விபத்துகள்

in கவிதை

எனக்கு விபத்துகளைப் பிடிக்காது
ஒரு பொது இடத்தில் நின்று
விபத்துகளை நான் ஊக்குவிப்பதை
நீங்கள் ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்

பார்த்தவுடனே பார்வையாளனாக்கி
விடுகின்றன விபத்துகள் என்னை
நான் எங்கே எதற்காகச் சென்றுகொண்டிருந்தாலும்
பார்வையைப் பிடித்துத் திருப்பித்
தம்மைப் பார்க்கவைக்கின்றன விபத்துகள்

விபத்துகளின் ரசிகன் அல்ல நான்.
என் போன்ற சாதாரணர்கள்
அற்பமான அன்றாடப் பணிகளைச் சுமந்து
தேமே என்று செல்லும் சாலைகளில்
கொட்டிய முழு டம்ளர் பாலாய் ரத்தத்தை
ஓடவைத்து மிரட்டுகின்றன விபத்துகள்

சொந்தச் சிறுநீரில் புரளும் குழந்தை போல்
தம் ரத்தத்தில் உயிரோடோ உயிரற்றோ
உறங்கும் மனிதர்களைப் பார்க்கிறேன்
கருத்துகள் ஏதும் இல்லாதது போன்ற
அவர்களது உணர்ச்சியற்ற முகத்தைப் பார்க்கிறேன்
மூன்று பேர் உதவ, 20 பேர் வேடிக்கை பார்க்க
எந்தச் செய்தி வீடு போய்ச் சேரும்
என்ற ஊகத்தைத் தவிர்க்கிறேன்
எனக்கு அது தேவையில்லை

சரிந்து கிடக்கும் டூவீலர்களைப் பார்க்கிறேன்
(எப்போதுமே டூவீலர்கள்தாம்
டூவிலர் விபத்துகளின் கடவுள்
தனி ஓட்டுநர்களையே குறிவைப்பார் போலும்)
சில சமயம் அங்கு ரத்தம் மட்டுமே எஞ்சியிருக்கும்
அது தூசு படிந்து தேங்கிய சாக்கடை நீர் போல் கிடக்கும்
இனி அதைப் பயன்படுத்த முடியாது
அது தொட்டி உடைந்த தண்ணீர் போல்
கொள்கலனிலிருந்து வெளியே இறைந்துவிட்டது

சில சமயங்களில் கண்ணாடித் துண்டுகள் மட்டும்
சிதறியிருக்கப் பார்க்கிறேன்
அவை எந்தச் செய்தியும் சொல்வதில்லை
அவற்றைப் பெருக்கித் தள்ள ஆளில்லை
மறுநாள் துப்புரவுப் பணியாளர்கள் வருவார்கள்
அது வரை எல்லோரும் அந்த இடத்தை
கவனமாகத் தவிர்த்துச் செல்வார்கள்
தத்தம் வழியில்

ஓடும் லட்சம் வாகனங்களில்
விபத்துகள் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை
என் எதிரிகள் பாதுகாப்பாக ஓட்டுகிறார்கள்
விபத்துகள் சொற்பமாக இருந்தாலும்
எப்போதாவதொன்று கண்ணில் படாதிருப்பதில்லை
அடுத்த விபத்து வரை மனம் விட்டுப் போவதில்லை

ஒரு விபத்தைப் பார்த்தால் அது பற்றி
யாரிடமும் பகிர்ந்துகொள்ள மாட்டேன்
யார் மேல் தவறு, எங்கே மோதினான்
எங்கே அடிபட்டது, பிழைத்தானா,
ரத்தம் நிறைய இருந்ததா என்று கேட்டுத்
தாம் பார்த்த விபத்துகளில்
யாருக்கு எவ்வளவு ரத்தம் போனது,
தலை எப்படி நசுங்கியது என்று
தீவிரமாக விவரிக்கும் உச்சுக்கொட்டிகளிடம்
பேச்சுக் கொடுக்க விருப்பமில்லை.

ஒருநாள் நானே விபத்தில் சிக்கலாம்
கை, கால், உயிர் இழக்கலாம்
என் ரத்தத்தால் ஓர் அழுக்குச்
சாலையின் முகம் சிவக்கலாம்
இதை எழுதிக்கொண்டிருக்கும் மூளை
தெரு கிரிக்கெட்டின் வழிதவறிய பந்து போல்
சாலையில் உருண்டு ஓடலாம்
அது வரை அவற்றைப் பார்ப்பதையாவது தவிர்ப்பேன்

நான் அவற்றை எதற்கும் உருவகமாக்கவில்லை
மிகவும் நிஜமான விசயங்கள் அவை
அதனால்தான் விபத்துகள் என்னைக் கவர்வதில்லை

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar