சுவாசம் சீராக இருக்க வேண்டும்

in கட்டுரை

எழுதும்போது சுவாசம் சீராக இருக்க வேண்டும். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கக் கூடாது. அப்படி வாங்கினால் நீங்கள் உணர்ச்சிவயப்பட்டிருக்கிறீர்கள் என்று பொருள். இந்த மாதிரி மனநிலையில் எழுதுவது இலக்கியமாகாது. எழுத்தில் உணர்ச்சியும் ஒரு பகுதியே. எனினும் மூச்சு வாங்கும் அளவுக்கு உணர்வெழுச்சி கூடாது.

காஃப்கா, செக்காவ் போன்ற பல மகத்தான எழுத்தாளர்களுக்கு ஆஸ்துமா, காசநோய் உள்ளிட்ட நுரையீரல் நோய்கள் இருந்திருக்கின்றன. ஆனால் அவர்கள் காஃப்கா, செக்காவ் போன்ற மகத்தான எழுத்தாளர்கள். நீங்கள் அவர்களில் ஒருவர் அல்ல (அப்படி இருந்தால் வணக்கம்). உங்களுக்கு ஆஸ்துமா, காசநோய் இருந்தால் எழுதுவதற்கு முன்பு அவற்றுக்கு சிகிச்சை பெறுங்கள்.

இந்தியாவின் மருத்துவச் சுற்றுலா மையமான தமிழகத்தில் நுரையீரல் நோய்களுக்கு நல்ல சிகிச்சை கிடைக்கிறது. தாம்பரம் சானடோரியத்தில் காசநோய்க்கு அதிக செலவில்லாத நல்ல சிகிச்சை அளிக்கிறார்கள். தனியார் மருத்துவர்களே விரைவில் குணமாக்கிவிடுவார்கள். எனக்கு ஒரு மாதம் சளி இருந்தது. ஒரு தனியார் மருத்துவரைப் பார்த்தேன். நுரையீரல் தொற்று என்று இரண்டு வாரத்திற்கு மருந்து எழுதிக் கொடுத்தார். பக்கவிளைவுகள் இல்லாமல் குணமானேன். முதலில் நுரையீரல், பிறகு இலக்கியம் – அப்படி வைத்துக்கொள்ளுங்கள்.

நுரையீரல் வியாதிக்குச் சிகிச்சை பெறும் காலத்தில் உங்களுக்குத் திறமை இல்லை என்று திடீரென உறைத்து இனி எழுத வேண்டாம் என முடிவு செய்தால், அதன் பின்னர் சிகிச்சையைத் தொடர்வதும் தொடராததும் உங்கள் விருப்பம். ஏனென்றால் எதுவும் எழுதாமல் இருந்துகொண்டு என்னத்திற்கு ஆரோக்கியம் என்று சிலர் நினைக்கலாம். நம்மால் அதனுடன் வாதம் புரிய முடியாது. நாம் காஃப்கா, செக்காவ் மாதிரியா என்று கண்டுபிடிக்க வழியே இல்லை.

உங்களுக்கு இரண்டு நுரையீரல்களும் முழுமையாகப் ‘போய்விட்டது’ என்றால் வேறு வழியின்றி எழுத்துத் துறையிடமிருந்து நிரந்தரமாக விடைபெறுங்கள். அடுத்து உறவினர்கள், நண்பர்கள், மற்றும் நீங்கள் செத்தால் வருத்தப்படக்கூடிய யாரிடமிருந்தும். மூச்சே வரவில்லை என்றால் என்னத்தை எழுத முடியும், இல்லையா?

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar