பணம் அன்பை முறிக்கும்

in கட்டுரை

நேற்றைய மழை விட்டுச்சென்ற இனிமையைத் தெருக்களில் மெல்லிய புன்னகையுடன் நிதானமாக நடந்து அனுபவித்துவிட்டு வீடு திரும்பி செருப்புகளைக் கழற்றியபடியே நான் பார்த்த காட்சி: என் மனைவியைச் சுவரோடு சாய்த்துத் தாலியுடன் கூடிய அவரது கழுத்தை நெரித்துக்கொண்டிருந்தான் என் மகன். அவன் என்னைவிட அம்மாவிடம் அதிகம் உரிமை எடுத்துக்கொள்வான். என்னிடம் ஏனோ ஒரு கூச்சம், பயம், தூரம். அம்மாக்கள் ‘அப்பாவிடம் சொல்லிவிடுவேன்’ என்று குழந்தைகளை மிரட்டி அப்பாக்களைப் பற்றி ஓர் அச்சத்திற்குரிய பிம்பத்தைக் கட்டியெழுப்புவதுதான் காரணம் என்று நினைக்கிறேன்.

மனைவியின் விழிகள் பிதுங்கிக்கொண்டிருந்தன. மகன் வயது பதினேழு ஆகிவிட்டதல்லவா, அதற்கேற்ற தீனி, ரோடு ரோலர் எடை, பலம். அதைத்தான் என் மனைவியின் கண்களில் பார்த்தேன். ஒரு விதத்தில் பெருமையாக இருந்தது. எவனும் என் மகனைக் கிள்ளுக்கீரையாக நினைத்துக் கிள்ளவோ அடிக்கவோ முடியாது. அப்படிச் செய்தால் இதோ, இந்தம்மாள் மாதிரி அவதிப்பட வேண்டியதுதான்.

ஆனால் என் மனைவி எங்கள் மகனைச் சிறு வயதிலிருந்தே (அவனுடைய) அடித்துத்தான் வளர்த்திருக்கிறார். தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட புண்ணியத்தில் இப்போது அவன் முறை போலும். என் மனைவி சற்றுச் சுதாரித்துத் தம் மண்டையால் என் மகனின் நெற்றியில் ஓங்கி முட்டினார் (“மண்டையிடி” என்ற சொல்லாக்கம் இலங்கைத் தாய்மார்களுடையதோ?). என் மகன் நிலைகுலைந்து இரண்டடி பின்வாங்கினான்.

“என்னா தைரியம்!” என்று உறுமிய என் மனைவி, இரு கைகளால் அவன் சட்டையைப் பிடித்துக் கடாசினார். அவன் முதுகு உள்ரூமின் வாசலுக்கு மேல் இருந்த வால் கிளாக்கின் மேல் அறைந்து ஆள் கீழே விழுந்தான் (வால் கிளாக் என்று ஆங்கிலத்தில் சொன்னால்தான் அது ஒரு நிகழ்வில் அன்பளிப்பாகக் கிடைத்தது என்ற தகவல் உணர்த்தப்படும்). கடிகாரத்தின் கண்ணாடி சில்லுகளாகிக் கீழே விழுந்தன. கடிகாரம் கீழே விழவில்லை, இருந்தாலும் கிடைத்த அடியில் மொத்தக் கடிகாரமும் வெறி பிடித்த பெண்டுலம் போல் ஆடியது. இதே கடிகாரத்துக்குப் பதிலாக ஒரு நாள்கிழிப்புக் காலண்டர் இருந்திருந்தால் முதுகில் நாய்க்கடி போல் ஒரு ஜோடிப் பொத்தல்கள் விழுந்திருக்கும். ஆனால் நாள்கிழிப்புக் காலண்டரைக் கைக்கெட்டாத உயரத்தில் வைப்பது யார்? பிறகு கூடைப்பந்து ஆட்டக்காரர்கள்தான் பயன்படுத்த முடியும்.

மகன் மெல்ல எழுந்து தனது சட்டையின் முதுகில் கிழிசல் விழுந்திருக்கிறதா என்று திரும்பிப் பார்க்கையில் அவனை அடிக்க ஏதாவது கிடைக்குமா என்று மனைவி தேடினார். மல்லிகைப்பூச் செண்டு கிடைக்கவில்லை. கொறிபொருட்கள் வைக்கும் பிளாஸ்டிக் கூடை ஒன்று இருந்தது. அதை அலமாரியிலிருந்து பிடுங்கி அவன் தலை மேல் சரமாரியாக மொத்தினார். அதை அவன் கைகளால் தடுக்கப்போக, எல்லா அடியும் கை மேல் பலனாக விழுந்தது. காலிக் கூடை என்பதால் பொருட்சேதம் எதுவும் இல்லை. அடித்துத் திருப்தியடைந்த பின்பு என் மனைவி கூடையை அவன் தலையில் தொப்பி போல் கவிழ்த்துத் தள்ளி விட்டாள். எங்கள் மகன் கீழே விழுந்தான்.

விழுந்தவன் அப்படியே உறைந்திருந்தான். கூடையைக் கழற்றவோ, ஏன், கழற்றி அம்மா மேல் வீசவோகூட, தோன்றாமல் கூடையின் துவாரங்கள் வழியே அம்மாவைப் பார்த்துக்கொண்டிருந்தான். என் மனைவி ஒரு வேலை ஆயிற்று என்பது போல் “ஸ்ஸ்ஸ்ஸப்பா” என்று புடவைத் தலைப்பால் முக வியர்வையை ஒத்தி எடுத்தபடி சமையலறைக்குச் சென்றார்.

அப்போதுதான் எனக்குத் திடீரென்று உறைத்தது: நான் வலது கால் செருப்பை மட்டும்தான் கழற்றியிருந்தேன். இடது காலுக்குரிய செருப்பு இன்னும் காலைக் கட்டிக்கொண்ட நிலையிலேயே இருந்தது. ஓர் ஒற்றைச் செருப்பு, ஜோடியில்லாமல் தனியாக இருந்ததைப் பார்த்து உள்ளுக்குள் ஒரு வேதனை சுண்டியிழுத்தது. அந்தத் தனிச் செருப்பைத் துணையில்லாமல் தவிக்கும் விதவைகளோடு அல்லது பொதுவாகத் தனிமையில் வாடும் தனிநபர்களோடு எனது ஆழ்மனம் ஒப்பிட்டுப் பார்த்திருக்கக்கூடும். உடனே இடது கால் செருப்பைக் கழற்றி அதன் ஜோடியுடன் சேர்த்துவைத்தேன்.

என் மகன் இயல்புக்குத் திரும்பி வந்து கூடைத் தொப்பியைக் கழற்றி அலமாரியில் வைத்தான். தாயும் மகனும் உரிமையோடு அடித்துக்கொள்கிற அளவுக்கு என்ன சண்டையோ என்று நினைக்கத் தோன்றினாலும் பணம்தான் பிரச்சினையாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். என் சட்டைப்பையில் கையை விட்டால் அதற்குப் பின்பு ஆயுள் வரை கைக்கு பதிலாகக் கொக்கியோடு திரிய வேண்டியிருக்கும் என்பது அவனுக்கும் தெரியும். அதனால் அம்மாதான் அவனுக்கு என் சட்டைப்பை. இம்முறை தர்க்கமில்லாத தொகை ஒன்றைக் கேட்டு மறுப்பு வாங்கியிருப்பான், அது சண்டையில் முடிந்திருக்கும்.

என் மகன் சமையலறையை நோக்கி நடந்தான். நான் ஆசைப்பட்டது போல் கைகலப்பு இன்னும் நிற்கவில்லை போலும். அதற்கு மேல் என்னால் சும்மா இருக்க முடியவில்லை. “டேஏஏஏஏஏஏஏய்” என்றேன் மென்மையாக.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar