தேநீர் எறும்பு

in கவிதை

மேகங்கள் மீது படுத்துறங்குவது போல்
தேநீரின் நுரைக்குமிழ் மண்டலத்தில்
கிடக்கிறது ஓர் எறும்பு
அதைச் சுற்றிலும் பறக்கிறது ஆவி
என்றாலும் பறப்பது
எறும்பின் ஆவி அல்ல, தேநீரின் ஆவி
கோப்பை வாய்நோக்கிச் சாய்கையில்
எறும்பை வாய்க்குள் தள்ளிச்செல்லப்
பார்க்கிறது நுரைக்குமிழ்
நுரையை ஊதித் தள்ளிவிட்டுத்
தேநீரை உறிஞ்சுகிறது வாய்
எறும்புக்கு விமோசனம் பெற்றுத் தர
மீண்டும் மீண்டும் முயல்கின்றன நுரைக்குமிழ்கள்
ஒரு பலமான ஊதலில்
கண்ணாடிச் சுவர் மேல்
ஏறி இறங்குகிறது நுரை
சுவரில் ஒட்டிக்கொள்கிறது எறும்பு
தேநீரை நுரையுடன் அருந்தி
முடிக்கிறது வாய்
சுவரில் ஒட்டவைத்த
ரப்பர் பல்லியாய்க்
கண்ணாடிச் சுவரில்
சமைந்து நிற்கிறது எறும்பு.

Tags:

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar