60 நாட்கள்

in பிற

“இந்தக் குறிப்பை யாராவது பார்ப்பார்களா என்ற நிச்சயம் இல்லாமலே இதை எழுதத் தொடங்குகிறேன். ஒருவேளை இது யார் கையிலாவது கிடைத்தால், நடந்த எல்லா விஷயங்களையும் விளக்குவதற்கான ஒரு பதிவாகப் பயன்படும் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன். இவ்வளவு நடந்த பிறகும் கீற்றளவேனும் நம்பிக்கையைத் துளிர்த்துவைத்திருப்பதுதானே மனித இயல்பு.

“பின்னணிப் பூடகம் ஏதுமின்றி என் பதிவைத் தொடங்குகிறேன். அறுபது நாட்களுக்கு முன்பு, 22 ஏப்ரல் 2033 அன்று, காலையில் வழக்கம் போல் கண்விழித்தேன். அன்றைக்குக் கண்விழித்த ஒரே உயிர் நான்தான் என்று நான் உடனே உணரவில்லை, ஆனால் பார்த்தேன் – என் குடும்பத்தில் எல்லோரும் செத்துக் கிடந்தார்கள். என் மனைவி, என் மகன், என் மகள் எல்லோரும். அவர்களை எழுப்ப முயன்றேன். பயனில்லை. மூச்சு நின்றுவிட்டிருந்தது. நான் மருத்துவன் அல்ல. அவர்கள் இறந்ததாக நம்பாமல் அவசரத் தொலைபேசி எண்களை அழைத்தேன். பதில் இல்லை. உதவிக்கு அண்டைவீட்டாரை அழைக்க வெளியே ஓடினேன். தெருவில் இன்னும் நிறைய பேர் விமானக் குண்டுவீச்சுக்கு ஆளானது போல் விழுந்து கிடந்தார்கள். பலரை எழுப்ப முயன்றேன். ஆனால் தெருவே இறந்து கிடந்தது. சாலைகளில், வீடுகளில், கடைகளில், அலுவலகங்களில், மருத்துவமனைகளில், பேருந்து, ரயில் நிலையங்களில், எங்கும் யாரும் உயிரோடு இல்லை. கனவா நனவா என்று புரியாமல் அழுதுகொண்டே வீடு திரும்பினேன். என் கண்ணீர்ச் சுரப்பிகள் வற்றும் வரை நாளெல்லாம் அழுதேன்.

“எப்போது பசியாலும் சோர்வாலும் தூங்கினேன் என்று நினைவில்லை. மறுநாள் கடும் பசி என்னை எழுப்பியது. என் குடும்பத்தினர் கோமாவில் இருப்பது போல் படுத்திருந்தார்கள். முப்பது மணிநேரத்திற்கு மேற்பட்ட காலத்திற்குப் பின்பும் அவர்களின் உடல்கள் இன்னும் அழுகத் தொடங்கியிருக்கவில்லை. யாருடைய உடல்களும் அழுகவில்லை. கடைசி வரை. அது நிச்சயமாக ஒரு நோய். அந்த நோய்க்கு எங்களிடம் பதில் இருக்கவில்லை.

“என் பிரிவுத் துயரத்திலிருந்து விடுபட்டு உயிர்பிழைத்தலைப் பற்றியும் தனிமை பற்றியும் சிந்திக்கத் தொடங்க மூன்று நாட்கள் ஆயின. அதற்குப் பின்பு பல்பொருள் அங்காடிகளை வேட்டையாடத் தொடங்கினேன். காமிராக்களைப் பற்றிய கவலையின்றி உணவுப் பொருட்களை அள்ளிக்கொண்டேன். எதற்கும் இருக்கட்டும் என்று கல்லாவை உடைத்துக் கொஞ்சம் பணத்தையும் எடுத்துக்கொண்டேன். காற்றைத் துணையாகக் கொண்டு எனது மோட்டார்சைக்கிளில் அலைந்தபடி இருந்தேன். எங்காவது, யாராவது உயிரோடு இருப்பார்களா என்று வெறி பிடித்தாற்போல் தேடினேன். ஆனால் விலங்குகள்கூட இல்லை.

“ஒரு மாதம் இப்படி வாழ்ந்தேன். நடப்பதெல்லாம் நிச்சயம் கனவுதான் அல்லது ஏதோ பிரமைதான் என்று இயன்ற வரை என்னை நம்பவைத்துக்கொண்டேன். அதன் பிறகு தேடலைக் கைவிட்டேன். இருந்தாலும் என் தொலைபேசியில் தற்போக்காக எண்களைச் சுழற்றியோ இணையம் வழி செய்திகள் அனுப்பியோ மற்றவர்களைத் தொடர்பு கொள்ளும் முயற்சியை நான் நிறுத்தவில்லை. அது தேடலிலிருந்து ஒரு பொழுதுபோக்காக, ஒரு விளையாட்டாக மாறியிருந்தது. மின்சாரம், குடிநீர் எல்லாம் இருந்தன. “ஓர் இறந்த அலைவரிசையில் வைக்கப்பட்டு”த் தொலைக்காட்சியும் இயங்கியது. பார்க்க எதுவும் இல்லை. புதிய தொலைக்காட்சிப் பெட்டி, காணொளி இயக்கி, திரைப்பட வட்டுகள், இசைக் குறுவட்டுகள் கடைகளில் கிடைத்தன. சிரமம் இல்லாத ஷாப்பிங். ஆனால் நான் பார்த்த, கேட்ட ஒவ்வொன்றும் என் தனிமையைப் பெரிதாக்கிக் காட்டின. என்னைச் சுற்றி இத்தனை பேரா இருந்தார்கள் என்று ஆச்சரியப்படவைத்தன.

“பிறகு ஒரு நாள் மின்சாரம் ஒழிந்தது. அதையடுத்து வந்த நிச்சலனம் என்னைப் பைத்தியமாக்கியது.

“மரணத்தின் காற்று உலகம் முழுவதும் வீசியிருக்க வேண்டும். என்னைத் தவிர யாரும் பிழைக்கவில்லை என்பது தெளிவு. இந்தக் குறிப்பு படிக்கப்பட்டுக்கொண்டிருந்தால் மட்டுமே என் ஊகம் பொய்யாகும். எனக்கு வயது முப்பது. இன்னும் 15-20 ஆண்டுகளுக்குத் தேவையான உணவு இந்த நகரத்திலும் அண்டை நகரங்களிலும் இருக்கிறது. உடுத்த ஆடைகள், படிக்கப் புத்தகங்கள், அலைந்து திரிய மலைகள், ஆறுகள், ஓடைகள் இருக்கின்றன. என் வாழ்க்கை முழுவதையும் இப்படி வாழ்ந்துவிடலாம். ஆனால் எதற்காக? நான் மட்டும் இருந்து என்ன சாதித்துவிடப்போகிறேன்? தனியாக இருந்துவிட முடியுமா? எனக்கு ஒரு நோய் வந்தால் என்ன ஆவேன்? எத்தனை நாள் மனம் கோணாமல் இருப்பேன்?

“கடைசியாக நான் ‘வாங்கிய’ பொருள் ஒரு ரென்னர் 60 துப்பாக்கி. இந்தக் குறிப்பை எழுதிய பின்பு யார் பெற்ற பிள்ளையாக இருந்தாலும் அவரிடமிருந்து விடைபெறுகிறேன். என் குறிப்பில் உதவிகரமான அறிவியல் தகவல்களோ விளக்கங்களோ எவையும் இல்லை என்பதை அறிவேன். எனக்குத் தெரிந்தது, என்னால் முடிந்தது இவ்வளவுதான். இன்னும் ஆயிரம் பக்கங்களை நான் எழுத முடியும். ஆனால் அது உங்களுக்குப் பயன்படாது. அது என் மரணத்தைத்தான் தாமதப்படுத்தும். எனக்குச் சோர்வாக இருக்- ”

“நியூ இயர் அன்னிக்கி நம்ம வீட்டுக்கு எங்க விருத்தாசலம் மாமாவும் அவரு பொண்ணும் வந்திருந்தாங்கல்ல, அந்தப் பொண்ண ஞாபகம் இருக்கா?”

“இல்லையே.”

“அப்ப உங்ககிட்ட சொல்றதே வேஸ்ட்டு. சரி, விடுங்க.”

“-கிறான்.”

“மத்தியானம் வந்துட்டு அஞ்சு மணி வரைக்கும் இருந்தாங்க. அந்தப் பொண்ணு ஒரு வார்த்தை பேசல. என்ன கேட்டாலும் ‘ஆமா’, ‘இல்ல’ன்னு ரோபோ மாதிரி பேசுது. காபிய வாங்குறப்ப மேலயே கொட்டிக்கிச்சு. கொட்டிட்டு என் தப்பு மாதிரி என்னை மொறைக்குது! அவ அம்மாவும் அப்டித்தான். ஒலகமே அவங்க காலடில விழுந்து கெடக்கணும்னு நினைப்பா. கொடவுன் மாதிரி ஒரே ஒரு வீடு தவிர கைல பைசா காசில்ல.”

“ம்ம்ம்…”

“அந்தப் பொண்ணுக்கு நம்ம ஜீவாவக் கேக்குறாங்க, அதான் சொல்ல வந்தேன். அவன் படிப்புக்கும் வேலைக்கும் அவன் லெவலே மாறிக்கிட்டிருக்கு. இந்த வெளங்காமூஞ்சில்லாம் அவனுக்கு சரியா வராது.”

“பொண்ணு பார்வையா இருந்தாளோன்னு ஞாபகம்.”

“யாரு, அதுவா? நீங்கதான் மெச்சிக்கணும்.”

“ஏதோ தீஞ்ச வாசனை வருது.”

“நம்ம வீட்ல இல்ல.”

“ஓ… ஒரு கவிதை எழுதுனேன், படிச்சுப் பாரேன்….”

“ஐயோ, எனக்கு வேல இருக்கு. அப்புறம் படிக்கிறேன்.”

Ctrl+A, Delete

Do you want to save the changes to 60days-sciencefiction-shortstory.doc?

No

Tags: ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar