அன்பெனும் போர்வை

in கட்டுரை

நம் அன்புக்குரிய எதிர்ப்பாலினரிடம் பாசத்தை வெளிப்படுத்துவது எப்படி? புத்தகங்களில், திரைப்படங்களில் ‘நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று எளிதாகச் சொல்லிவிடுகிறார்கள். எனக்கு அது நாடகத்தனமான கெஞ்சலாகப் படுகிறது. ‘கொஞ்சம் பார்த்துப் போட்டுக்கொடு’ என்று கேட்பார்களே, அந்த மாதிரி. நேசிக்கிறாய் என்றால் நேசித்துவிட்டுப் போ. அதை ஏன் பெரிய அறிவிப்பு மாதிரி சொல்லிக்கொண்டு? செயலில் வெளிப்படாத காதலா சொல்லில் வெளிப்படப்போகிறது?

என்னால் அன்பை எழுத முடிந்திருக்கிறது, சொல்ல முடிந்ததில்லை. ஏனென்றால் அன்பைச் சொல்லி முடிக்கும்போது அது ஒரு தகவல் பதிவாய் ஆகிறது. நான் உன்னை நேசிக்கிறேன் என்று மனைவியிடம் சொல்லத் தொடங்கும்போது வாய் கோணிக் கொட்டாவி விடுவதான பாவனையாகப் பிறழ்கிறது எனதன்பின் ஒப்புதல் வாக்குமூலம்.

பாசத்தை வெளிப்படுத்த எளிய வழி ஒன்றைப் பல மொழித் திரைப்படங்களில் கவனித்திருக்கிறேன். பாசத்திற்கு ஆளானவர் தூங்கிக்கொண்டிருப்பார். பாசத்தைப் பொழிபவர் விழித்திருப்பார். முன்னவரின் போர்வை விலகியிருக்கும். பின்னவர் அதைச் சரியாகப் போர்த்தி விடுவார். முன்னவர் சில சமயம் நன்றிக்கடன் போல் புரண்டு படுப்பார். தூங்குபவனுக்கு அன்பு தெரியாமல் போகிறதே என்று எனக்குக்கூட மனம் பதறும். அந்தக் கணத்தில் திரைக்கதையில் இவர்களிடையே அன்பு வலுவாக நிறுவப்படும். இதன் இயங்கியலைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்தேன். போர்வை என்பது மென்மையான, அரவணைக்கும் ஒரு பொருள். அன்பைப் போல. அதனால்தான் அது அன்பிற்கான ஓர் ஆயத்தக் குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது. போர்த்தி விடுகிறானா, அவன் கண்டிப்பாக அவளைக் காதலிக்கிறான் என்பார் பார்வையாளர். தவித்த வாய்க்குத் தண்ணீர் போல் தவித்த உடலுக்குப் போர்வை.

போர்வையின் அழகியலை மட்டுமே கவனித்துவந்த எனக்குத் திடீரென்று அதன் அன்பியலும் புரிந்தது. அதை நிஜ வாழ்க்கையில் பயன்படுத்திப் பார்க்கும் தருணம் ஒன்று நேற்றிரவு வாய்த்தது.

மாலையிலிருந்து மின்சாரம் இல்லை. மின்சார வாரியத்தைத் தொலைபேசியில் அழைத்தால் ‘பிறகு டயல் செய்யவும்’ என்று குரல் கேட்டது. பிறகு டயல் செய்தபோதும் அதைத்தான் சொன்னார்கள். நான்கு மணிநேரத்தில் இன்வர்ட்டர் ஆற்றலை இழந்து கத்த ஆரம்பித்தது. இயந்திரங்களை அணைத்துவிட்டு இருளில் சாப்பிட்டோம்.

தூங்கப் போன இரவு 11 மணி வாக்கில் குடும்பமே புழுங்கிக்கொண்டிருந்தது. எனக்குத் தூக்கம் வரவில்லை. என் மனைவியும் மகனும் இடியே விழுந்தால்கூடத் தூக்கம் கலையாதவர்கள்; ஆனால் ஒரு நிபந்தனை: இடி நேரடியாக அவர்கள் மீது விழக் கூடாது. பால்கனியில் நின்று காற்றாவது வாங்குவோம் என்று எழுந்தபோது கவனித்தேன் – மனைவி போர்த்திக்கொள்ளவில்லை.

நாள் முழுவதும் வியர்வை சிந்தி உழைத்து அது பற்றி ஒரு வார்த்தைகூடப் புலம்பாமல், ஆனால் சம்பந்தமில்லாத வேறு ஆயிரத்தெட்டு விஷயங்களைப் பற்றிப் புலம்பித் தள்ளிய சோர்வுடன் ஒரு தீங்கற்ற நபர் போல் உறங்கிக்கொண்டிருந்த மனைவியைக் கண்டு மனம் நெகிழ்ந்தது. உலகிலேயே மோசமான சைக்கோ கிரிமினல்கள்கூடத் தூங்கும்போது உலக அமைதியில் ஐக்கியமானது போல் தெரிவார்கள் என்பது நிச்சயம். அந்த அமைதியை மனைவியிடம் பார்க்கக் கிடைத்தது. நெகிழ்ச்சியாகவே ஏதாவது செய்ய வேண்டும் போல் தோன்றியது.

டார்ச்சை அடித்துக்கொண்டு வீட்டுக்குள் போர்வையைத் தேடி அலைந்தேன். பீரோவுக்கு மேலிருந்து ஒரு ‘கட்டைப்பை’யைக் கீழே இறக்கினேன். நல்ல கெட்டியான கம்பளிப் போர்வை ஒன்று கிடைத்தது. அதை இரண்டாய் மடித்து மனைவிக்குப் போர்த்திவிட்டேன். பிறகு சம்பிரதாயப்படி மௌன அஞ்சலி போல் இரு நொடிகள் அவரையே பார்த்தேன். நான் எதிர்பார்த்தது போல் அவர் புரண்டு படுக்கவில்லை; ஆனால் இது நிஜ வாழ்க்கை என்று நினைவூட்டிக்கொண்டேன். சீராக வியர்த்துக்கொண்டிருந்தாலும் சிறிது நேரத்திற்குப் பின்பு நானும் படுத்துவிட்டேன். ‘எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை.’

மறுநாள் காலை மனைவி புலம்பினார். பாதி ராத்திரியில் தூக்கம் அரைகுறையாய்க் கலைந்து வியர்த்துக்கொட்டித் தூங்கவே முடியவில்லை என்றார். நல்ல கெட்டியான கம்பளிப் போர்வை அதிகாலை வாக்கில் எப்படியோ விலகி அறையின் மூலைக்கு ஒதுங்கியிருந்தது. ஆனால் தூங்க முடியவில்லை என்று அவர் சொன்னது என் மனதைத் தொட்டது. என் அன்புதான் அவரைத் தூங்க விடவில்லை.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar