தமிழனின் அடையாளச் சிக்கல்

in கட்டுரை

காலை ஏழு மணிக்கு டீக்கடை வாசலில் நின்றிருந்தேன். அப்போது நெற்றிச் சந்தனமும் வயிற்றுத் தொப்பையுமாக ஓர் உயரமான ஆள் அடிக்க வருவது போல் டீக்கடையை நோக்கி வந்தான். தாட்டியான உருவம். காரியஸ்தன் போல் தெரிந்தான்.

என்னை நெருங்கியதும், எனது காலைத் தேநீருக்காக நான் காத்திருக்கையில் என் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டான். பயப்படக்கூட அவகாசம் இல்லை. நான் அந்த அறையின் தாக்கத்தால் வால்ட் டிஸ்னி போல் 360 டிகிரி சுற்றி நின்றதில் மீண்டும் அவனே எதிரில் இருந்தான். இன்னொரு அறைக்காகவோ என்னவோ என் வலது தோளை இறுகப் பிடித்தான். அது அவனுடைய சாதாரணப் பிடியாகவே இருந்தாலும் ஆச்சரியம் இல்லை. என் இதயத்தின் வால்வுதனை பீதி கவ்வியது.

இம்முறை மூக்கில் குத்துவதற்குத் தயாராக வலக்கை முஷ்டியை உயர்த்தி, “யார் மேல கை வெச்ச தெரிமாடா?” என்றான்.

“தெரிலீங்க” என்று நான் பதிலளிக்கத் தொடங்கியபோது அந்தத் தடியன் பின்னாலிருந்து “ராசே!” என்று கத்திக்கொண்டு ஒருவன் ஓடி வந்தான். டீ மாஸ்டர் வெளியே வந்து யாரென்று பார்த்தார்.

எனக்கான தடியன் என் மேலிருந்து கையை எடுக்காமல் திரும்பிப் பார்த்தான். “அவன் இல்ல ராசு. அது வேற ஆளு” என்றான். ராசு திரும்பிப் பார்த்து என்னை வெறித்து ஆராய்ந்தான். பின்பு அருவருப்புடன் முகத்தைத் திருப்பிக்கொண்டான். அதன் பிறகு அவன் என்னைப் பார்க்கவேயில்லை. தவறான ஆளை அடித்தது அவனுக்கும் அவமானமாகத்தானே இருக்கும்.

புதிய ஆள் என்னிடம் “சாரி பிரதர், கன்ஃபீஸ் ஆயிட்ச்சு” என்றுவிட்டுத் தேநீர் ஆசிரியரிடம் “மாஸ்டர், ரெண்டு டீ ஸ்ட்ராங்கா” என்றான். “சாரி பாசு” என்றான் மீண்டும்.

நான் இழந்த மானத்தை மீட்பதற்காக இயல்பு நிலையைக் கொண்டுவர அல்லக்கைக்கு பதிலளித்தேன்.

“பரவால்ல. ஒரே சாயல்ல பல பேர் இருப்பாங்க. கொழப்பம் வர்றது சகஜம்தான். நீங்க எங்க வொர்க் பண்றீங்க?”

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar