நகர மாற்றான்

in கவிதை

அறியாத தெருக்களில்
வாகனங்கள் பின்னே அலற
சாலை நடுவில் நிற்பவன்
நகர மாற்றான்.

ஆடையும் நிறமும் கிருதாவும்
இந்த ஊர்க்காரன் அல்ல என்று காட்ட
மூட்டையொன்றைத் தோளில் தொங்கி
நட்டநடுவே அசராமல் நிற்பவன்
நகர மாற்றான்.

“இந்தி மாலும்?” “தெலுகு தெலுசா?”
“மலையாளம் கொத்தல்லோ?”
சுற்றியுள்ளோர் எல்லா மொழியும் பேசிப் பார்க்க
எதையும் கேளாதது போல் நிற்பவன்
நகர மாற்றான்.

இடம் மாறி மொழி மாறி
அனைத்திலிருந்தும் அந்நியப்பட்டு
வந்தது பெருந்தவறோ
தானும் ஓர்க் கனவோ என மருண்டு
நிற்பவனின் காதில் புரியாமல் விழுந்தது
“அவனப் புடிச்சு நகத்துங்கடா, நகர மாற்றான்!”

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar