ஜூலை 29, 2015 நாட்குறிப்பு

in கட்டுரை

உலகில் எல்லாவற்றுக்கும் – எல்லா ஜீவராசிகளுக்கும், ஏன், அசையும், அசையாப் பொருட்களுக்கும்கூட – இடையில் ஒரு கண்காணாத பிணைப்பு இருப்பதாக உணர்கிறேன். ஒரு கல்லைப் பார்க்கும்போது நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவரின் இன்றியமையாப் பகுதிகள் என்ற எண்ணம் எழுந்து கண்கள் பனிக்கின்றன. இதை விளக்குவதற்கு என்னிடம் ஆன்மீக ரீதியான அல்லது தத்துவார்த்தமான தர்க்கங்கள் எவையும் இல்லை. ஏனென்றால் இந்த ஜூலை மாத 40 டிகிரி வெயில் எல்லாவற்றையும் அனர்த்தமாக்கிவிடுகிறது.

* * *

இந்தப் ‘பிரியம்’ என்ற வார்த்தையில் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. ‘பிரியம்’ அது வெளிப்படுத்தும் உணர்வுக்கு உண்மைமை-யின் தோற்றத்தை அளிக்கிறது. அது மென்மையானது, இனிமையானது, நிரந்தரமானது என்கிறது அதன் சமஸ்கிருதம். ‘பிரியம்’ என ஒருவர் சொல்லும்போது அவரைப் பற்றி ‘ஆஹா என்ன அருமையான மனிதர்’ என்ற மனப்பதிவு ஏற்படுகிறது. ‘பிரியம்’ என்பது பொதுவாக அன்பைக் குறிக்கலாம் (போர்!), அல்லது குறிப்பாகக் காதலைக் குறிக்கலாம். ஆனால் அதன் பலம் சந்தேகத்திற்கு இடமில்லாதது. நான் எழுந்து நின்று உங்களுக்கு சல்யூட் போட வேண்டும் என்றால் என் முன்னே வந்து “பிரியம்” என்று சொல்லுங்கள் போதும்.

* * *

தவிர்க்க முடியாத
பிரியங்களாலானவை
உன் புன்னகைக்கள்.

*

உறைவித்த தேனில்
செதுக்கிய சிறை
உன் பிரியம்.

*

உன்னழகுத்
தோழிகளுக்
கென் பிரியம்
சொல்லிலிடு.

*

பிரியமானவர்கள்
ஆண்களும்
பெண்களும்
குழந்தைகளுமாய்ப்
புன்னகைக்கிறார்கள்
இனிக்கிறார்கள்
முத்தமிடுகிறார்கள்
பிரியாதிருக்கிறார்கள்
நினைவுகளைக்கூட
இது சம்பந்தமாக
ஏதோ செய்கிறார்கள்
இத்தனைத்
துரோகங்களுக்கும்
குரோதங்களுக்கும்
கொலைகளுக்கும்
மத்தியில் தன்பாட்டுக்கு
இருக்கிறதுன் பிரியம்.

*

பிரியத்தைக் கொடு
இல்லையென்றால்
காசைக் கொடு.

*

சமீபகாலமாகக் கடும் மன உளைச்சல். எதுவும் எழுதவில்லை. எண்ணங்களின் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. விசைப்பலகையில் எழுத்துகள் இருக்கின்றன, ஆனால் எதையும் படிக்கிற மாதிரியான வரிசையில் கணினிக்குக் கொண்டுவர முடியவில்லை. பிறகு திடீரென்று வெறி வந்தது போல் தட்டச்சு செய்து ஒரு சிறுகதையை எழுதி முடித்தேன். அது எனக்கு மனப்பாடமாகத் தெரிந்திருந்த ஓர் அசோகமித்திரன் சிறுகதை. சொந்தமாக எழுத முடியவில்லை.

Tags: , ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar