முன்னுரை

in கட்டுரை

(‘பூனைக் கன்றுகள் அழகல்ல’ மின்னூலுக்கான முன்னுரை)

ஆனா ஆவன்னா எழுதக் கற்றுக்கொண்டதையும் சேர்த்தால் நான் எழுத வந்து 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. பள்ளிப் பருவத்தில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல் உள்பட பல்வேறு துறைகள் சார்ந்து நான் எழுதிய ஆயிரக்கணக்கான படைப்புகள் நல்ல மதிப்பெண் தரப்பட்டு ஆசிரியர்களால் புறக்கணிக்கப்பட்டன. பல ஏமாற்றங்களைக் கடந்து கல்லூரிப் பருவத்தை எட்டிய பின்பும் அந்த நிலைமை தொடர்ந்தது.

பள்ளி நாட்களில் கிட்டத்தட்ட 200 கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்றிருக்கிறேன். ஒருமுறையும் எனக்குப் பரிசு விழுந்ததில்லை. விருதுக் குழுக்களின் பாராமுகத்திற்கு அதுதான் முன்னோடி என்று சொல்ல வேண்டும். வயது மாற மாற எனது எழுத்துநடையும் மாறியதே தவிர உள்ளடக்கம் மாறவில்லை. எனவே கட்டுரைப் போட்டிக்கு எழுதிய கட்டுரைகளை நான் பத்திரப்படுத்திவைத்திருந்தால் இன்று மேலும் பல புத்தகங்களுக்குச் சொந்தக்காரனாகியிருப்பேன்.

எண்பதுகளில் நடுவில் நான் படித்த கல்லூரியின் ஆண்டுமலரில் எனது கட்டுரை ஒன்று வெளியானது. ‘புறநானூறில் சாலைப் பாதுகாப்பு’ என்ற தலைப்பு கொண்ட அதுதான் எனது முதல் அச்சிட்ட படைப்பு. உண்மையில் எனக்குப் புறநானூறும் தெரியாது, பத்திரமாகப் பார்த்துப் போகவும் தெரியாது. இருப்பினும் கல்லூரி ஆண்டுமலருக்கு அது போதுமாக இருந்தது. அந்தக் கட்டுரை ஆசிரியர்களின் கவனத்தை என் பக்கம் திருப்பியது. தேர்ந்த தமிழாசிரியர்கள்கூட எழுத்துரு அளவு போன்ற விஷயங்களில் என்னிடம் கருத்துக் கேட்க ஆரம்பித்தார்கள். ஆனால் மாணவிகள் என்னைத் தவிர்க்கத் தொடங்கினார்கள். இன்று வரை பகல்நிழலாய்த் தொடரும் பெண்களின் புறக்கணிப்புக்கு அதுதான் பிள்ளையார் சுழி என்பேன். அதற்கு முன்பு ஆசிரியைகளாவது என்னிடம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அதே எண்பதுகளின் நடுவில் மேகமூட்டமான ஒரு மாலை வேளையில் கணையாழி, தீபம், திசைகள், யுனெஸ்கோ கூரியர், சோவியத் நாடு, பொறியாளர் குரல் ஆகிய பத்திரிகைகள் எனக்கு அறிமுகமாயின. இலக்கியம், தீவிர சினிமா போன்ற விசயங்கள் என்னைக் கவர்ந்தன. இதுதான் எனக்கான வாழ்க்கை என்ற கண்கள் திறக்கப்பட்டது போல் உணர்ந்தேன். தமிழில் ஆடல்-பாடல்களுடன் கூடிய மாற்று சினிமா வலுப்பெற்றுக்கொண்டிருந்த காலமது. சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தில் உதவி நூலகனாகப் பணிபுரிந்துகொண்டு இந்தப் படங்களின் மாலைக் காட்சிகளுக்குச் சென்றது, பாரகன் திரையரங்கில் ‘லாரி டிரைவர் ராஜாக்கண்ணு’ பார்த்துவிட்டுத் ‘தீபம்’ இதழில் அதன் விமர்சனத்தைப் படித்து வரிக்கு வரி எனது முதல் சினிமா விமர்சனத்தை எழுதியது எல்லாம் இன்றுகூட மறக்காமல் நினைவிருக்கிறது.

நூலகத்தில் வேலை பார்த்தபோதுதான் என் மனைவியைச் சந்தித்தேன். அவர் பிரசிடென்சி கல்லூரியில் வரலாறு படித்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்குத் திருமணம் ஆகியிருக்கவில்லை. அவர் என்னைப் பார்ப்பதற்காகவே நான் வரலாறு தொடர்பான புத்தகங்களை அவரது கல்லூரி வகுப்பறைப் பக்கம் எடுத்துச்செல்வேன். அவரை ஈர்க்கக் கவிதை எழுதத் தொடங்கினேன். ஆழமாகவும் இல்லாமல் மசாலாவாகவும் இல்லாமல் அன்று நான் தேர்ந்தெடுத்த கவிதை நடை இன்றைய தேதி வரை எனக்குச் செருப்பாக உழைத்துக்கொண்டிருக்கிறது. சுமார் நூறு கவிதைகளை அவருக்குக் காட்டிய பின்பும் அவர் அடிக்கடி விடுப்பில் போகத் தொடங்கிய பின்பும் அவருக்குக் கவிதையில் ஆர்வமில்லை என்று புரியவந்தது. ஆனால் அக்கவிதைகளின் பின்னால் இருந்த உழைப்பு எனக்குக் காதலைச் சம்பாதித்துக் கொடுத்தது, சில ஆண்டுகளுக்குப் பின்பு திருமணத்தில் கொண்டுபோய் நிறுத்தியது.

திருமணம் ஆன சில மாதங்களில் எனக்கு இருத்தலியத்தில் ஆழ்ந்த வெறி ஏற்பட்டது. அரசு நூலகங்கள், வெளிநாட்டுக் கலாச்சார மையங்கள், உலக சினிமா திரையிடல்கள் போன்றவற்றில் கணிசமாக நேரம் செலவிட்டு அறிவுஜீவி நண்பர்களுடனான உரையாடல்களில் உதிர்ப்பதற்கான தகவல் துளிகளைத் திரட்டிக்கொண்டேன். விளைவாக, நான் எழுதுவதும் அதிகரித்தது. இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்க்கைச் சூழ்நிலைகளே என்னை எழுத்தின் புதிய திசைகளை நோக்கித் தள்ளியிருக்கின்றன. அதனால்தான் என் எழுத்து ஒரு நன்றிக்கடனாகவாவது வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது.

2000இல் இணையம் அறிமுகமானதும் எனக்குள் இருந்த எழுத்தாளனுக்கு மொத்தமாக முழிப்புத் தட்டியது. படித்ததையெல்லாம் எழுத ஆரம்பித்தேன். அந்த ஆண்டில் எனது முதல் புத்தகமான ‘ரயில்வே வேலைவாய்ப்புகள்’ வெளியானது. பின்னர் வெகுஜன வார இதழ்கள் இடைநிலை எழுத்தாளர்களுக்கு இடமளிக்கத் தொடங்கியதும் நான் சகட்டுமேனிக்குப் பிரசுரமாகத் தொடங்கினேன். நான் படித்த கல்லூரியின் நூலகத்தில் என் புத்தகங்கள் தடை செய்யப்பட்டிருந்தாலும் அந்தக் கல்லூரி மாணவர்களின் பாடத்திட்டத்தில் என் படைப்புகள் இருக்கின்றன.

2005இல் தனியார் நிறுவன குமாஸ்தா வேலையைக் கைவிட்டு முழுநேர எழுத்தாளனாக மாறினேன். இதற்கிடையில் என் பெயர் எல்லோருக்கும் தெரிந்திருந்தது. சிலிண்டர், கூரியர் அல்லாத காரணங்களுக்காக மக்கள் என்னைப் பார்க்க வந்தார்கள். கூட்டங்களில் பேசக் கூப்பிட்டார்கள். கூட்டங்களில் எழுதக் கூப்பிட்டார்கள். கூட்டங்களில் உட்காரக் கூப்பிட்டார்கள். திரைப்பட வசனகர்த்தா வாய்ப்புகள் தேடி வந்தன. ஏழெட்டுப் படங்களுக்கு எழுதினேன். ஒரு விற்காத புத்தகத்தை மட்டும் எழுதியிருந்த நான், இப்போது 600க்கும் மேற்பட்ட விற்காத புத்தகங்களின் ஆசிரியன். இது என்னுடைய அறுநூற்று சொச்சமாவது முன்னுரை.

எனது நாற்பதாண்டுகால எழுத்தனுபவத்தில் நான் பார்க்காத புறக்கணிப்பு இல்லை. பெண்கள் முதல் வாசகர்கள் வரை எல்லா நிராகரிப்பையும் பார்த்தாயிற்று. நோபல், சாகித்திய அகாடமி போன்ற பெரிய விருது அமைப்புகளைப் பற்றி வேண்டிய அளவு எழுதியாயிற்று. இன்னும் எழுதலாம் (எனக்கு அங்கீகாரம் தராததில் இவர்களுக்கு என்ன கிடைக்கிறது என்று புரியவில்லை). இத்தனை அதிருப்திகளையும் மீறி நான் ஏன் தொடர்ந்து எழுதுகிறேன் தெரியுமா? இல்லையென்றால் வீட்டு வேலைகள் செய்ய வேண்டியிருக்கும்.

Tags: , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar