பிறக்கட்டும் புது யுகம்!!!

in கட்டுரை

நல்ல காலம் வரப்போகிறது! சமீபகாலமாகத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புச் சுதந்திரம் சாதி, மத வெறியர்களால் முடக்கப்பட்டுவருவது தமிழில் அறிவியல் புனைவின் தோற்றத்திற்கு வித்திடும் என எதிர்பார்க்கிறேன்.

சமூகம் நாலுகால் பாய்ச்சலில் கற்காலத்தைப் பின்னோக்கிப் பாய்ந்து சென்றுகொண்டிருக்கையில் அவர்களுக்குக் குகை ஓவியங்களையும் கழிப்பறைக் கிறுக்கல்களையும் அலகு குத்தலையும் பூஜைகளையும் ஜெயந்திகளையும் விட்டுவிட்டு நாம் எதிர்காலத்தை நோக்கி நிமிர்ந்த நெஞ்சுடன் நடை போடலாம். எழுத்தாளர்கள் தாங்கள் பார்ப்பதையும் அறிவதையும் எழுதுவதை நிறுத்திக்கொண்டு புதிய மேய்ச்சல் நிலங்களில் சஞ்சரிக்கத் தொடங்க வேண்டும்.

அதற்காக நம் பார்வைகளை, நம் கதைகளை, நம் உணர்வுகளை நாம் கைகழுவத் தேவையில்லை. நம் கதைகள் வேற்றுக்கிரகங்களில் வேற்றுக்கிரக வாசிகளுக்கு நடப்பதாக எழுதுவோம். கூடுதல் பாதுகாப்புக்கு அவை எங்கோ எதிர்காலத்தில், எ.கா., 56ஆம் நூற்றாண்டில் நடப்பதாக எழுதலாம். மேலதிக கூடுதல் பாதுகாப்பு வேண்டும் என்றால், ஒவ்வொரு சிறுகதையின்/நாவலின் தொடக்கத்திலும் பூமி மனித இனத்தோடு சேர்ந்து அடியோடு அழிந்துவிடுவதாக ஒரு அத்தியாயம் வைத்துக்கொள்ளுங்கள். ‘இக்கதையில் வரும் சம்பவங்கள், கிரகங்கள், உயிரினங்கள், சமூகங்கள், கோவில் திருவிழாக்கள், உறவுகள், மதிப்பீடுகள் எல்லாம் கற்பனையே’ என்றும் ஓர் எச்சரிக்கையை சேர்த்துக்கொள்ளலாம்.

பின்குறிப்பு என்ற முறையில், அறிவியல் புனைவு என்றால் ஆர்தர் சி. கிளார்க், ஐசாக் அசிமோவ், ஃபிலிப் கே. டிக், ரே பிராட்பரி, வில்லியம் கிப்சன், குர்ட் வானெகட் ஜூனியர், ஹெச்.ஜி. வெல்ஸ், ஆல்டஸ் ஹக்ஸ்லி போன்றோரின் அலங்காரமற்ற, ஜனரஞ்சகமல்லாத ரகத்தைச் சொல்கிறேன். அறிவியல் புனைவை இலக்கியமாகக் கொள்வதா கூடாதா என்ற குழப்பம் மேற்குலகில் நீண்டகாலமாக இருந்துவருகிறது. அந்தக் குழப்பம் இங்கும் ஏற்படும் வகையில் நாமும் எழுதுவோம். நாம் தொடர்ந்து எழுத வேண்டும் என்றால் இதுதான் வழி. இனி நாம் தொடங்கட்டும்.

Tags: ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar