ஈக்களைப் பற்றி ஒரு/இரு கவிதை(கள்)

in கவிதை

நாற்காலியின் கைதாங்கியில் ஒரு ஈ
நான் அமர வந்ததும் பறந்துபோகிறது
நான் என்னப்பா செய்துவிடப்போகிறேன் உன்னை?

*

நீ பாட்டுக்கு உட்காரு
எனக்கு ஒரு வேலை இருக்கிறது
அதை இப்போது செய்யப்போகிறேன்
(உன்னை மாதிரி ஃப்ரீயல்ல நான்)
இதன் பெயர் கணினி, இது விசைப்பலகை
நான் என்ன எழுதுகிறேன் என்று பாரு
புரிகிறதோ புரியவில்லையோ
அதுவும் ஓர் அனுபவந்தானே.
எத்தனை ஈக்களுக்குக் கிடைக்குமிவ்வாய்ப்பு?
பார்த்துச் சலித்த பின்
வந்த வழியே பறந்து செல்லலாம்
புதிய அனுபவத்தை நண்பர்களோடு பகிரலாம்
சற்று முன்பு நான் பார்த்த ஒரு பெரிய ஜந்து
எதிலோ அமர்ந்து என்னவோ செய்தது
அதை நிறுத்தாமல் வேகமாகச் செய்துகொண்டிருந்தது
பார்க்க முட்டாள்தனமாக, வேடிக்கையாக இருந்தது
அடிபடாமல் பிழைத்து வந்துவிட்டேன்
நீங்களும் சும்மா போய்ப் பார்த்து வாருங்கள்
என்று பெருமிதமாய்ச் சொல்லிக்கொள்ளலாம்.

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar