சுரேசு ஒரு சகாப்தம்

in கட்டுரை

சமூகம் ஒரு தனிமனிதனை எந்த அளவுக்குப் புறக்கணிக்க முடியும் என்பதற்கு மோசமான உதாரணம் ஒன்றை சமீபத்தில் எனது ஊர்க்காரர் ஒருவரிடம் கேள்விப்பட்டேன்.

எங்கள் ஊரில் ஒருவர் இருந்தார். அதாவது எங்கள் ஊரில் நிறைய பேர் இருப்பார்கள். அதில் இவரும் ஒருவர். நடுத்தர வயது ஒண்டிக்கட்டை. அடிக்கடி எங்கள் தெருக்களில் அலைந்துகொண்டிருப்பார். அவர் எங்கிருந்து வருகிறார் என்பது யாருக்கும் தெரியாது. யாரைப் பார்த்தாலும் இனிமையாகப் புன்னகைப்பார், சுரேசு, சுரேசு என்பார். அவர் வேறு வார்த்தை பேசி யாரும் கேட்டதில்லை.

மக்கள் அவரைப் போ போ என விரட்டுவார்கள். நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது விளையாட்டாக அவர் முதுகில் ஓங்கி ஒரு போடு போட்டுவிட்டு ஒடிவிடுவோம். அரிதாகக் கல் வீசுவோம். சிலர் அவருக்கு சாப்பிட ஏதாவது கொடுப்பார்கள். சில சமயங்களில் வாங்கித் தின்பார், சில சமயம் இனிமையாகப் புன்னகைத்து மறுத்துவிடுவார். விதி எப்படியோ அவருக்கு சுத்தமான ஆடைகளைக் கொடுத்திருந்தது.

எங்கள் ஊரில் அவரைப் பற்றிப் பல கதைகள் நிலவின. அவர் பெயர் சிதம்பரம் என்றும் வாழ்க்கை எனும் சூதாட்டத்தில் கோடிக்கணக்கில் சொத்துகளையும் உறவினர்களையும் இழந்து நடுத்தெருவிற்கு வந்துவிட்டவர் என்றும் அதனால்தான் புத்தி பேதலித்து அலைகிறார் என்றும் சுரேசு என்பது சாலை விபத்தில் இறந்துபோன அவரது மகனுடைய பெயர் என்றும் சொன்னார்கள்

நான் கல்லூரி முடித்த பின்னர் சென்னையில் வேலை கிடைத்து ரயில் நிலையத்திற்குச் சென்றுகொண்டிருந்தபோது எதிரில் வந்த அவர் என்னிடம் கடைசியாகச் சொன்ன வார்த்தை என்னால் இது வரை மறக்க முடியாதது: “சுரேசு”. அவர் எப்போதுமே அதைத்தான் சொல்லிக்கொண்டிருந்தார்.

ஊர்க்காரரிடம் இவரைப் பற்றி ஞாபகமாக விசாரித்தேன். அவர் அளித்த தகவல்கள் எனக்கு அதிர்ச்சி அளித்தன. அந்த மனிதர் உண்மையில் பக்கத்து ஊரில் ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். பெயர் சுரேசு. அவருடைய அமைதியான பௌத்த சுபாவத்தால் பெண் கிடைக்காமல் கடைசி வரை திருமணமே செய்துகொள்ளாதவர். அவ்வளவு காலமும் எங்கள் ஊர் மக்களிடம் தம்மை அறிமுகப்படுத்திக்கொள்ள முயன்றிருக்கிறார். மக்கள் அதைப் புரிந்துகொள்ளாமல் அவரை விரட்டியும் கடைசி வரை முயற்சியைக் கைவிடவில்லை.

சமீபத்தில் பொது இடத்தில் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு விழுந்திருக்கிறார். அக்கம்பக்கத்தினர் தெருவோர மருத்துவர் ஒருவரை அழைத்துவந்திருக்கிறார்கள். மருத்துவர் அவரது நாடியைப் பிடித்துப் பார்த்திருக்கிறார். மருத்துவர் மடியிலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டது. அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தை, சுரேசு.

அந்த ஆண்டு இறந்துபோன ஆயிரக்கணக்கான சுரேசுகளில் ஒருவராகிப்போனார் அந்த ஆத்மா. தம் வீட்டையும் நிலபுலன்களையும் அனாதை ஆசிரமங்களுக்கும் எங்கள் ஊராட்சிக்கும் எழுதிவைத்துவிட்டுப் போயிருக்கிறார். இன்றும் அவர் எங்கள் ஊரில் பேசப்படும் கதைகளில் ஒரு மர்ம மனிதராக உலவுகிறார்.

ஊராட்சிக்கு நன்கொடை அளித்ததால் சுரேசுவின் உருவப்படத்தை அலுவலகத்தில் மாட்டலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால் அவருடைய படம் எங்கும் கிடைக்காததால் இப்போதைக்கு ஒரு பலகையில் சுரேசு என்று எழுதி பிரேம் போட்டு காந்தி, நேரு, அண்ணா படங்களோடு மாட்டிவைத்திருக்கிறார்கள். இருந்தாலும் தாய்மார்கள் குழந்தைகளுக்குப் பயமுறுத்திச் சோறூட்ட அவர் பெயரைப் பயன்படுத்துகிறார்கள். கடைகளில் பேனா வாங்குபவர்கள் அதைச் சோதிக்க அவர் பெயரைத்தான் கிறுக்கிப் பார்க்கிறார்கள். சிலர் அவரை ஒரு யோகி என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். எனக்கென்னவோ அவர் உலகம் கைவிட்ட வெள்ளந்தி மனிதரான சுரேசுவை மீறி யாரும் இல்லை என்று தோன்றுகிறது.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar