2015ஆம் ஆண்டுக்கான அருளுரை

in கட்டுரை

2014ஆம் ஆண்டுக்கு ‘சென்று வா, வென்று வா’ என்று பிரியாவிடை கொடுத்து வழியனுப்பிவைக்கும் வேளையில் 2015ஆம் ஆண்டுக்கான எதிர்பார்ப்புகள் கன ஜோராக உருவாகிவருகின்றன. ‘ஒரு வேலை ஆயிற்று’ என்று கடவுள் சோம்பல் முறிப்பதை மனக்கண்ணில் காண முடிகிறது.

கடந்த பல புத்தாண்டு தினங்களைப் போல் இம்முறையும் “மகிழ்ச்சியான & வளமான 201x” அமைய எல்லோரும் விரும்புகிறார்கள். புத்தாண்டு வாழ்த்துச் சொல்வது ஒரு சடங்குதான். என்றாலும் சென்ற ஆண்டு போல் இந்தாண்டு இருக்காது என்று உறுதியாக நம்புகிறேன். நாள்காட்டியைப் பாருங்கள். எண்கள், கிழமைகள் எல்லாம் மாறிவிட்டன.

இந்தாண்டு நினைவில் நிற்பதாக இருக்கும். ஜாதி-மத-இனப் படுகொலைகள், பெருநிறுவனங்கள் இயற்கை வளங்களைச் சுரண்டுதல், மக்கள் தமது நிலத்திலிருந்து துரத்தியடிக்கப்படுதல், பட்டினிச் சாவுகள், வீடிழப்பு, பலவீனப்படுத்தப்பட்டவர்கள் பண்பாட்டின் பெயரால் கொல்லப்படுதல், ஒடுக்கப்படுதல் மற்றும் வேறு விதங்களில் சீரழிக்கப்படுதல், சுதந்திரங்கள் சிதைதல், சிறு பண்பாடுகள், மொழிகள் அழிக்கப்படுதல், சினிமா மற்றும் ஆன்மீக நடிகர்களுக்கு அடிமைகள் சேருதல், இயற்கைப் பேரழிவுகள், குறிப்பாகக் கொலைகார அரசுகள் அதிகாரத்தைப் பிடித்தல், சாலை விபத்துகள், விமானங்கள் காணாமல் போதல், படகுகள் கவிழ்தல், நார்சிசக் கூச்சல்கள் உள்ளிட்ட சலிப்பூட்டும் நிகழ்வுகளுக்கு 2015இல் இடம் இருக்காது என்றே தோன்றுகிறது.

ஏனெனில் ஆண்டொன்று போனால் வயதொன்று ஆவது நமக்கு மட்டுமல்ல, மனித நாகரிகத்திற்கும்தான். அதுவும் நாகரிகங்களிலேயே சிறந்ததான இந்திய நாகரிகம் பரிணாம வளர்ச்சியில் இன்னும் ஒரு சிறிய, ஆனால் முக்கியமான, அடியை எடுத்துவைத்திருக்கிறது. 2015ஆம் ஆண்டினை உடல், பொருள், ஆவி கொண்டு வரவேற்போமாக.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar