அநாமதேயம் மற்றும் விநாமதேயம் மற்றும் தலைப்பில் உம்மைத் தொகையைத் தவிர்க்கும் உத்தி

in கட்டுரை

புனைபெயரில் எழுதுவது தொன்று தொட்டு இருந்துவருகிறது. மௌனி, புதுமைப்பித்தன், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, ஜார்ஜ் எலியட், உடி ஆலன், பிரான்ட்டே சகோதரிகள், லூயிஸ் கேரல், பாப்லோ நெரூடா, சி. மணி, கரிச்சான்குஞ்சு, பிரமிள் (ஆறேழு பெயர்கள் இருக்கும்), ஜெயகாந்தன், சாரு நிவேதிதா, ஞாநி, (ஏன், சரோஜாதேவிகூட) எல்லாம் புனைபெயர்களே (மாயூரம் வேதநாயகம் பிள்ளை தவிர).

மேடைப் பெயர்கள் (artist name) என்று வந்தால் பாப் டைலன், டேவிட் போவி, இளையராஜா, பென் கிங்ஸ்ஸி, ஹௌடினி, பாரதிராஜா, லூயி சி.கே., ராப் பாடகர்களில் 50 Cents, Ice Cube, Snoop Dogg என்று மனிதப் பெயர்களைத் தவிர்ப்பவர்கள் உண்டு.

கணினி/இணைய யுகத்தில் pseudonymity என்ற இந்த விநாமதேயத்தின் (நினைவிருக்கட்டும், இந்த வார்த்தையை நான்தான் உருவாக்கினேன் (நானறிந்த வரை)) பரிணாம வளர்ச்சி போல் இணைய அநாமதேயம் (anonymity) வந்தது. நான் படைப்பாளிகளின் அநாமதேயத்தைப் பற்றி மட்டும்தான் பேசுகிறேன். 1996இல் அநேகமாகத் தமிழ்ச் சூழலில் படைப்பு சாராத அநாமதேயம் (மடற்குழுக்களில், வலை மன்றங்களில் trolling செய்வதற்காக உருவானது) பரவிக்கொண்டிருந்தபோது Anonymous என்பவரின் Primary Colors என்ற புத்தகம் வெளியாகிப் பரபரப்பூட்டியது. சில மாதங்களிலேயே அந்த அனானிமஸ் ஒரு பத்திரிகையாளர் என்பது துப்பறிந்து அறிவிக்கப்பட்டது. எனக்குத் தெரிந்து முதல் ‘அனானி’ (தூ!) புத்தகம் இதுதான். மலிவுத் தாளில் பிரசுரிக்கப்பட்ட வன்கில்மா புத்தகங்களை எழுதிய Anonymousகளை அநாமதேய எழுத்தாளர்களாகக் கருத முடியாது. இணைய ஆளுமை (online persona) என ஒன்று இருக்கிறது. இந்தக் கருத்தாக்கம் புரியாத புதியவர்கள் எப்பாடுபட்டாவது அதன் பொருளைக் கண்டுபிடித்துப் புரிந்துகொண்டு தங்களை இற்றைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்தப் பீடிகை எதற்கென்றால், இந்தப் போக்குகள், மாற்றங்கள், நிகழ்வுகள் எவற்றையும் பற்றி இன்றைய தமிழ்ச் சூழலில், குறிப்பாகத் தமிழிணையத்தில், விழிப்புணர்வு இருப்பதாக வலுவாகவே தெரியவில்லை. சாதாரண இணையப் பயனர்கள் (சிலர் குறைந்த IQவினர்), பின்நவீனத்துவ எழுத்தின் புரட்சிகரப் பாடைதூக்கியாகத் தம்மைப் பற்றிப் பெருமிதம் பரப்பிக்கொள்ளும் எழுத்தாளர்கள், கிசுகிசு நாட்டமுள்ள இலக்கியத் தோரணைப் பத்திரிகையாளர்கள், வெறுப்பின் ஒட்டடை படிந்த சில பழைய மனங்கள், தலைப்பில் ‘விநாமதேயம்’ என்ற வார்த்தையைப் படித்ததும் “மொக்கை”, “இலக்கியவியாதி” என அறியாமையின் சொல்லார்ந்த அறிகுறிகளை வெளிப்படுத்திவிட்டுக் கழன்றுகொண்டவர்கள் மற்றும் இன்னும் பல வகையறாக்களுக்கு அநாமதேயத்திற்கும் படைப்புலகுக்கும் உள்ள புதிய உறவு புரியவில்லை. அவர்களைப் பொறுத்த வரை அநாமதேயம் என்பது அவர்கள் செய்வது போல் முகம் காட்டாமல் தாக்குவதற்கான ஒரு பயனுள்ள கருவி.

ஒரு எழுத்தாளன் எதற்காக அநாமதேயமாக எழுத வேண்டும்? அது அவனுடைய உரிமை என்பது போக அவனுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். உலகில் நியாயமான உரிமைகளுக்குப் பஞ்சமேது? ஒரு பத்திரிகைப் பேட்டியில் நான் அநாமதேயமாக எழுதுவதற்கு, என் அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ளாமல் இருப்பதற்குக் காரணம் என்ன என்று கேட்டார்கள். நான் அளித்த பதில்:

என் இயல்பு பாதி காரணம். இன்னொரு பாதி, சில அடையாளங்களையும் முத்திரை குத்தல்களையும் தவிர்க்க. எந்தக் குறுகிய அடையாளமும் இல்லாதிருப்பதன் சாயலாவது அநாமதேயத்தில் கொஞ்சம் கிடைக்கிறது. இந்த அநாமதேயம் பேயோன் என்ற கற்பனை அடையாளத்திற்கும் பயன்படுகிறது. :-) இணையத்தில் நான் பார்க்கும் பலரை இணையத்திற்கு வெளியே தவிர்க்கவே விரும்புவேன்.

இவை ஒழுங்கான, களங்கமற்ற காரணங்கள் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன். அதே சமயத்தில் அநாமதேயத்தைத் தழுவுவது ‘சொந்த வெளி’ (personal space) சம்பந்தப்பட்டதும்கூட. இந்த மாதிரி ஆள் தன்னிகரற்ற கூச்ச சுபாவியாகவோ இருக்கலாம். தன் அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ளாமல் இருப்பதாலேயே ஒருவன் சி.ஐ.ஏ. முகவன் ஆகிவிட மாட்டான். ஆனால் அநாமதேய எழுத்து என்பது போக்கிரித்தனத்தோடும் trollingகோடும் தொடர்புள்ளது என்று பொச்சரிப்பு மற்றும் ‘எனக்குக் கிடைக்க வேண்டிய தக்குனூண்டு கவனம் இவனுக்குக் கிடைக்கிறதே’ மனப்பான்மை கருதுகிறதோ என்னவோ. எடுத்துக்காட்டுகளைக் கீழே எதிர்பார்க்கலாம்.

சற்று முன்பு விவரிக்கப்பட்ட எழுத்தாளர் ஒருவர் ஒரு பத்திரிகைப் பேட்டியில் என்னைப் பற்றிக் கருத்துக் கூறியபோது ‘இவன் யார் என்று எனக்குத் தெரியும். இந்த மாதிரி கழிப்பறையில் கிறுக்குபவர்களைப் போன்றவர்கள்’ என்கிற ரீதியில் பேசினார்.

இன்னொரு எடுத்துக்காட்டில், ஒரு நாள்பட்ட வலைப்பதிவருக்குத் திடீரென்று ‘எனது நிஜ அடையாளம்’ குறித்துத் தகவல் கிடைத்திருக்கிறது. அவரது வலைப்பதிவில் சில அங்கத இடுகைகளை நான் ரசித்துச் சுட்டி விநியோகம் செய்ததெல்லாம் அவருக்குத் தெரியாது. ஒருமுறை நான் ஒரு ட்வீட் எழுதப்போக, அதன் நகைச்சுவை அவரது களிமண்டையில் கொஞ்சமும் ஏறாமல் ‘உங்கள் குடும்பமே இப்படித்தானா?’ என்று வினவினார். நான் அவரை பத்திரமாகக் கொசு மட்டையால் பிளாக் பகுதிக்குள் செலுத்தினேன். இந்த நபர் கிட்டத்தட்ட ஓர் ஆண்டாக என்னை ட்விட்டரில் பின்தொடர்ந்துகொண்டிருந்தார். நான் என்ன மாதிரி எழுதுகிறேன், என்ன விஷயங்களை எழுதுகிறேன், ‘என் அரசியல்’ என்ன, என் புனைவு அடையாளத்தையும் மீறி என் எழுத்தில் வெளிப்படும் தீவிர சாதி-மத வெறுப்பு நிலைப்பாடு எல்லாவற்றையும் இந்நபர் படித்திருக்க வேண்டும். நான் மெய்யுலகில் எப்படிப்பட்டவன், என்னோடு நேர்ப் பழக்கம் எதுவும் கிடையாது. குறைந்தபட்சம் இணையச் சண்டைகூட இல்லை. ஒரு பின்னூட்டம், மறுமொழி அளித்ததில்லை. ஆனால் trollகளுக்கு அதில் அக்கறை இல்லை. குருட்டு வன்மத்தைப் பொழிந்துவிட்டுப் போனார்.

பிறகு எழுத்துலக சாதனையாளர்கள் ஒருவர் அடையாளத்தை மறைத்து எழுதுபவர்களைப் பற்றிய முகநூலில் (இவர்களை மதித்து ‘ஃபேஸ்புக்’ என்று சொல்வதெல்லாம் அதிகம்) இந்தப் பொருள் வருமாறு எழுதியிருக்கிறார்: ‘இவன் தன்னை யாருக்குமே தெரியாது என்ற தைரியத்தில் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறான். ஆனால் இவனை எல்லோருக்குமே தெரியும், இத்யாதி.’ அதற்கு இன்னொரு சாதனையாளரான வயதுப் பெரியவர் ‘இவர் இன்னாருடைய இப்பேர்ப்பட்ட மகன் என்று நான் அற்பப் பெருமையோடு காலரைத் தூக்கிவிட்டுக்கொள்வதில் சந்தேகமே இல்லை’ என்பது போல் பதிலளித்திருக்கிறார். இப்பெரியவருக்கும் என் எழுத்தோ, என் தனிப்பட்ட குணாதிசயங்களோ வெளிச்சமில்லை. நான் இன்னாருடைய மகன் என்ற அனுமானமே தமது வயதும் அனுபவமும் அவருக்கு நியாயமாக அளித்திருக்க வேண்டிய கண்ணியத்தைக் காற்றில் பறக்க விடப் போதுமானதாக இருக்கிறது. இந்த மலிவான வன்மமும் ஆத்திரத்தின் ஒரு கிளை என்று பார்க்கிறபோது, ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு. இதற்காகவா உங்கள் வீட்டில் உங்களைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்கள்?

இன்னொரு கும்பல் தாக்குதல் முயற்சி பற்றியும் சொல்லலாம். ஆனால் அதில் ஒரு மயிர்கூடப் பிடுங்கப்படவில்லா என்பதாலும் சந்தர்ப்ப சூழ்நிலையாலும் தவிர்க்கிறேன். இவர்கள் எல்லோரும் அநாமதேயமாக இருப்பதன் அவசியத்தைத் தம்மையும் அறியாமல் புரியவைக்கிறார்கள்.

அநாமதேயமாக எழுதுவது பற்றி எழுத்துலகில் சிலருக்கு உள்ள பரிதாபகரமான புரிதல் இவ்வளவுதான். அடிப்படையில் trollகளான இவர்களுக்கு ஒருவன் என்ன எழுதுகிறான் என்பது முக்கியமல்ல, அவன் யார் என்பதும் அவனுடைய அநாமதேயமும் அதெப்படி அவன் யாரென்று தெரியாமல் என் பார்வை பட எழுதலாம் என்கிற கரிசனங்களும்தான் முக்கியம். இதில் தாங்கள் உத்தமர்கள் என்று நம்பிக்கொள்ளும் இலக்கியாத்மாக்களுக்கும் தமிழிணையத்தில் பொறுக்கிகளாகத் திரிபவர்களுக்கும் இடையே அணுகுமுறை வேறுபாடு இல்லை.

மேற்கில் Perl ஸ்க்ரிப்ட்டிங் மொழியில் கவிதை எழுதுகிறார்கள். செகண்ட் லைஃப் போன்ற தளங்களைப் பயன்படுத்திப் புதிய எழுத்துலகங்களைப் படைக்கிறார்கள். புதிய ஆளுமைகளை உருவாக்கிக்கொள்கிறார்கள். இங்கே இணைய-எழுத்துக் கலாச்சாரத்திற்கான பாலபாடமே இன்னும் முடியவில்லை.

– முற்றும் –

பின்னிணைப்புகள்: அநாமதேயமாக எழுதுவது என்ன மாதிரி பின்விளைவுகளை ஏற்படுத்தும்? சாதா எழுத்துக்கும் அநாமதேய எழுத்துக்கும் வித்தியாசம் இருக்கிறதா? சுட்டிகள்:

ஓர் உரையாடல்

Category:Pseudonymous writers

உபரி: ‘பதாகை’ இணைய இதழ் உரையாடல்

குறிப்பு: இவ்விடுகை மனிதர்களைப் பற்றியதல்ல, மனப்பான்மைகளைப் பற்றியது. எனக்கு மனிதர்கள் ரொம்ப முக்கியம்.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar