சிறுகதை சம்பவம்

in கட்டுரை

நான் காலாட்டிக்கொண்டிருந்தேன் மற்றும் தீக்குச்சியால் பல் குத்திக்கொண்டிருந்தேன். அது ஒரு காத்திருப்பு. லபக்குதாஸ் கணினியில் சிறுகதை எழுதிக்கொண்டிருந்தார்.

“இன்னும் பத்து வரிதான்” என்றார். அவரும் இடையிடையே காலாட்டிக்கொண்டுதான் இருந்தார்.

சீலிங்கில் மெல்லிய துப்பட்டாச் சருகாய்ப் படர்ந்திருந்த ஒட்டடையை முழுமையாகப் பார்த்து முடிப்பதற்கு முன்பு, “முடிச்சாச்சு!” என்று அறிவித்தார் லபக்குதாஸ். “பிரின்ட் அவுட் எடுத்து ஒரு வாட்டி படிச்சா வேலை முடிஞ்சுது” என்றார்.

“நம்ம கதைய நாமளே படிக்கிறதா?” என்றேன். அவர் பதிலின்றி அச்சுக் கொடுத்தார். அடுத்து அவரது இலேசர் அச்சுப் பொறி அவருடைய சிறுகதையை மெல்ல ஒவ்வொரு பக்கமாக உமிழ்ந்தது. ஆறு பக்கங்களையும் சேகரித்து ஸ்டேப்லர் குத்திப் படிக்கத் தொடங்கினார்.

படிக்கப் படிக்க அவரது முகத்தில் தீவிரம் கூடியது. கண்ணின் பாவைகள் நடுங்கின. அவசரமாகக் கடைசிப் பக்கத்தைப் படித்தார். வெளிறிய முகத்தோடு என்னைப் பார்த்தார். “கத நல்லா வந்திருக்கு” என்றார் உதடுகள் துடிக்க.

“அப்படியா? நல்லாத் தெரியுமா? எதுக்கும் இன்னொரு மொற படிச்சுப் பாருங்க” என்றேன்.

அவரோ வேறு உலகிற்குள் போயிருந்தார். அவர் உடலெல்லாம் நடுங்கியது, முகத்தில் பல இடங்களில் வியர்வை அரும்பு விட்டது. சிறுகதையை கணினி மேஜை மேல் எறிந்தார். பிறகு மேஜையிலிருந்து அதைத் தள்ளி விட்டார்.

“இது என் கத இல்ல! இது என் கத இல்ல!! அதத் தூக்கிப் போடுங்க! எங்கிட்ட கொண்டு வராதீங்க!” என்று வெறி பிடித்தாற்போல் அலறத் தொடங்கினார். “யூ! யூ கெட் அவுட் ஆஃப் ஹியர்!” என்று கத்திக்கொண்டு கீழே கிடந்த சிறுகதையைக் காலால் உதைத்தார். வாசல் வரை அதைக் கால்பந்தாடிக்கொண்டு போனார். இந்த மாதிரி நான் பார்த்ததேயில்லை.

நான் வாய் பிளந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, இன்னோர் அறையிலிருந்து அவருடைய மனைவி வெளிவந்தார். அவர் கையில் ஒரு புத்தகம் இருந்தது. அதைக் கணவரிடம் நீட்டினார். லபக்குதாஸின் சமீபத்திய சிறுகதைத் தொகுப்பான ‘நாட்களின் தோட்டம்’.

லபக்குதாஸ் அதை மனைவி கையிலிருந்து பறித்துப் புத்தகத்தின் நடுவில் ஏதோ ஒரு பக்கத்தைத் திறந்து தற்கொலை குண்டுதாரி போல் உதடுகள் ஓசையின்றி அசையப் படிக்க ஆரம்பித்தார். சில நொடிகளில் அவரது மூச்சிரைப்பு நின்றது. கண்கள் இயல்பு நிலைக்குத் திரும்பின. உடல் நடுக்கம் அடங்கியது.

“இந்த புக்கு எப்படி என் கைல வந்தது?” என்று கேட்டவர், கதவருகே கிடந்த சிறுகதையைப் பார்த்தார். “ஓ” என்றார்.

“நீங்க கதை எழுதுறப்ப உங்களுக்கு எப்பவாச்சும் ஒண்ணு வருமே, அது வந்துச்சு” என்றார் அவர் மனைவி.

“அதத் தூக்கிப் போட்ரு” என்றார் மனைவியிடம். “ஐ டோன்ட் வான்ட் எனி பார்ட் ஆஃப் இட். எஸ்பெஷலி ஆல் தி பேஜஸ்.”

உளவியலில் இதை guilt attack என்பார்கள். நம்முடைய தொழில் தர்மத்தை மீறி ஒரு நல்ல கதை எழுதிவிட்டோமே என்ற குற்ற உணர்வின் திடீர்க் கொந்துதல். ஆனால் இந்த மனிதருக்குள் இவ்வளவு டிராமா இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. அந்தச் சிறுகதையைக் காப்பாற்றி வீட்டுக்கு எடுத்துச் சென்று படித்தேன். மயிரு மாதிரி இருந்தது. அவரிடம் சொல்லவில்லை. ஏனென்றால் என் பேச்சை நம்பி அதை ஏதாவது பத்திரிகைக்கு அனுப்பிவிடுவார்.

Tags: ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar