கல்லா கட்டுநர்

in துண்டிலக்கியம்

டீக்கடையில் கல்லாவுக்குப் பின்னால் அமர்ந்திருந்த நபரிடம் விளையாட்டாகக் கேட்டேன்: “இப்படி ஜாலியா சும்மா உக்காந்திருக்கீங்களே, இந்த வெயிலக் கொஞ்சம் குறைக்கலாம்ல?”

இதை ஏன் ‘விளையாட்டாக’ என்று சொல்கிறேன் என்றால், வெயிலைக் குறைப்பது நம் வேலையன்று என்பது மட்டுமல்ல, நம்மால் அது முடியாத ஒன்றும்கூட. இந்த உண்மையே கிடையாது என்பது போல, வானிலை வல்லுநர்களாலும் சுற்றுச்சூழல்வாதிகளாலும் அமைச்சர்களாலும் துரித எதிர்வினைக் கவிஞர்களாலுமே கட்டுப்படுத்த முடியாத வெயிலை ஒரு சாதாரண டீக்கடைக்காரரால் கட்டுப்படுத்த முடியும் என்பது போல சித்தரிப்பது மட்டுமின்றி, அவ்வாறு கட்டுப்படுத்தாமைக்காக அவரைக் கண்டிக்கிறேனே, அதுதான் இதில் நகைச்சுவை. முரண்நகை என்றும் சொல்லலாம்.

கல்லாக்காரர் என்ன சொன்னார் என்று சொல்லவில்லையே. அவர் எதுவும் சொல்லவில்லை. ஏன், உதடுகள்கூடத் துடிக்கவில்லை. என்னை வெறுப்புமிழும் கண்களால் (அவருடையவைதாம் அவை) பார்த்தார். ஏனென்றால் என்னுடைய நகைச்சுவை அவருக்குப் புரிய மறுத்துவிட்டது. ஆனால் அவர் கடையில் எப்போதும் போல் அமோகமாக போணி ஆகாமல் இல்லை.

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar