‘அந்தப் பூ’வாகவே இருந்தது. அதன் பெயரை என் மூளை அறிந்திருக்கவில்லை. நான் பார்த்த ஐந்திதழ் மலர்கள் எதுவும் இது போல இருக்கவில்லை. அசப்பில் பித்துமுத்திப் பூ போல் இருந்தாலும் இது அந்தப் பூ அல்ல. பித்துமுத்திப் பூவுக்குக் கொம்புகள் இருக்கும். எந்தச் செடியில் விளைந்த பூ இது? திருப்பாட்டன்புதூரில் தன் வீட்டைச் சுற்றிப் பூந்தோட்டம் வைத்திருந்த தண்டபாணி வாப்பாவைக் கேட்கலாம். சொல்ல மாட்டார். உயிரோடு இல்லை. ரயில் நிலையத்தில் கவலையின் நார்களில் பூக்களைக் கோத்து விற்ற திரிவேணியக்காவுக்குத் தெரிந்திருக்கலாம். அவளும் இன்று நம்மிடையே இல்லை. தன் வாழ்நாளில் மலர்களையே ரசித்திராத ஹெட்மாஸ்டர் ‘மல்லிகை அலர்ஜி’ மல்லிகார்ஜுனனும் போய்ச் சேர்ந்துவிட்டார். எல்லோரும் அந்தப் பூவை நிராதரவாக விட்டுச் சென்றுவிட்டது போல் இருந்தது.

ஒரு சுனையிலிருந்து நீரள்ளுவது போல் இரு கைகளாலும் அதை வாஞ்சையாக அள்ளிக்கொண்டேன். ஒரு பெரிய எள்ளுருண்டையைப் பிடிக்க விரிந்த குழந்தையின் கைவிரல்களைப் போல் அதன் இதழ்கள் இருந்தன. ஒரு எள்ளுருண்டையை இழந்த சோகம் சிறிதுமின்றி என் கைகளில் ஒரு தங்கையைப் போல் உறங்கியது அந்தப் பூ. சுற்றிலும் அதே பூக்கள் இறைந்து கிடந்தன. மாலை நடைக்கு வந்த பெரியவர்கள், செருப்புக் கால் முளைத்த மலர்களாய் துள்ளிச் சென்ற குழந்தைகள், அவர்களைக் கனவுகளில் சுமந்த தாய்மார்கள், எல்லோரும் அவற்றைக் கள்ளமில்லாமல் மிதித்துச் சென்றார்கள். அத்தனைப் பூக்கள் இறைந்து கிடக்க ஒன்று மட்டும் என் கைகளில். தான் உதிர்ந்தது அதற்குத் தெரியுமா? அது வந்து சேர்ந்த இடம்தான் அதற்குத் தெரியுமா? வாய்ப்பில்லையே.

Tags: ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar