‘பெரும்பாலும் குறுங்கவிதைகள்’ முன்னுரை

in கட்டுரை, கவிதை

ஒருவரைக் கவிதை எழுதத் தூண்டுவது எது? உலகின் முன்னணி கிரிமினாலஜிஸ்ட்டுகள் கேட்கும் கேள்வி இது. என்னைப் பொறுத்த வரை, சிலர் பிறக்கும்போதே கவிஞர்களாகப் பிறந்துவிடுகிறார்கள். சிலர் சமூகச் சூழ்நிலைகளால் அப்படி ஆகிறார்கள். சிலருக்கு முன்பே கிரிமினல் ரெக்கார்டு இருக்கிறது. நான் கவிஞனாகப் பிறக்கவில்லை என்றே நினைக்கிறேன் (எப்படியும் அந்த வயதில் கண்டுபிடிப்பது கடினம்).

எனக்கு எதுவும் செய்ய வராது என்று நான் உணர்ந்தபோது என் ஆசிரியர் லோகையாதான் எழுத்துத் துறைக்கு என்னைத் திருப்பி விட்டார். எழுத்தின் எளிமையான வடிவங்களிலிருந்து சிரமமான வடிவங்களுக்குப் படிப்படியாக முன்னேறு என்று அவர் கூறினார். அதாவது கவிதை > சிறுகதை > குறுநாவல் > நாடகம் > நாவல் > வீட்டுக்கணக்கு என்னும் வரிசையில். நான் கவிதையில் தொடங்கி நாவல் வரை வந்து நிறுத்திக்கொண்டேன். வீட்டுக்கணக்கு எழுத ஒருவரைத் திருமணம் செய்துகொண்டேன் (சமைக்க, குழந்தை பெற்றுப்போட, மற்றும் உடல் இச்சைக்குத் திருமணம் செய்துகொள்ளும் ஆணாதிக்கவாதிகளிடமிருந்து இப்படித்தான் வேறுபடுகிறேன்).

எத்தனையோ எழுத்து வடிவங்களில் ஈடுபட்டாலும் கவிதைதான் எனக்கு முதல் காதலி. தொண்ணூறுகளில் நான் கவிதை எழுத வந்தபோது எனக்கு முன்பு சுமார் ஐம்பது லட்சம் பேர் கவிதை எழுதிக்கொண்டிருந்தார்கள் (அப்போது அது பெரிய எண்ணிக்கை). ரங்கநாதன் தெருவில் நுழைந்தது போல் இருந்தது. இருந்தாலும் ஒரு கை குறைவதாகத் தோன்றியது. அது என்னுடையதுதான். எனவே நான் தீவிரமான எண்ணிக்கையில் கவிதைகள் எழுதத் தொடங்கினேன்.

தெருவில் யாரை வேண்டுமானாலும் நிறுத்தி “கவிதை எழுதுவதைவிடச் சுலபமான விஷயம் ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்டுப்பாருங்கள். அவ்வளவு ஏன், எந்த வீட்டுக்குள்ளும் புகுந்து கேளுங்கள். பதில் கிடைக்காது. ஏனென்றால் இல்லை. “வெந்நீர் வைக்கவே திண்டாட்டமா, கவிதை எழுதிப்பார்” என்பார் லோகையா சார்.

சிலர் கவிதை என்றால் கம்பசூத்திரம் என்று நினைக்கிறார்கள். எழுதினால் அப்படித் தோன்றாது. படித்தால் தோன்றலாம். ஆனால் படிப்பானேன்? நீங்கள் படிக்கும் ஒவ்வொரு கவிதைக்கும் தலா ஒரு கவிதையை இழக்கிறீர்கள் – இது வேலைக்கு ஆகாது. காரணம், அந்த நேரத்தில் நீங்கள் உங்கள் சொந்தக் கவிதையை எழுதலாம். தமிழுக்கு நிறைய கவிதைகள் தேவை. ஏன் தெரியுமா?

ஒரு கவிதை எழுதப்படும்போது ஒரு நிஜமான குற்றம் நிகழாமல் தடுக்கப்படுகிறது. ஒரு கவிஞன் உருவாகும்போது ஓர் அரசியல்வாதி, ஒரு கொலைக் குற்றவாளி, ஒரு மெல்லமாரி, ஒரு திருடன் உருவாகாமல் தடுக்கப்படுகிறான். கவிதை எழுதுவதை ‘thought crime’-ஆகக் குற்றவியல் நிபுணர்கள் கருதினாலும், கவிதை ஓர் ஆயுதமாகக் கருதப்படாதிருக்க, சட்டபூர்வமான நடவடிக்கையாக மிஞ்சியிருக்க அதன் நிவாரண குணமே காரணம். இதனால்தான் எல்லோரும் கவிதை எழுத வேண்டும். இதற்காகத்தான் இந்தத் தொகுப்பை எழுதினேன், எழுதிக்கொண்டிருக்கிறேன், இனியும் எழுதுவேன்.

பேயோன்
05-08-2015

Tags: , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar