பத்தாவது நாள்

in கட்டுரை

சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட ஓர் உறவுக்கார இளைஞரைத் தெருவில் பார்த்து மடக்கி டீக்கடைக்கு அழைத்துச் சென்றேன்.

“ரெண்டு டீ குடுங்க. அப்புறம் பேச்சிலர் லைஃப் எல்லாம் முடிஞ்சிதா?” என்றேன்.

“ஆமா அங்கிள். புது வீட்டுக்குப் போயாச்சு” எனப் புன்னகைத்தார் உறவினர்.

“இன்னிக்குப் பத்தாவது நாள் இல்ல?”

“யாருக்கு?” உறவினர் திடுக்குற்றார்.

“என்ன, உங்களுக்குத்தான். கல்யாணம் முடிஞ்சுபோய்ப் பத்தாவது நாளும் அதுவுமா டீக்கடைல என்ன பண்ணிட்டிருக்கீங்க? ஹனிமூன் எங்கியும் போலியா?”

“போய்ட்டு வந்தாச்சு அங்கிள்.”

“ஐயையோ, எங்க?”

“கொடைக்கானல் அங்கிள்.”

“அட அங்க எதுக்குப் போறீங்க? ரொம்பக் குளிருமே!”

“ஹனிமூன்-னா ஊட்டி, கொடைக்கானல், கூனூர் மாதிரிதானே போவாங்க…”

“பாபநாசம் போயிருக்கலாமே.”

“பாபநாசம் படமா?”

“இல்லப்பா, அது இன்னும் ரிலீஸ் ஆகல. நான் பாபநாசம் ஊரைச் சொன்னேன்.”

“என்ன அங்கிள், கலாய்க்கிறீங்களா? ஹனிமூனுக்கு எதுக்குப் பாபநாசம் போகணும்?”

“பாபநாசம் பாவங்கள நாசம் பண்ற புண்யஸ்தலம். கல்யாணத்துக்கு முன்னாடி திருமணஞ்சேரி போவாங்கல்ல, அது நடந்தப்புறம் பரிகாரம் மாதிரி பாபநாசம் போகணும். உங்களுக்குக் கல்யாணம் ஆகி இன்னிக்குப் பத்தாவது நாள். உங்களுக்கு இப்ப புரியாது. ஒரு மூணு வருஷம் – இல்ல, ஒரு வாரம் – வெயிட் பண்ணுங்க. நான் ஏன் சொல்றேன்னு புரியும்…”

வரேன் அங்கிள் மாதிரி ஏதோ சொல்லிவிட்டு இளைஞர் போய்விட்டார். கையில் டீ கிளாசுடன் ‘கொடைக்காலன்’ என்று சொல்லிக்கொண்டேன் அர்த்தமில்லாமல்.

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar