சிகரெட்

in கட்டுரை

லபக்குதாசிடமிருந்து செல்பேசி அழைப்பு வந்தது.

“அஷோக் பில்லர் பக்கத்துல உங்க பையன் சிகரெட் புடிச்சிட்டிருக்கான்.”

எனக்குத் திடுக்கிட்டது.

“நெஜமாவா? அவன்தானா? நல்லா தெரியுமா?”

“அவனேதான். இப்பத்தான் பத்த வெச்சான். டக்குனு வந்தா புடிச்சிரலாம்.”

“நீங்க அவன நிறுத்திவைங்க. நான் வந்துர்றேன்.”

“என்னப் பாத்தா ஓடிருவான். நீங்க வாங்க சீக்கிரமா.”

நான் வீட்டுக்கு வெளியே ஓடினேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு ஆட்டோகூட இல்லை. சிறிது தூரம் நடந்தபோது வழியில் ஒருவர் ஸ்கூட்டரை விட்டு இறங்கிக்கொண்டிருந்தார். அவரைத் தள்ளிவிட்டு ஸ்கூட்டரைக் கிளப்பிக்கொண்டு விரைந்தேன். கத்தினார் அந்த அன்பர்.

சரவணபவனை நெருங்குகையில் பின்னே சைரன் ஒலியுடன் போலீஸ் கார் ஒன்று வேகமாகப் பின்னே வந்தது. எனக்குத்தானோ? அசோக் பில்லர் அருகில் இருந்த செய்தித்தாள் கடை வாசலில் நின்று லபக்குதாஸ் கை காட்டினார். நான் வேகமாக அவர் அருகே வண்டியை நிறுத்தினேன்.

“அந்தப் பக்கமாத்தான் போனான். எங்கன்னு தெரில” என்றார் லபக்குதாஸ். நான் வண்டிச் சாவியைப் பையில் போட்டுக்கொண்டு அந்தப் பக்கமாக நடந்து பார்த்தேன். ஆளைக் காணோம். லபக்குதாசிடம் திரும்பி வந்தேன். வேகமாக வண்டி ஓட்டியதில் மூச்சிரைத்தது.

செய்தித்தாள் கடைக்காரரிடம் “சிகரெட்டு ஒண்ணு குடுப்பா” என்றேன். வாங்கிப் பற்றவைத்து இரண்டு ஊதுகள் ஊதினேன். எனக்கு ஆத்திரம் இன்னும் அடங்கவில்லை. “படிக்கிற வயசுல சிகரெட் கேக்குது. சிகரெட் என்ன வெண்டக்காயா?” என்றேன்.

அதை ஆமோதிப்பது போல் வாயைத் திறக்கத் தொடங்கிய லபக்குதாஸ் பாதி வழியில் பேச்சை மாற்றி, “அதோ வரான் பாருங்க” என்றார். அவர் சொன்ன திசையில் சுமார் ஐம்பதடி தொலைவில் வந்துகொண்டிருந்தது சாட்சாத் சற்று முன்பு அவனால் பிடிக்கப்பட்டுக்கொண்டிருந்த சிகரெட்டுக்குச் சொந்தக்காரன். எனக்கு பகீரென்றது. சிகரெட்டைக் கீழே போட்டுவிட்டு வண்டியைக் கிளப்பிக்கொண்டு மாயமாகிவிட்டேன்.

Tags: , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar