என் மேல் எவனாவது கைவைத்தால்

in கட்டுரை

துணிந்த பின் எண்ணுவ மென்ப திழுக்கு ஆயினும்
அஞ்சுவது அஞ்சாமை பேதமை.

– திருவள்ளுவர்

தமிழ்ச் சூழல் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்றால் ஆங்கிலத்தில் “unfortunate” என்பார்களே, அந்தளவுக்கு. ஓர் எழுத்தாளர் ஒரு நாவலை எழுதுகிறார். சாவகாசமாக நான்காண்டுகளுக்குப் பின்பு அந்த நாவலைச் சிலர் எதிர்க்கிறார்கள். ஒரு பக்கம் மிரட்டப்படுகிறார். இன்னொரு பக்கம் கோழை என அழைக்கப்படுகிறார். இரு தரப்பினரும் அவரை ஓட ஓட விரட்டுகிறார்கள். நீதிமன்ற வழக்கு பற்றிய மிரட்டலுக்கே வாழ்க்கைப் பாதையை மாற்றிக்கொண்டவர்கள் உண்டு. ஊரில் இருக்க விட மாட்டேன் என்றால் என்ன செய்வது?

எல்லா எழுத்தாளர்களும் ஒரே வார்ப்பில் உருவாவதில்லை. அவர்களின் பெயர்களும் முகங்களும்கூட வெவ்வேறாக இருக்கும். நான் எழுதிய ஒரு படைப்பைச் சொல்லி எந்தக் கும்பலாவது என்னை மிரட்டினால் “கோர்ட்டில் பார்த்துக்கொள்வோம், ஃபோனை வை” என்று சொல்லிவிடுவேன். இத்தனைக் காலமாக எழுதுபவனுக்கு நீதிமன்றத்திற்குச் செல்லுமளவுக்கு விவரம் இருக்காதா? நான் டீக்கடைக்குப் போக்கும்போது கும்பல் ஒன்று வழிமறித்து வீச்சறுவாளைக் காட்டி உறுமினால், “வேலையைச் சீக்கிரம் முடி, எனக்கு வேறு வேலை இருக்கிறது” என்பேன். அல்லது அன்றைய வீட்டு நிலைமையைப் பொறுத்து, “என் மனைவிதான் என் பெயரில் எழுதுகிறார், இதுதான் என் விலாசம், உங்கள் வீச்சறுவாளின் கூர்மை ஏமாற்றமளிக்கிறது” என்பேன். ஆனால் இதெல்லாம் நம்மால் சமாளிக்க முடிகிற அச்சுறுத்தல்கள்.

“என்னை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்” என்று எதிர்ச்சவால் விடும் தைரியம் எனக்கு இருக்கிறது. நான் ஆண்பிள்ளை; எனக்குக் கற்புப் பிரச்சினைகள் கிடையாது. கொல்லலாம். அதிகபட்சம் கை காலை வெட்டலாம். ஆனால் ‘உன் அபிமான நடிகைகளைக் கொல்வோம்’, ‘நீ விரும்பும் எழுத்தாளுமைகளைத் தீர்த்துக்கட்டுவோம்’ என ஆரம்பிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு நாம் ஜவாப்தாரி ஆகிவிட மாட்டோமா? அல்லது என் வீட்டுக்குள் ஒரு பெட்ரோல் குண்டை எறிந்துவிட்டுப் போகிறார்கள் என்று வையுங்கள்: அதற்குப் பிறகு நானோ என் மனைவி-மகனோ அங்கே உயிரோடு இருக்க முடியாது. காரணம்: பெட்ரோல் மற்றும் நெருப்பு. இதுதான் எனது துணிவின் எல்லை. என்னுடைய ஹீரோயிச ரொமான்டிசிச தர்மாவேச சுயநல தன்மானத் தொடைதட்டு மீசைமுறுக்குத் தலைசாயுதல் செய்யோமுக்காக த்ரிஷாவையோ ஸ்ரீதிவ்யாவையோ என் மனைவி-மகனையோ என்னால் தியாகம் செய்ய முடியாது. என்னால் கோர்ட் கேசுக்கும் ஈமக்கிரியைகளுக்கும் இடையே அலைந்துகொண்டிருக்க முடியாது. ஒரே சமயத்தில் இரண்டிற்கும் செலவுசெய்யும் வரை நான் சம்பாதிக்கவும் இல்லை.

கடைக்காரனெல்லாம் முகத்தைத் திருப்பிக்கொண்டால் வீட்டில் சாப்பாடு எப்படி சமையும்? வீட்டுக்குப் பால் போட மாட்டார்கள். செய்தித்தாள் எறிய மாட்டார்கள். என் வீட்டுக்குத் தீவைப்பதாக செய்தித்தாளில் மோடி அமித்ஷா ஜாதித் தலைவர்கள் படம் போட்டு அறிவிப்பு வந்தால்கூட எனக்குத் தெரியாமல் போய்விடும். எழுத்தாளன் என்பதால் சுயமழித்தல் பிரச்சினை இல்லை, ஆனால் தலைமுடியை எங்கே போய் வெட்டிக்கொள்வது? பேருந்தில் ஏற விட மாட்டார்கள், ஆட்டோ கிடைக்காது. உள்ளூர் ரவுடிகளையும் போலீசையும் தவிர எல்லோரும் என்னைக் குடும்பத்தோடு தவிர்த்தால் அன்றாட வாழ்க்கையே நாறிவிடுமே! எழுதுவதுகூடக் கிடக்கட்டும், அதற்காகவா பிறந்தோம்? வீட்டு எந்திரம் இயங்க வேண்டாமா? ரவுடிகளோடு மல்லுக்கட்டுவதுதான் என் வேலையா? மோதி மிதிப்பது, முகத்தில் உமிழ்வது எனக்கில்லை. மதியாதார் தலைவாசல் மிதிக்காமல் இருந்துகொள்வேன்.

Tags: , , ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar